You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நவீன ராபின்ஹூட்: ஆஸ்திரேலியா தொடங்கி அமெரிக்கா, பிரிட்டன் வரை ஏழைக்கு உதவும் இவர் யார்?
- எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
- பதவி, பிபிசி நியூஸ், சிட்னி
- பிரசுரிக்கப்பட்டது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கறிஞர் ஜோர்டான் வான் டென் பெர்க், ரியல் எஸ்டேட் முகவர்களை கேலி செய்யும் வீடியோக்களை உருவாக்கிய, பலராலும் அறியப்படாத டிக் டாக் படைப்பாளி.
ஆனால் இன்று 28 வயதான அவர் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான சமூக செயல்பாட்டாளர்களில் ஒருவர்.
‘பர்ப்பிள் பிங்கர்ஸ்’ (Purple Pingers) என்ற பெயரின் கீழ் வீடியோக்களை பதிவிட்டு வரும் அவர், ஆஸ்திரேலியாவில் வாடகை குறித்த அதிர்ச்சியூட்டும் சூழல், நில உரிமையாளர்களின் மோசமான நடத்தை மற்றும் அரசாங்கத்தின் தோல்விகளை சுட்டிக்காட்டி, வீட்டு வசதி தொடர்பான நாட்டின் நெருக்கடியை கூறிவருகிறார்.
இது அவரது விழிப்புணர்வு பாணி அணுகுமுறை. மக்கள் குடியிருப்பதற்கு காலியாக உள்ள வீடுகளைக் கண்டறிய உதவுவது மற்றும் பொது தரவுத்தளத்தில் மோசமான வாடகைகளை அம்பலப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இந்த பாணி அவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது.
வாடகை வீடு தேடுபவர்களுக்கான நவீன ராபின்ஹூட் என சிலர் அவரை அழைக்கின்றனர்.
ஆனால், அவருடைய வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைகள் அவருக்கு எதிரிகளையும் கொடுத்துள்ளது.
தலைவிரித்தாடும் வாடகைத் தொல்லை
ஆஸ்திரேலியாவில் வீட்டுவசதி நெருக்கடியில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட எல்லாமே தவறாகிவிட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வீட்டை வாங்குவது விண்ணை முட்டும் அளவுக்கு செலவுகரமானதாக உள்ளது. ஏற்கனவே வாடகை சந்தையிலும் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மேலும் இடைவெளிகளை நிரப்ப போதுமான வீடுகள் எங்கும் இல்லை.
இந்த நெருக்கடியால் வீட்டு வாடகை அதிகரித்துள்ள அதேசமயம், காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, பல ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பற்ற, கட்டுப்படியாகாத, நெரிசலான அல்லது பாதுகாப்பற்ற வீடுகள் - அல்லது வீடற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
இதனால், மிக மோசமான நெருக்கடியை சந்தித்திருப்பது இளைஞர்கள் மற்றும் மிக எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். வான் டென் பெர்க் நிலைமையைச் சுருக்கமாகக் கூறுகிறார்.
அவர் கூறுகையில், "முன்பு உண்மையிலேயே தாராளமான வீட்டுக் கொள்கையால் பயனடைந்த வயதானவர்கள் இருந்தனர். ஆனால், அந்த பயன்கள் கிடைக்காதபடி இளைஞர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்" என்கிறார் அவர்.
அவர் தற்போது வீட்டு உரிமையாளராகவும் உள்ளார். ஆனால், தான் தனிச் சலுகைகளால் பயனடைந்த பின்னணியிலிருந்து வந்ததாக அவர் உடனேயே ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், வாடகை வீடு எடுப்பது எவ்வளவு சிரமம் என தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறுகிறார்.
"ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்ததும் எனக்கு உண்மையில் கோபம் வந்தது," என்று அவர் மெல்போர்னில் இருந்து பிபிசியிடம் கூறுகிறார்.
அதனால் அவர் ரியல் எஸ்டேட் முகவர்கள் குறித்து ஆன்லைனில் கேலி செய்யத் தொடங்கினார். பள்ளி மாணவராக இருந்தபோது தான் பயன்படுத்திய உற்சாக மாத்திரையான (Ecstacy tablets) பர்ப்பிள் பிங்கர்ஸ் (Purple Pingers) எனும் பெயரிலான சமூக ஊடகக் கணக்கிலிருந்து பதிவிட்டு வந்தார்.
அப்பெயருக்காக அவர் தற்போது “மிகவும்" வருத்தப்படுகிறார். அவர் தன் வீடியோக்களில் தேசிய mளவில் வாடகைக்குக் கிடைக்கும் வீடுகள் குறித்து, முக பாவனைகளை சீரியசாக வைத்துக்கொண்டு நகைச்சுவை கூறுதல், கிண்டலான விமர்சனங்கள், பாடல்கள் போன்றவற்றை வழங்குகிறார்.
அவரது டிக்டாக் வீடியோக்கள் பல, சங்கட உணர்வை தரும் வகையிலேயே உள்ளன. வீடியோவில் சிறிய மைக் ஏதேனும் ஒரு பொருளில் பொருத்தப்பட்டு, அதில் பேசுவதும் வெற்றி பெற்றது. விரைவிலேயே, மற்றவர்களும் தங்களின் அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஆனால், பலவற்றை அவரால் தொடர முடியவில்லை.
"இணையத்தில் யாரோ ஒரு வெள்ளைக்காரர் மற்றவர்களின் கதைகளை சொல்வது சரியல்ல என நான் நினைத்தேன். நீங்கள் யாராக இருந்தாலும், பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் உங்கள் சொந்தக் கதையைச் சொல்ல வேண்டும்" என்கிறார் அவர்.
இதன் காரணமாக, "ஷிட் ரெண்டல்ஸ்" (Shit Rentals) எனும் தரவுத்தளம் பிறந்தது. இதனால் பெயர் தெரியாத 3,000க்கும் மேற்பட்ட நபர்கள், வீடுகளில் வெளியே தெரியும் மின் வயரிங், சிதைந்த சுவர்கள், விரிசல் கொண்ட தரைகள், அவ்வப்போது முளைக்கும் காளான் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்கூட்டியே தெரிவிக்காமல், சட்ட விரோதமான முறையில் வீடுகளுக்கு வரும் நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் முகவர்களின் இனவெறி மற்றும் அத்தியாவசியமாக வீட்டில் பழுதுபார்க்க வேண்டியது குறித்து கேட்டதற்காக வெளியேற்றப்பட்ட எண்ணற்ற மக்கள் குறித்த கதைகள் இதில் உள்ளன. உடனடியாக அவர்கள் வசித்த வீடுகள் அதே நிலையிலேயே இன்னும் அதிக பணத்திற்கு வாடகைக்காக விளம்பரப்படுத்தப்படும் என பலர் கூறுகிறார்கள்.
“வீட்டு உரிமையாளர்கள் இழிவானவர்கள். அடிப்படையாக சிலவற்றை பழுதுபார்க்க வேண்டும் என நாங்கள் எப்போது கூறினாலும் அதற்கு பதிலாக நாங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற ரீதியில்தான் அவர்களுடைய பதில் இருக்கும்” என, விக்டோரியா மாகாணத்தின் பிரன்சுவிக் நகரைச் சேர்ந்த ஒருவர் எழுதுகிறார்.
நில உரிமையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் வாடகைதாரர்களைப் பற்றிய பல தகவல்களை அணுக முடிகிறது. அதே சமயம், வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்கு அத்தகைய வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை என, வான் டென் பெர்க் கூறுகிறார். அவருடைய தரவுத்தளம் இதில் உதவுவதாக அவர் கூறுகிறார்.
இந்த மாதம் காலியாக உள்ள வீடுகளின் நில உரிமையாளர்களின் மீது தன் பார்வையை பதித்துள்ள அவர், வாடகை வீட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தளர்த்த அவர்கள் உத வேண்டும் என வாதிட்டார்.
ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட மிக சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சுமார் 10 லட்சம் வீடுகள் காலியாக இருப்பதை காட்டியுள்ளது. அதேசமயம், பல பகுதிகளில் வீட்டு நெருக்கடியால் மக்கள் கூடாரங்களில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் அந்த வீடுகள் காலியாக இருக்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை கணக்கிடுவது கடினம். “எனவே, நான் ஒரு பட்டியலை உருவாக்க நினைத்தேன்" என்கிறார் வான் டென் பெர்க்.
எனவே, அவரது ஆதரவாளர்களின் உதவியுடன், அவர் நாடு முழுவதிலுமிருந்து காலியாக உள்ள வீடுகளின் முகவரிகளைச் சேகரித்து, அவற்றில் குடிபெயர்வதற்கு மக்களை ஊக்குவிக்கிறார்.
உரிமையாளர் அனுமதியின்றி காலியாக உள்ள ஒரு கட்டடத்தில் குடியேறுவது ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானது. ஆனால், அக்கட்டடத்தை உடைத்தல், அத்துமீறி நுழைதல் அல்லது வெளியேறுமாறு அறிவுறுத்தப்படும் போது அங்கேயே இருத்தல் போன்றவற்றை அந்நாட்டுச் சட்டங்கள் தடை செய்கின்றன.
"பணக்காரர்கள் காலியான வீடுகளை பதுக்கி வைப்பது குறித்து அரசாங்கம் ஏதும் செய்யாவிட்டால், நீங்கள் அதை செய்யுங்கள்” என அவர் ஒரு வீடியோவில் தெரிவித்தார்.
அவர் சில முகவரிகளை பொதுவெளியில் பட்டியலிடுகிறார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சில முகவரிகளை தனிப்பட்ட முறையில் மக்களுக்கு வழங்குகிறார்.
இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவர் இப்போது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள வீடுகளைத் தொகுத்து உலகளவில் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார்.
வான் டென் பெர்க் அணுகுமுறைக்கு எழும் எதிர்ப்பு
"ஆஸ்திரேலியாவில் இதற்கு வரவேற்பு அமோகமாக உள்ளது” என்கிறார் அவர்.
"பொதுவாக செல்வந்தர்கள் தான் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
ஆனால் சட்ட ரீதியான, உடல் ரீதியான அச்சுறுத்தல்களும் உள்ளதாக கூறும் அவர், குறிப்பாக காலியான வீடுகளின் பட்டியலை பதிவிட தொடங்கியதிலிருந்து இந்த அச்சுறுத்தல்கள் வருவதாக கூறினார்.
இது ஆஸ்திரேலியாவில் தேசியளவிலான விவாதத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், அவர் குற்றங்களை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அந்த குற்றச்சாட்டை "நல்லவர்கள் கெட்ட சட்டங்களுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள்" என்று டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு தேசிய தொலைக்காட்சியில் அவர் நிராகரித்தார்.
"அவர் காலியாக உள்ள கட்டடங்களை உடைத்து உள்ளே நுழையத் தூண்டியதற்காக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட வேண்டும்," என்று ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியாவின் (Sky News Australia) தொகுப்பாளர் ஜேம்ஸ் மேக்பெர்சன் கூறினார். அவர் கூறுகையில், "வீடற்ற மக்கள் குறித்த தார்மீக பொறுப்பு வீட்டு உரிமையாளர்களுக்கு இல்லை" என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இதேபோல் கொதிப்படைந்துள்ளன.
"ஒரு கட்டடம் காலியாக உள்ளது என்பதை எது தீர்மானிக்கிறது? அக்கட்டடத்தில் புல் முளைத்திருப்பதோ அல்லது ஃபர்னிச்சர் ஏதும் இல்லாததா?" என ஆஸ்திரேலியாவின் சொத்து முதலீட்டு நிபுணர் அமைப்பைச் சேர்ந்த நிக்கோலா மெக்டொகல் news.com.au-விடம் கூறினார்.
"ஒரு வீடு காலியாக இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அது விற்கப்பட்டிருக்கலாம் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த கட்டடங்களில் புதிய உரிமையாளர்கள் அல்லது வாடகைதாரர்கள் இன்னும் குடியேறாமல் இருந்திருக்கலாம்" என்கிறார் அவர்.
ஆஸ்திரேலிய நில உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், வீட்டுவசதி ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிரச்னையாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், காலியாக உள்ள வீடுகளில் அனுமதியின்றி குடியேறுவது என்பது, ஒருவரின் காரைத் திருடி அதை மகிழ்ச்சியான சவாரிக்கு எடுத்துச் செல்வதற்கு ஒப்பானது என்றார்.
மற்றொரு குழு, காலியாக உள்ள கட்டடங்கள் குறித்த விவகாரம் ‘கவலையளிப்பதாக' கூறியது. ஆனால், காலியாக உள்ள கட்டடங்களில் அனுமதியின்றி குடியேறுவது, "சொத்து உரிமையாளர்கள் மற்றும் குடியேறுபவர்கள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க சட்ட மற்றும் பாதுகாப்பு அபாயங்களை" ஏற்படுத்துகிறது.
வான் டென் பெர்க்கின் காலியாக உள்ள வீடுகளின் பட்டியல் அமெரிக்காவில் பின்னடைவை சந்தித்தது.
இணையத்தில் அவரது பதிவுகளில் பலர் எஃப்.பி.ஐ விசாரணை அமைப்பை டேக் செய்துள்ளனர்.
"அந்த நாட்டில் பச்சாதாபம் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை," என்று வான் டென் பெர்க் கூறுகிறார்.
“'நிச்சயமாக, எல்லா ரியல் எஸ்டேட் முகவர்களும் அப்படியில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அப்படி இருக்கின்றனர்' என்றார்.
மற்றவர்கள் வான் டென் பெர்க் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.
"அவர் இந்த விவகாரத்தில் செலுத்தும் முக்கியத்துவத்தை எங்கள் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்களை நோக்கித் திருப்பினால், பொது வீட்டுக் காத்திருப்புப் பட்டியல்களைத் தீர்க்க போதுமான நிதி மற்றும் ஆதாரங்கள் கிடைக்கும்" என்று ஆஸ்திரேலியாவின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தனது அணுகுமுறை சிறந்ததல்ல என்ற மாயையில் தான் இல்லை என்று வான் டென் பெர்க் கூறுகிறார்.
"ஆனால் நாங்கள் பல தசாப்தங்களாக தவறான நிர்வாகத்தைக் கொண்டிருந்தோம், அதுதான் இந்த நிலைக்கு வழிவகுத்தது. மேலும் நாங்கள் கொள்கை சார்ந்த தீர்வுகளில் கவனம் செலுத்தும்போது, அதற்கிடைப்பட்ட காலத்தில் மக்கள் என்ன செய்வார்கள்?" என்கிறார் அவர்.
"நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்... உங்கள் கொள்கை தீர்வு என்ன?" என்கிறார்.
வாடகைதாரர்களுக்கு அதிகப் பாதுகாப்புக்கான சட்டம், சொத்து முதலீட்டாளர்களுக்கு லாபகரமான வரிச் சலுகைகளுக்கான சீர்திருத்தங்கள், நீண்ட காலத்துக்குத் தங்கள் சொத்துகளை காலியாக வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் மீது அதிக வரி ஆகியவற்றை அவர் கோருகிறார்.
அவர் வழக்கறிஞர் அமைப்புகள் மற்றும் சட்டமியற்றுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுகிறார், ஆனால் பெரும்பாலானவர்கள் அவரிடமிருந்து விலகி இருக்கிறார்கள்.
"எனக்கு புரிகிறது," என்று அவர் கூறுகிறார். "நான் இணையத்தில் ஒரு முட்டாள் என நினைக்கின்றனர்"
ஆனால், சமூக ஊடகங்களில் மட்டும் 2,00,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட வான் டென் பெர்க், தனது அணுகுமுறை இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.
"வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறி அதிகாலை 2 மணிக்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புபவர்கள் உள்ளனர். உண்மையில், மிகவும் பயங்கரமான கதைகள் இருக்கின்றன. உண்மையில் அதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது," என்று அவர் கூறுகிறார்.
"இது மிகவும் மன அழுத்தத்தையும் ஒருவித சோகத்தையும் உருவாக்கும். ஏனென்றால், நான் மக்களுக்கு ஆற்றுவதற்கான ஒரு கடமை இருப்பதாக உணர்கிறேன்" என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)