12 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் - நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியில் யாருக்கு அதிர்ச்சி?
"நீதிமன்றம் சென்றும் கிடைக்காத சின்னத்தை மக்கள் மன்றம் தந்த தீர்ப்பின் மூலம் பெறப் போகிறோம்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி.
ஆம். தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வரும் நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைச் சாதித்துக் காட்டியுள்ளது.
இதன் மூலம் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள், தமிழ்நாட்டில் வேரூன்ற சகல வழிகளிலும் முயலும் பாஜக ஆகியவற்றின் சவால்களைத் தாண்டி நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து அதிகரித்தது எப்படி? நாம் தமிழர் கட்சி இந்த மைல்கல்லை எப்படி எட்டியது?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையிலேயே அமைந்துள்ளன.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
- திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
- திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
- மற்ற 35 தொகுதிகளிலும் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் டெல்டா பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
- நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை, சிவகங்கை தொகுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி குறைந்த அளவாக 52,721 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும்கூட, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி அக்கட்சி வேட்பாளர் மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசையில் நாம் தமிழர் கட்சி சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் இது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்கு சதவீதமான 8%-ஐ இந்தத் தேர்தலில் எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய இடும்பாவனம் கார்த்தி, "நாடாளுமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது," என்றார்.
"நாங்கள் தேர்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளைப் போல் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஒரு எண்ணை ஒதுக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகளின் சின்னத்தை மாற்ற வேண்டும். அதுதான் தேர்தல் களத்தில் சரிசமமான போட்டிக்கு வழிவகுக்கும்."
சின்னங்கள் வேட்பாளர்களுக்கு சில சாதகங்களை அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்கிறார் அவர். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது வெற்றி எளிதாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பானை சின்னத்தில் களம் காணும் போது வெற்றி கடினமாவதைப் பார்க்க முடிகிறது."
இது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கும் பொருந்துவதாகக் கூறும் அவர், சின்னங்கள் பயன்பாட்டிற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் நம் நாட்டு நடைமுறையைப் பின்பற்றி தங்கள் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்று தீர்மானித்தே அதைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



