எதிர்ப்புக்கு நடுவே வசூலில் 'வரலாறு படைத்த' பதான் - பாலிவுட் மீண்டு வர உதவுமா?

பட மூலாதாரம், YRF
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை, ரசிகர்களும் திரையுலக விமர்சகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், முதல் நாள் வசூல் 100 கோடியைத் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ளார். படம் திரையரங்குக்கு வருவதற்கு முன்பே அது தொடர்பான விவாதங்கள் தொடங்கின.
புதன்கிழமையன்று வெளியான ‘பதான்’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையப் போவதாக திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சிலர் படத்தின் கதைக்களத்தை தேவையற்றது, அபத்தமானது என்று விமர்சித்தாலும், மற்றவர்கள் ஷாருக்கான் தனது மேஜிக்கை திரையில் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் எனக் கூறுகிறார்கள்.
திரைப்பட விமர்சகர் சுப்ரா குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸில், “பாலிவுட் மீண்டும் வந்துவிட்டது. ஷாருக்கான் மீண்டும் வந்துள்ளார்,” என்று எழுதியுள்ளார்.
பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்ற நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம், பதான் என்ற கதாபாத்திரத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் பாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். படத்தில், பதான் ஓர் உளவுத்துறை வேலையில் இருக்கிறார். ஒரு பயங்கரவாதக் குழு இந்தியாவை தாக்குவதைத் தடுப்பதே அவருடைய வேலை.
திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷின் கூற்றுப்படி, படம் உலகம் முழுவதும் 8000 திரைகளில் வெளியிடப்பட்டது. பாலிவுட் படங்களில் மிகப்பெரிய ஓபனிங் இது.
இந்தியாவில் பதானின் முதல் நாள் வசூல் 57 கோடி என்று பிரபல திரைப்பட வர்த்தக விமர்சகர் கோமல் நஹ்தா தெரிவித்தார்.
“இந்தி படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய ஓபனிங். அதுவும் விடுமுறை இல்லாத நாளில் வந்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.
படம் பார்த்த மக்களிடையே பொதுவாக படம் திருப்தியாக இருப்பதாகக் கூறினாலும், மக்களிடையே படம் குறித்து கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
படத்தைப் பார்த்த ஒருவர் பிபிசியிடம், “ஷாருக்கான் நடிப்பு, சல்மான் கானின் அறிமுகம், தீபிகாவின் அற்புதமான நடனம் அனைத்தும் நன்றாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பார்க்கக்கூடிய முழுமையான குடும்பப் படம்,” என்று தெரிவித்தார்.
மற்றொரு பார்வையாளர், "படத்தின் அனைத்து வசனங்களும் நன்றாக இருந்தன,” எனக் கூறினார்.
சில பார்வையாளர்களுக்கு திரைக்கதையும் வசனங்களும் பிடிக்கவில்லை. ஒருவர், “இதுவொரு சராசரி படம். இதில் இருப்பவர்க்ள் பார்க்க அழகாகத் தெரிகிறார்கள். ஆனால், படம் அவ்வளவு அழகாக வரவில்லை. கதை, திரைக்கதை, சரியில்லை,” என்றார்.

பட மூலாதாரம், YRF
ஆனால், இந்தத் திரைப்படத்தைப் பார்க்க மக்கள் ஆவலோடு இருப்பதைக் கருத்தில் கொண்டு கூடுதல் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்ததாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
வட இந்தியாவில் கோவிட் பேரிடரின்போது மூடப்பட்ட 25 ஒற்றைத் திரை கொண்ட திரையரங்குகள் ‘பதான்’ படத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டதாக, புதன்கிழமையன்று ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுமட்டுமின்றி, முன்பதிவு விஷயத்திலும் பதான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. டிக்கெட் பதிவு செய்யும் தளமான புக் மைஷோ பிடிஐ செய்தி முகமையிடம், இந்தத் திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு அமோகமாக இருப்பதாகவும் திங்கட்கிழமை வரையிலான டிக்கெட்களில் ஏற்கெனவே 10 லட்சத்திற்கு அதிகமானவை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?
படத்திலுள்ள இடைவிடாத ஆக்ஷன், கவர்ச்சியான நட்சத்திரங்கள் தவிர, உலகைக் காப்பாற்றக்கூடிய ஒரு ஹீரோ என்ற முன்னணி கதாபாத்திரத்தில் ஷாருக்கான் இருக்கிறார் எனக் கூறுகிறார் சுப்ரா குப்தா. மேலும், இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும், உணர்ச்சிகரமான காட்சிகளும் இதில் உள்ளன என்கிறார்.
திரைப்பட விமர்சகர் தீபாஞ்சனா பால், திரைப்படங்களைப் பொறுத்தவரை பதான் இன்றைய இந்தியாவின் ஹீரோ என்று வர்ணித்துள்ளார். அவர் தனது கதாபாத்திரத்தில் ஒரு புதிய, மாறுபட்ட அடையாளத்தை விட்டுச் செல்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், YRF
மேலும், “காதல் கதாநாயகனின் இடத்தை இப்போது ஒரு முதிர்ந்த, கடினமான மனிதர் பிடித்துள்ளார். அவர் தனது பொறுப்புகளை, சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தடைகளைக் கடந்து நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தின் சில பகுதிகள் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் கற்பனையாகவும் இருப்பதாகச் சிலர் உணர்கின்றனர்.
மிண்ட் லவுஞ்ச் நாளிதழில் உதய் பாட்டியா, இந்த உளவு தொடர்பான திரைப்படத்தில் பொழுதுபோக்கு காட்சிகள் அபத்தமாகும் அளவுக்கு அதிகமாக இருப்பதாக எழுதியுள்ளார்.
சண்டைக்காட்சிகள் மிகவும் வழக்கமானவையாக இருப்பது, படத்தின் த்ரில் காட்சிகள், ஆகியவை திரைக்கதையை விட்டு விலகுவதைப் போல் இருப்பதாக திரைப்பட விமர்சகர் நந்தினி ராம்நாத் கூறியுள்ளார்.
அவர் ஸ்க்ரோலில், “பதான் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வரும்போதும் அப்பாஸ் டைரேவாலாவின் சக்திவாய்ந்த வசனங்களை ஹீரோ பேசும்போதும்தான் படம் மீண்டும் அதன் திரைக்கதைக்குத் திரும்புகிறது,” என்று எழுதினார்.
இந்தப் படம் குறித்த ரசிகர்களின் கொண்டாட்டமும் குறையவில்லை. திரையில் ஷாருக்கை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆடுவதும் துள்ளிக் குதிப்பதும் சினிமா அரங்குகளில் எடுக்கப்பட்ட பல காணொளிகளில் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், YRF
முதல் நாளிலேயே 100 கோடியைத் தாண்டியதா?
படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ், “படம் இந்தி மொழியில் வெளியான முதல் நாளில் 55 கோடி ரூபாயும் இந்தியாவின் பிற மொழிகளில் 2 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் திரையிடப்பட்டதில் 4.5 மில்லியன் டாலர்களை(சுமார் 36.6 கோடி ரூபாய்) ஈட்டியது,” எனக் கூறுகிறார்.
பதான் படத்தின் உலக அளவிலான தொடக்க நாள் சாதனையாக முதல் நாளில் 106 கோடி ரூபாயைச் சம்பாதித்து, மற்ற இந்தி திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளி வரலாறு படைத்துள்ளது.
ஷாருக்கானுக்கு நெருக்கமான திரைப்பட இயக்குநர் கரன் ஜோஹர், 100 கோடியைத் தாண்டிய ‘பதான்’ படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ரயீஸ் படத்தில் ஷாருக்கானுடன் பணியாற்றிய ஜீஷன், 95 பார்வையாளர்கள் கலந்துகொண்ட லேட் நைட் ஷோவை தான் பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும், ஜான் ஆப்பிரகாம் தனது கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளியிப்படுத்தியிருப்பதாகக் கூறியவர் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“பதான் குறித்து நல்ல செய்திகள் வருகின்றன. வாழ்த்துகள் பதான்,” என்று ஷாருக்கானுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், YRF
'பதான்' படத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்வது ஏன்?
இந்தத் திரைப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், ஆரம்பம் முதலே சர்ச்சைகளிலும் சிக்கி வருகிரது. புதன்கிழமையன்று திரையிடப்பட்ட நேரத்தில் சில இடங்களில் வன்முறைகளும் அரங்கேறின.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் படம் திரையிடுவதைத் தடுத்து நிறுத்தி, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானாவில் வலதுசாரி குழு ஒன்று வணிக வளாகத்தில் போஸ்டர்களை கிழித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘பதான்’ படம் வெளியாவதற்கு முன்பே இந்து குழுக்களின் தாக்குதலுக்கு அந்தத் திரைப்படம் உள்ளானது.
தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து காட்சியளித்த பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவி நிறம் தங்கள் மதத்துடன் தொடர்புடையது எனக் கூறியதோடு வலதுசாரி குழுக்கள், ஷாருக்கான் இந்துக்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டின.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























