You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முன்பு வீட்டு வேலை செய்தனர்; இப்போது மீன்பிடி தொழிலில் அசத்தும் பெண்கள்
மகாராஷ்டிராவின் விதர்பாவை சேர்ந்த திவார் சமூகத்தினருக்கு மீன்பிடிதான் முதன்மை தொழில். எட்டு ஆண்டுகளுக்கு முன் இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்டுகள் மட்டும்தான் மீன்பிடி தொழிலை செய்துவந்தனர். ஆனால், குளங்களில் அவ்வளவு மீன்கள் இல்லை. அப்போதுதான் திவார் சமூக பெண்கள் ஒரு தீர்மானத்துடன் குளங்களை மீட்க முன்வந்தனர். நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக செயல்பட்டு வரும் ஃபீட் (Feed) எனும் அமைப்பின் உதவியுடனும் கமிட்டி ஆஃப் ரிசோர்ஸ் ஆர்கனைசேஷன் எனும் அமைப்பு அளித்த பயிற்சியின் மூலமாகவும் அப்பெண்கள் ஏரிகளுக்கு புத்துயிர் அளிக்க முடிவு செய்தனர்.
அங்குள்ள ஏரிகளில் போதுமான அளவுக்கு மீன்கள் இல்லை. அப்போதுதான் ஏரிகள் நல்ல நிலையில் இல்லை என்பதை அப்பெண்கள் உணர்ந்தனர். திவார் சமூகத்தைச் சேர்ந்த ஷாலு கோல்ஹே, சரிதா மேஷ்ராம், கவிதா மௌஜே ஆகியோர் இந்த முயற்சியில் இறங்கினர்.
இதற்காக 43 கிராமங்களில் உள்ள 63 குளங்களை இப்பெண்கள் நேரில் சென்று பார்த்தனர். அடுத்தகட்ட ஆராய்ச்சிக்காக நிம்கௌனில் உள்ள ஒரு ஏரியை தேர்ந்தெடுத்தனர். இந்த குறிப்பிட்ட ஏரி தன் பல்லுயிர் சமநிலையை இழந்திருந்தது. இந்த குளத்தில் தாவரச்செறிவு குறைந்ததால் மீன்கள் வாழ்வது கடினமாகி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. தாவர உண்ணி அல்லாத மீன்களான பெங்காலி வகை மீன்களுக்கும் சவால்கள் இருந்தன.
மீன் வளர்ப்புக்கு குளத்தை மழைக்கு முன்பாக தயார் செய்வார்கள்.
நிம்கௌன் குளம் கிராம ஊராட்சி மற்றும் உள்ளூர் சுய உதவிக்குழு மூலம் சுமார் ஓராண்டு பராமரிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் இப்பணிகளால் ஏற்பட்ட தாக்கங்கள் கண்கூடாகத் தெரிந்தன. இதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
குளங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த தாவரங்களின் விதைகளை பராமரிக்கும் வேலையை பெண்கள் மேற்கொள்கின்றனர். இதுவரை 65,000 குளங்களை பராமரிப்பதில் இப்பெண்கள் பங்காற்றியுள்ளனர். குளங்களை பராமரிப்பது தொடர்பான உதவிகளுக்காக இவர்கள் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அழைக்கப்படுகின்றனர்.
முன்பு திவார் சமூக பெண்கள் துணி துவைத்தல், பாத்திரம் துலக்குதல் போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களாகவே இருந்ததாக, ஷாலு கோல்ஹே தெரிவிக்கிறார். ஆனால், இப்போது மீன்பிடி தொழிலால் அவர்களுக்கு மரியாதை கிட்டியுள்ளது.
குடிமக்களாக இப்பெண்களுக்கு அரசிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஷாலுவும் அவரைப் போன்ற பெண்களும் பெண்கள் அரசியலில் பங்கேற்பது, உள்ளூர் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)