காணொளி: 'இரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை' - டிரம்ப்

காணொளி: 'இரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரான் மீது நடத்தி வந்த போர் நான்காவது வாரத்தை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிரம்ப் கூறிய காரணம் என்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிரார். அதில், அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பகைக்கு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காண்பது குறித்து கடந்த 2 நாட்களாக மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆழமான, விரிவான மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் போக்கு மற்றும் தன்மையின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 48 மணி நேரத்துக்குள் ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் இரானின் மின்நிலையங்களை தாக்குவோம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் எச்சரித்திருந்தது. அதோடு, அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்படும் என்றும் இரான் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டிருக்கிரார். எனினும், டிரம்பின் இந்த அறிவிப்பு பல முக்கிய கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை என்கிறார் பிபிசியின் வெள்ளைமாளிகை செய்தியாளர் பெர்ண்ட் டெபுஸ்மேன்

இது பற்றி கூறும் அவர், இரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடந்ததாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தாலும், வார இறுதியில் இரு தரப்பினரும் வெளிப்படுத்திய போர்க்குணமிக்க தொனிக்கு முற்றிலும் மாறாக இந்த அறிக்கை உள்ளது. அதே போல, இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியாக எதில் கவனம் செலுத்தின என்பதும் தெளிவாக இல்லை. இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், அணு ஆயுத செறிவூட்டல் அல்லது வெறுமனே போர் நிறுத்தம் பற்றி பேசி இருந்திருக்கலாம். ஆனால், சனிக்கிழமை தனக்கு போர் நிறுத்தம் வேண்டாம் என டிரம்ப் கூறி இருந்தார்.

ஒருவேளை இது ஹோர்மூஸ் தொடர்பாகவும் இருக்கலாம். எனினும், கப்பல் போக்குவரத்திற்காக அதைத் திறப்பதாக இரான் இதுவரை பகிரங்கமாக உறுதியளிக்கவில்லை. பெரும்பாலான வல்லுநர்கள் இது சாத்தியமில்லை என்றே கருதுகின்றனர். ஏனெனில் ஹோர்மூஸ் மீதான இரானின் இறுக்கமான பிடியே போரில் அதன் மிகப்பெரிய பலமாக உள்ளது என்கிறார்.

இந்த நிலையில், டிரம்ப் அறிவிப்பு தொடர்பாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடாத இரானிய வட்டாரத்தை மேற்கோள்காட்டி, ட்டிரம்ப்புடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு எதுவும் இல்லை என செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் எங்கள் இலக்குகளில் அடங்கும் என்பதை கேட்டவுடன் டிரம்ப் பின்வாங்கியதாக அந்த வட்டாரம் அந்த செய்தியில் கூறி உள்ளது.

சரி, இந்த அறிவிப்புக்கு முன்பாக நடந்த முக்கிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

நள்ளிரவு இரான் கொத்துக்குண்டுகளை கொண்ட ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை ஏவியது. அவற்றை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

அதே நேரம், சனிக்கிழமை இரான் ஏவிய ஏவுகணைகள் டிமோனா மற்றும் அராட் நகரை தாக்கி சேதத்தை ஏற்படுத்தின. அந்த தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலும் இரானின் தெஹ்ரானில் தாக்குதலை தொடர்ந்தது. நகரின் பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கரமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

லெபனானில் பாலங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

பாலங்கள் மீதான தாக்குதலை கண்டித்துள்ள லெபனான் அதிபர் ஜோசப் அவுன் , இது தரைவழி படையெடுப்புக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

இது லெபனானின் இறையான்மையை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய தாக்குதல் நடத்துவதில் இருந்து இஸ்ரேலை தடுக்குமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் உடனடி தரைவழிப் படையெடுப்பு தொடர்பான அச்சம் லெபனானில் நிலவுவதாக அங்கிருக்கும் பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹியூகோ பச்சேகா கூறுகிறார்.

மறுபுறம், தனது குடிமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா அறிவுறித்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் குறிப்பாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இருப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை கூறி உள்ளது.

அதே போல, ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜோர்டானின் அம்மான் நகருக்குச் சிறப்புப் பேருந்து சேவையையும் வழங்குகிறது.

இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கக் குடிமக்களுக்காக இந்தப் பேருந்து சேவை வழங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் ஜோர்டான் சர்வதேச விமான நிலையம் வரை செல்லும் என்றும் அது கூறியுள்ளது. தற்போதைக்கு, ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து புறப்படுவதாகவும் அமெரிக்க தூதரகம் கூறி உள்ளது

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு