ஏவுகணைகள் வீசி 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுத்த வட கொரியா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலை நோக்கி 3 குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து 2022-ம் ஆண்டுக்கு வடகொரியா விடை கொடுத்துள்ளது.
தென் கொரிய வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்களை அனுப்பி வைத்த 5 தினங்களில் இந்த ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது. 2017க்குப் பிறகு இத்தகைய நடவடிக்கையில் வட கொரியா இறங்கியது இது முதல் முறை.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2022ம் ஆண்டில்தான் வடகொரியா மிக அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளால் தனக்கோ, தனது கூட்டாளிகளுக்கோ எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு தெற்கே, வடக்கு ஹூவாங்கே மாகாணத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு 3 குறுகிய தூர ஏவுகணைகளும் செலுத்தப்பட்டிருப்பதாக தென்கொரிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
"வட கொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தின் அமைதியையும், நிலைத்தன்மையையும் சீர்லைக்கக் கூடிய ஆத்திரமூட்டும் செயல்," என்றும் தென்கொரியா கூறியுள்ளது.
வடகொரியா பரிசோதித்த ஏவுகணைகள் சுமார் 350 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரு ஏவுகணை கடலில் விழுந்ததாக ஜப்பான் கடலோர காவல் படை முன்னதாக கூறியிருந்தது.
தனது எல்லைக்குள் வட கொரியா அனுப்பிய 5 ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்த தவறியமைக்காக தென்கொரியா அண்மையில் மன்னிப்பு கோரியிருந்தது.
தலைநகர் சோலுக்கு நெருக்கமாக பறந்த ஓர் ஆளில்லா விமானத்தை மட்டும் எச்சரிப்பதற்காக சுட்ட தென்கொரியா, பின்னர் அதனை சுட்டு வீழ்த்த போர் விமானங்களையும், தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்தது.

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளுடன் நெருங்கிய தொடர்புடைய அந்நாட்டின் 3 உயர் அதிகாரிகள் மீது அமெரிக்காவும், அதன் ஆசிய கூட்டாளிகளும் இம்மாத தொடக்கத்தில் தடைகளை விதித்தன.
தென் கொரியாவில் கடந்த மே மாதம் யோன் சுக்-யோல் தலைமையிலான பழமைவாத அரசு பதவியேற்ற பிறகு வடகொரியா - தென் கொரியா இடையிலான உறவு மோசடைந்துள்ளது. வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க அவர் உறுதியளித்துள்ளார்.
வட கொரியாவில் கிம் ஜாங்-உன் தலைமையேற்றதும், அவரே ஆயுத திட்டங்களை நேரடியாக கண்காணித்து, உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார்.
வட கொரியாவை அணுஆயுத நாடாக அண்மையில் அறிவித்த அவர், அணுஆயுத நாடு என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்கவே முடியாது என்று உறுதிபடக் கூறினார். உலகின் மிக சக்தி வாய்ந்த அணு ஆயுதப் படைகளை வடகொரியா கொண்டிருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் கிம் ஜாங் உன் வெளிப்படுத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























