ரூபா ஐபிஎஸ், ரோகிணி ஐஏஎஸ் இடையே வெடித்த 'அந்தரங்க புகைப்பட' மோதல் - என்ன நடக்கிறது?

கர்நாடக அரசியலில் தற்போது இரண்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே பரஸ்பர மோதல் நடந்து வருகிறது. இது இருவரின் பணி இடமாறுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது.
இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் இடையேயான பகை கர்நாடக அதிகாரவர்க்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் அரசியல் தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவரது பணி தொடர்பான சில குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
மூன்று நான்கு ஆண் அதிகாரிகளுடன் புகைப்படங்களைப் பகிர்வது போன்ற 'தகாத நடத்தை' குற்றச்சாட்டு தனிப்பட்ட குற்றமாகச் சாட்டப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா மௌத்கில் கடந்த காலங்களில் இதுபோன்ற சில ரகசியங்களை வெளியிட்டார், இதனால் அவரது மேலதிகாரியான காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சிறைகள்) பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய நேர்ந்தது.
தற்போது, ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்துரி மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2015ல், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஜில்லா பஞ்சாயத்து சிஇஓவாக இருந்தபோது, ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கழிப்பறைகளை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிந்துரிக்கு விருது வழங்கியுள்ளார்.
ஒரு லட்சம் கழிப்பறைகள் என்ற புள்ளிவிவரத்தை ரோகிணி சிந்துரி தவறாகக் கூறியதாக ஐபிஎஸ் ரூபா மௌத்கில் கூறுகிறார்.
மௌத்கில் தற்போது கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக சிந்துரி உள்ளார்.
சர்ச்சையைத் தொடர்ந்து இருவரும் பொறுப்புகள் இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதிகார வர்க்கத்துக்குச் சங்கடம்
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரோகிணி சிந்துரி செய்தியாளர்களிடம், இதற்குத் தகுந்த மேடையில் பதிலளிப்பதாகவும், மௌத்கில் ‘விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.
பிபிசி ஹிந்தியுடன் பகிர்ந்த அறிக்கையில், சிந்துரி, "மனநோய் ஒரு பெரிய பிரச்சனை. அதற்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அர்கா ஞானேந்திராவும் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம், "இந்த அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட சண்டைகளை இப்படி பகிரங்கப்படுத்த முடியாது. இது ஒட்டுமொத்த கர்நாடக அதிகாரவர்க்கத்தையும் அவமதிக்கும் செயலாகும். தலைமைச் செயலாளரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்" என்றார்.
இதற்கிடையில், ரோகிணி சிந்துரி மீதான தனது 19 குற்றச்சாட்டுகளின் பட்டியலை, மௌத்கில், தலைமைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் ஆகியோருக்குக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.
மறுபுறம், சிந்துரியின் கணவர் சுதீர் ரெட்டி தனது மனைவியின் படங்களை ஹேக் செய்து பயன்படுத்தியதாக ரூபா மௌத்கில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர், "இந்தப் பிரச்சினைகளையெல்லாம் எழுப்ப ரூபா யார்? சில படங்களை ரோகிணி அனுப்பியதாக அவர் கூறினார். யாருக்கு? படங்களைப் பெற்ற இந்த மூன்று அதிகாரிகள் யார்?" என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த மோதல் குறித்து மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்காமல் உள்ளனர். பிபிசி ஹிந்தி குறைந்தது மூன்று மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது. பெயர் வெளியிட விரும்பாத அவர்கள், "இந்தத் தகராறுக்கான காரணம் எங்களுக்குத் தெரியும், இது மிகவும் தனிப்பட்டது, நாங்கள் வெளியில் சொல்ல முடியாது." என்று தெரிவித்தனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆலோசனையின் பேரில், தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா, இரு பெண் அதிகாரிகளுக்கும் விதிமுறைகளை விளக்கியுள்ளார். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது அகில இந்திய சேவை விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், K VENKATESH
என்ன குற்றச்சாட்டு?
ரூபா மௌத்கில் தற்போது கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.
ரூபா மீது ரோகிணி சிந்துரி கூறியுள்ள 19 குற்றச்சாட்டுகளில் சில தனிப்பட்டவை, சில அவரது பணி தொடர்பானவை. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை அண்மைச் சம்பவங்களுடன் தொடர்புடையவை அல்ல.
ரோகிணி சிந்துரி சில 'அநாகரீக' புகைப்படங்களை மூன்று நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக சமீபத்திய குற்றச்சாட்டு.
ரூபா மௌத்கில் பிபிசி ஹிந்தியிடம், "லோக்ஆயுக்தாவின் நோட்டீஸ்களுக்கு சிந்துரி பதிலளிக்கவில்லை, ஆனால் இந்தப் படங்களை சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்" என்று கூறினார்.
சிந்துரி தலைமைச் செயலாளரிடம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “குற்றச்சாட்டுகள் பொய்யானவை, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
டி.கே.ரவியின் தற்கொலையை சிபிஐ விசாரித்தது குறித்தும் மௌத்கில் கேள்வி எழுப்பினார்.
தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், "ரவி தன்னுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவதில் எல்லை மீறியிருந்தால், சிந்துரி ஏன் அவரைத் தடுக்கவில்லை?" என்று மௌத்கில் கேள்வி எழுப்பினார்.
கொரோனா காலத்தில் மைசூரில் இருந்து சாமராஜநகர் பொது மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கிய விவகாரம் குறித்தும் மௌத்கில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சிந்துரி மைசூர் துணை ஆணையராக இருந்தார். அப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுமார் 24 பேர் உயிரிழந்தனர்.
மோதலின் தொடக்கம்
ரோகிணி சிந்துரி மற்றும் ஜே.டி.எஸ் கட்சி எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.மகேஷ் ஆகியோர் உணவகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதும் இந்த விவகாரம் சூடுபிடித்தது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் அங்கு வந்திருந்தார்.
மைசூர் துணை கமிஷனராக இருந்தபோது, சிந்துரி வீட்டில் நீச்சல் குளம் கட்டியதாக எம்எல்ஏ மகேஷ் குற்றம் சாட்டியிருந்ததால், இவர்கள் சேர்ந்து இருந்த இந்தப் படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மறுபுறம், அரசு நிலத்தை அபகரித்ததாக இந்த எம்.எல்.ஏ மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு ரூபா மௌத்கில், இது ஒரு சமரச கூட்டமா? அவர் தனது உத்தியோகபூர்வ நிலையில் இந்த முடிவை எடுத்திருந்தால், அந்த அதிகாரி ஏன் அங்கு வந்தார்? என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
மாண்டியா மற்றும் ஹாசன் மாவட்டங்களில் ரோகிணி சிந்துரி பணியாற்றிய காலத்தில் முறைகேடுகள் செய்ததாகவும் மௌத்கில் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்கி அலியின் தந்தையான நகைச்சுவை நடிகர் மஹ்மூத் அலியின் நிலம் தொடர்பான பிரச்சனையையும் மௌத்கில் எழுப்பியுள்ளார்.
இந்த நிலத்தை ரோகிணி சிந்துரியின் கணவர் சுதீர் ரெட்டி அனுமதியின்றி அளவீடு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கணவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு உதவியதாக சிந்துரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுருக்கமாக, ரூபா மௌத்கில் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியல், புகைப்படங்களைப் பகிர்ந்தது தனிப்பட்ட விஷயம் அல்ல என்பதை நிரூபிப்பதற்கேயாகும்.

பட மூலாதாரம், K VENKATESH
குற்றச்சாட்டுகளுக்கு ரோகிணி சிந்தூரியின் பதில்
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரோகிணி சிந்துரி, "ரூபா எனக்கு எதிராக தவறான, தனிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை நடத்துகிறார், இது அவரது வழக்கமான செயல்பாடாகும். அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவிலும் அவர் இப்படித் தான் செய்துள்ளார். அவர் எப்போதும் ஊடகங்களின் கவனத்தைத் தன் மீது ஈர்க்க விரும்புகிறார். அவரது சமூக ஊடக சுயவிவரமே இதற்குச் சான்றாகும். அவர் எப்போதும் யாரையாவது ஒருவரை இலக்காக்கிக் கொண்டே இருந்துள்ளார். தனது பணியைச் செய்யாமல் இப்படிப் பொழுதுபோக்கிவருகிறார்.” என்றார்.
புகைப்படங்கள் பகிரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், சிந்துரி கூறுகையில், "இவை படங்கள் அல்ல, ஸ்கிரீன் ஷாட்கள். இவை சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. என் மீது அவதூறு பரப்ப, அவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறார். நான் படங்களை யார் யாருக்கு அனுப்பினேன் என்று ரூபா கூற முடியுமா? அப்போதுதான் மக்களுக்கு உண்மை புரியும்.” என்றார்.
ரோகிணி சிந்துரியின் கணவர் சுதீர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "முதலில் ரூபா யார்? அவர் சிந்துரியை விட சீனியரா அல்லது அவர்தான் அரசாங்கமா? அவர் ஒரு அதிகாரி. இங்கே நூற்றுக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர். அவருக்கு என்ன வேண்டும்? அவரது தனிப்பட்ட விஷயம் என்ன? என்ன உள் நோக்கம்? இதைத் தான் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கும் சிந்துரிக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஏன் சிந்துரியைப் பற்றிப் பேசுகிறார்? என்ன பிரச்சனை? பொறாமை என்று நினைக்கிறேன். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அது மனப் பிரச்சினையாகவும் இருக்கலாம்." என்றார்.
“அவருக்குச் சமூக ஊடகத்தில் பின்தொடர்பவர்கள் இருக்கலாம். சிந்துரிக்கு சமூக வலைதளக் கணக்குகள் கூட இல்லை. விளம்பரத்தில் ஆர்வம் காட்டாதவர். வேலையில் கவனம் செலுத்துகிறார். சில படங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தப் படங்கள் யாருக்கு அனுப்பப்பட்டன? படங்கள் அனுப்பப்பட்ட அந்த மூன்று அதிகாரிகள் யார்? முதலில் இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க அவர் யார்?" என்று அவர் கேள்விக்கணை தொடுக்கிறார்.
ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர, உரிய அதிகாரிகள் முன் தனது கருத்துக்களை முன்வைப்பேன் என்று சிந்துரி கூறியுள்ளார்.
ரோகிணி சிந்துரி தலைமைச் செயலாளர் வந்திதா சர்மாவுக்கு கடிதம் அனுப்பி தனது தரப்பை முன்வைத்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மௌத்கில் எனக்கு மூத்த அதிகாரியும் அல்ல, எனது மேலதிகாரியும் அல்ல என்றும் நான் கூறியுள்ளேன். அவரது இந்தச் செயல், சேவை நடத்தை விதிகளை மீறுவதாகும்" என்றார்.
மறுபுறம், தனது இருபது குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், மௌத்கில், சிந்துரி மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விசாரணைக்கு பிறகும் ஏன் சிந்துரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












