உலகைச் சுற்றும் சவாலில் 24,000 கிமீ கடந்த இந்தியரின் பைக் பிரிட்டனில் திருட்டு - அடுத்து காத்திருந்த ஆச்சர்யம்

    • எழுதியவர், அலெக்ஸ் தோர்ப்
    • பதவி, பிபிசி நியூஸ், நாட்டிங்ஹாம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உலகைச் சுற்றும் சவாலில் இந்தியாவில் இருந்து 15,000 மைல் (24,140 கி.மீ) பயணித்த பைக்கரின் வாகனம் பிரிட்டனில் திருடு போனது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் இருந்து கிடைத்த ஆதரவு தனது பார்வையையே "மாற்றியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நாட்டிங்ஹாமிலுள்ள வொல்லடன் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள திருடு போனதாக யோகேஷ் அலேகரி கூறினார்.

33 வயதான இவர் தனது கேடிஎம் 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிளில் 17-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியே பயணித்திருக்கிறார். திருடு போன மோட்டார் சைக்கிளில் 15,000 பவுண்ட் மதிப்புள்ள அவரது உடைமைகள் இருந்துள்ளன.

அதன் பின்னர் உடைகள் மற்றும் மாற்று மோட்டார் சைக்கிள் உட்பட பல்வேறு பொருட்களைத் தர பலரும் முன்வந்துள்ளதாக அலேகரி தெரிவித்தார். பிரிட்டன், இந்தியா மற்றும் மோட்டார் சைக்கிள குழுவினர் அளித்த உதவியை அவர் பாராட்டினார்.

"நன்கொடையாளர்கள் [நலம்விரும்பிகள்] எனது பார்வையை மாற்றியுள்ளனர். நாடு முழுவதும் இருந்தும், இந்தியா, பிரிட்டன் மற்றும் மோட்டார் சைக்கிள் குழுவினரிடம் இருந்தும் பெரும் ஆதரவு கிடைக்கிறது. பிரிட்டிஷ் பைக்கர்களிடம் இருந்தும், பிரிட்டிஷ் குடிமக்களிடமிருந்தும் 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் - உங்களை ஆதரிக்கிறோம்' என்று நிறைய செய்திகள் வந்துள்ளன," என்று அவர் கூறினார்.

அலேகரியின் மோட்டார் சைக்கிள் இரான், நேபாளம், சீனா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளை கடந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளையும் கண்டிருக்கிறது.

முழுநேர கன்டென்ட் கிரியேட்டரான அவர் ஆக்ஸ்ஃபோர்ட் செல்லும் வழியில் ஆகஸ்ட் 28 அன்று வொல்லடன் பூங்காவில் பைக்கை நிறுத்தியுள்ளார்.

சிற்றுண்டியை முடித்துவிட்டு வந்தபோது, தனது பைக்கும் அனைத்து உடைமைகளும் காணாமல் போயிருப்பதை அவர் கண்டார்.

பூங்காவில் ஒரு பார்வையாளரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ, இரண்டு ஸ்கூட்டர்களுடன் அவரது பைக் அங்கிருந்து ஓட்டிச் செல்லப்பட்டதை காட்டுகுறுத.

சம்பவம் பற்றிய செய்தி வெளியானதிலிருந்தே, உலகின் பல முனைகளில் இருந்தும் ஆதரவு குவிந்துவருவதாக அலேகரி கூறினார்.

"மக்களிடம் மனிதநேயம் உள்ளது," என்று அவர் கூறினார்.

"நான் பயணத்தை தொடர்வதற்காக பலரும் எனக்கு உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளனர். தங்கள் சொந்த மோட்டார் சைக்கிளையும் எனக்குத் தர சிலர் முன்வந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

அவரது நலம்விரும்பிகளில் ஒருவராக லாங் வே ஹோம்(Long Way Home) தொலைக்காட்சி தொடரை தயாரித்த நிறுவனமும் உள்ளது. இதை நடிகர் ஈவான் மெக்ரெகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சார்லி பூர்மன் நடத்துகின்றனர்.

அலேகரியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு லாங் வே டிவி சீரிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதில் தரப்பட்டுள்ளது. அதில், அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

"நாட்டிங்ஹாமில் உங்கள் பைக் திருடப்பட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது," என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

"நாங்கள் கடைசி தொடரை படமாக்குவதற்கு பயன்படுத்திய ஒரு கேடிஎம் பைக் உள்ளது. இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றால், அதை உங்களுக்கு தர விரும்புகிறோம்."

வேறு வாகனத்தை ஏற்பது குறித்து முடிவு செய்வதற்கு முன்பு தனது பைக்கை காவல்துறையால் மீட்கமுடியுமா என்பதை அறிய காத்திருப்பதாகவும் அலேகரி கூறினார்.

"இந்த மோட்டார் சைக்கிளோடு எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது," என்று அவர் கூறினார். "எனது மோட்டார் சைக்கிளை மட்டும் மீண்டும் திரும்பக் கொடுங்கள். நான் ஓர் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறேன், நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன்."

அதிகாரிகள் இன்னும் "விரிவான விசாரணைகளை" நடத்தி வருவதாகவும், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை மற்றும் பைக் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் நாட்டிங்ஹாம் காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கூடுதல் செய்தி சேகரிப்பு - விராஜ் சோனி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு