வித்யா பாலன் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சகுந்தலா தேவி - விமர்சனம்

சகுந்தலா தேவி - விமர்சனம்

பட மூலாதாரம், Amazon Prime

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

மனித கம்ப்யூட்டர்' என்று அழைக்கப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்வை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் 'சகுந்தலா தேவி'.

அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், மகள் அனுபமாவின் பார்வையில் சகுந்தலா தேவியின் வாழ்வை சொல்கிறது.

சகுந்தலா தேவியின் மகள் அனுபமா, தன் தாய் மீது லண்டனில் வழக்குத் தொடர்வதில் துவங்குகிறது கதை. பிறகு நிகழ்காலமும் கடந்த காலமுமாக அந்த மேதையின் வாழ்க்கை விரிகிறது. பெங்களூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறக்கும் சகுந்தலா தேவியின் மேதமையை சிறுவயதிலேயே கண்டுகொள்ளும் தந்தை, அவரை வைத்து கண்காட்சிகளை நடத்தி பணம் சம்பாதிக்கிறார். வழக்கமான குழந்தைப் பருவத்தை இதனால் இழக்கும் சகுந்தலா தேவி, தன் மீது அக்கறையில்லாத குடும்பத்தை வெறுக்க ஆரம்பிக்கிறார். குறிப்பாக தன் தாயை மிகவும் வெறுக்கிறார்.

வளர்ந்த பிறகு, தான் நினைத்ததையெல்லாம் அடைய நினைக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு, தன் குழந்தை மீது அதீதமான அன்பை வெளிக்காட்டுவதாக நினைத்து தான் செல்லும் இடங்களுக்கும் நாடுகளுக்கும் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்ல, அந்தக் குழந்தை தன் வழக்கமான குழந்தைப் பருவத்தை இழந்ததாகக் கருதுகிறாள்.

இப்படி இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த, இரண்டு பெண்கள் தங்கள் வழக்கமான குழந்தைப் பருவத்தை இழந்து, அதற்குக் காரணமான தத்தம் தாய்மார்களை வெறுக்கிறார்கள். இறுதியில் அவர்களைப் புரிந்துகொள்கிறார்கள்.

ஒரு கணித மேதையின் கதை எனும்போது, அதனை சுவாரஸ்யமான திரைக்கதையாகச் சொல்வது சவாலான காரியம்தான். சகுந்தலா தேவி கணிதப் புதிர்களை விடுவிப்பதை எந்த அளவுக்குத் திரையில் சுவாரஸ்யமாகச் சொல்லிவிட முடியும்? ஆனால், இந்தப் படத்தில் அதனை முடிந்தவரை முயன்று, பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சகுந்தலா தேவி புதிர்களை விடுவிக்கும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதம், இம்மாதிரி கணிதப் புதிர்களை விடுவிக்கும் காட்சிகள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடாதா என்று நினைக்கவைக்கிறது.

சகுந்தலா தேவி - விமர்சனம்

பட மூலாதாரம், Amazon Prime

ஆனால், படத்தின் மையம் என்பது சகுந்தலா தேவி எப்படி கணிதப் புதிர்களை விடுவித்தார், எப்படி எண்களைப் புரிந்துகொண்டார் என்று சொல்வது அல்ல. மாறாக, சகுந்தலா தேவியின் அறியப்படாத மற்றொரு பக்கத்தைச் சொல்வதுதான். படம் பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் சகுந்தலா தேவியை வெறுக்கக்கூடும். சகுந்தலா தேவியின் சாதனையை பின்னுக்குத் தள்ளி, அவரது சொந்த வாழ்வை இம்மாதிரி முன்வைப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், படம் முடியும்போது ஒரு நிறைவை அளிக்கிறது.

சகுந்தலா தேவியாக வரும் வித்யா பாலனுக்கு அவரது சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஒரு கட்டத்தில் வித்யா பாலன் என்பதே மறந்துபோய் சகுந்தலா தேவிதான் நிற்கிறார். அவரது மகளாக வரும் சான்யா மல்ஹோத்ராவும் சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார்.

கணித மேதை ஜான் நாஷின் வாழ்வை அடிப்படையாக வைத்து வெளிவந்த A Beautiful Mind திரைப்படம், அவருக்கு இருந்த மனச்சிதைவு நோய், அதனால் அவரது வாழ்வில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றையும் விரிவாகச் சித்தரிக்கும். அந்தப் படத்தில் ஜான் நாஷ் மீது நமக்கு ஒருபோதும் எதிர்மறை எண்ணம் ஏற்படாது. இந்தப் படத்தில் சகுந்தலா தேவி மீது சில சமயங்களில் எதிர்மறையான எண்ணம் ஏற்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: