அயோத்தி ராமர் கோவில் - தமிழ்நாட்டு முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?
பாபர் மசூதி இடிப்புக்கு பின், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சர்ச்சை 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முடிவுக்கு வந்தது.
பாபர் மசூதி இடிப்பை மோசமான விதிமீறல் என்று கூறியநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு வழங்கியது. அருகில், முஸ்லிம்களுக்கு வேறு ஒரு நிலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து தமிழக முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். கோவில் மேல் வருத்தம் இல்லை, ஆனால் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்கிறார்கள். கோவிலுடன் சேர்த்து மசூதியும் கட்டப்பட்டிருந்தால், முஸ்லிம்களும் மகிழ்ச்சியுடன் வந்திருப்போமே என்கின்றனர்.
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மதிக்கும் அதேநேரம், தங்களுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களின் கண்ணீரால் உருவாக்கப்பட்ட கட்டடமாக பார்க்கிறோம் என்கின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சதக்கத்துல்லா கூறும் போது, “இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மதிக்கிறோம். ஆனால் அதேநேரம் எங்களது உரிமை பறிக்கப்பட்டதாகவே கருதுகிறோம். காசி, மதுரா என பல்வேறு இடங்களில் இருக்கும் 3000க்கும் மேற்பட்ட இறை இல்லங்களை இடிக்கப் போவதாக சங் பரிவார் அமைப்புகள் கூறுகின்றன. அது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகம் இதை கண்காணிக்க வேண்டும். நாங்கள் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம் என்று நம்புகிறோம். எங்களது வழிபாட்டு உரிமை எங்களுக்கு வேண்டும்” என்றார்.

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்ணான மும்தாஜ், இது முழுக்க முழுக்க ஒரு சமூகத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம், அநீதி என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “இது 100% அரசியல். ராமரும் பாபரும் இல்லை என்றால் பாஜக என்ற கட்சியே கிடையாது. ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல் செய்வதற்காக அவர்கள் வகுத்த விஷயம் தான் இது. இதில் அவர்களுக்கு ராமர் மீது எந்த பக்தியும் இருப்பதாக நான் கருதவில்லை. ஒரு மதத்தின் வழிபாட்டு தலத்தை அழித்து விட்டு, கோவில் கட்டுவதை ராமரும், அனுமருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த யாசர், "ராமர் கோவில் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை. சரி இதே போல பிற மசூதிகள் அல்லது தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி இந்துத்துவா அமைப்பினர் ஆக்கிரமிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படியென்றால் அதையும் இந்த சமுதாயம் எளிதாக கடந்து சென்று விடுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
மேலும், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதால்தான் நம்மால் பல முன்னேற்றங்களைக் காண முடிந்தது. மதத்தை விடுத்து அறிவியலை தேர்ந்தெடுத்ததால் கிடைத்த முன்னேற்றம் அது. அதை மறந்து விடக் கூடாது" என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு இஸ்லாமியரான நிஷானா, “இஸ்லாமியர்களின் கண்ணீரால் உருவாக்கப்பட்ட கட்டடமாகவே நாங்கள் இதை பார்க்கிறோம். அந்த கட்டடத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அங்கு கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் நினைவுக்கு வருகிறது” என்றார்.
"சிறிதும் நியாயமற்ற முறையில் ஒரு பள்ளிவாசலை இடித்து கட்டப்பட்ட ராமஜென்ம பூமியில் நீங்கள் திறப்பு விழாவை கொண்டாடுகிறீர்கள் என்றால், இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு துளியும் மகிழ்ச்சி இல்லை" என்கிறார் அப்துல் ரஹீம்.
மேலும், "எல்லோரும் அமைதியாக இருப்பதால், முஸ்லிம்கள் இதை அங்கீகரித்து விட்டார்கள் என பிரதமர் சொல்கிறார், ஆனால் அது உண்மை இல்லை. எந்தவொரு உண்மையான முஸ்லிமும் இதை அங்கீகரிக்க மாட்டார்" என்கிறார் அவர்.
மதுரையைச் சேர்ந்த நவாஸ் ராமர் கோவில் சரியா தவறா என்று கேட்பதை விட இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளதா என்று கேட்க வேண்டும் என்கிறார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கு வேறு வழி உள்ளதா ? ராமர் கோவில் சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி, முதலில் முஸ்லிம்கள் இந்த நாட்டில் பயமின்றி, நிம்மதியாக வாழ என்ன வழி என்று பார்ப்போம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் வட இந்தியாவில் நிலைமை வேறு அல்லவா. முடிந்ததைப் பற்றி பேசாமல், வெறுப்பு அரசியலுக்கு என்ன முடிவு என்பதைத் தான் சிந்திக்க வேண்டும்" என்றார்.

"அவசர அவசரமாக ஒரு கோவிலைக் கட்டி, அதற்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து திறப்புவிழா நடத்துகிறார்கள். தலித், இஸ்லாமியர்கள் என பல பிரிவினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். குடியரசு தலைவர் கூட புறக்கணிக்கப்படுகிறார். கோவிலோடு சேர்த்து அந்த மசூதியையும் கட்டியிருக்கலாம் அல்லவா. நாங்களும் சந்தோஷமாக அங்கு வந்திருப்போமே" என்கிறார் அப்துல் ஹக்கீம்.
"கோவையில் உள்ள பல கோவில்களின் குடமுழுக்குகளில் இஸ்லாமியர்களும் பங்கேற்கிறார்கள். அந்த மாதிரி ஒரு விழாவாக இது இருந்திருக்க வேண்டும்" என்கிறார் அவர்.
தமிழ்நாட்டு இந்து சகோதரர்கள் ராமர் கோவிலை கொண்டாடவில்லை என்பது தங்களுக்கான ஆதரவு என்று கூறுகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த பீர்குட்டி. அவர் நம்மிடம் பேசுகையில், "பாபர் இருந்த இடத்தில் இப்போது ராமர் இருக்கிறார். ஒரு சமூகத்தின் வழிபாட்டு தலத்தை இடித்து, பல உயிர்களை பலி வாங்கி அதில் ஒரு வழிபாட்டு தலம் கட்டுவது கொண்டாட்டமான விஷயம் என்றால், சரி சந்தோஷமாக கொண்டாடுங்கள். ஆனால் தமிழ்நாட்டில் எங்களை சகோதரர்களாக மதித்து பழகும் பல இந்துக்கள் இதை கொண்டாடவில்லை. அது போதும்" என்றார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



