காணொளி: அணு ஆயுதங்கள் மீதான உத்தியை இந்தியா மாற்றுகிறதா?

காணொளி: அணு ஆயுதங்கள் மீதான உத்தியை இந்தியா மாற்றுகிறதா?
பிரசுரிக்கப்பட்டது

ஸ்வீடனை சேர்ந்த சிந்தனை குழுவான ஸ்டாக்ஹோம் இண்டர்நேஷ்னல் பீஸ் ரிசர்ச்-ன் சமீபத்திய அறிக்கை பேசுபொருளாகி இருக்கிறது. அந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா முதன்முறையாக 12 அணு ஆயுதங்களை களத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

ஜூன் 8ஆம் தேதி வெளியான அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 178 அணு ஆயுதங்கள் சேமிப்புகிடங்கில் உள்ளன. 12 அணு ஆயுதங்கள் களத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அப்படியெனில், இந்தியாவிடம் மொத்தம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 180ஆக இருந்தது. அவை அனைத்தும் சேமிப்பு கிடங்கில் இருந்தன.

அமைதிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலைநிறுத்தல் ஆச்சரியமளிப்பதாக கூறுகிறார் பாதுகாப்பு ஆய்வாளரான ராகுல் பேடி.

இந்த அணு ஆயுதங்கள் ரோந்து செல்லும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் என ராகுல் பேடி மதிப்பிடுகிறார்.

எனினும், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது.

Stockholm International Peace Research Institute அறிக்கையின்படி 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே பாகிஸ்தான் எந்த அணு ஆயுதத்தையும் நிலைநிறுத்தவில்லை. அதேபோல, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களையும் அதிகரிக்கவில்லை. பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன.

அப்படியெனில் இந்தியா தனது உத்தியை மாற்றுகிறதா?

இது குறித்து விளக்கிய பாதுகாப்பு விவகார நிபுணர் ராகுல் பேடி, முதலில் தாக்கமாட்டோம் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றார்.

மேலும் விளக்கிய அவர், வார்ஹெட் அதாவது அணு ஆயுதம் மற்றும் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் பகுதியான ஏவுகணை ஆகிய இரண்டும் தனித்தனியாக வைக்கப்படும். அவற்றின் இருப்பிடமும் தனித்தனியேகவே இருக்கும். ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது ஒன்றாக இணைக்கப்படுகின்றன. அதனால்தான் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது மிக தீவிரமான விஷயம்'' என்றார்.

இந்தியா இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த 12 அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக நான் மதிப்பிடுகிறேன் என்கிறார் ராகுல் பேடி. இருப்பினும், அவரது இந்த கூற்றை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீருக்கு அடியில் இயங்கும் அதிநவீன போர்க்கப்பல் ஆகும். இதற்கு ஆற்றல் வழங்க சிறிய அணு உலை பயன்படுத்தப்படுகிறது.

சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களை போல எரிபொருள் நிரப்பவோ அல்லது ஆக்ஸிஜனுக்காகவோ இது அடிக்கடி மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவின் அணுசக்தி தடுப்பு திறனை புரிந்துகொள்வதன் மூலமே, இந்தியாவின் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் ராகுல் பேடி.

தன் மீது நடத்தப்படுவதற்கு சாத்தியமான அணு ஆயுத தாக்குதல்களை சமாளிக்க இந்தியா 3 முறைகளை பயன்படுத்துகிறது என கூறும் அவர், முதலாவது வான்வழி, இரண்டாவது நிலம் சார்ந்தது, மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்தது என்கிறார்.

இந்த மூன்றாவது முறை மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவது மிக கடினம் என்கிறார் ராகுல் பேடி.

தொடர்ந்து விளக்கிய ராகுல் பேடி , "அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய அணுசக்தி நாடுகளும் இதே போல் நீர்மூழ்கிக் கப்பல்களில் தங்கள் வார்ஹெட்களை நிலைநிறுத்தி ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. இதே முறையைத்தான் இப்போது இந்தியாவும் பின்பற்றியுள்ளது. இது ஒரு பெரிய மாற்றம்" என்கிறார்.

'ஆபரேஷன் சிந்துர்' தொடர்கிறது என இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது, எனவே இந்தியாவின் உத்தியை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியுமா என்று அவரிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த ராகுல் பேடி, இது ஆபரேஷன் சிந்துரின் ஒரு பகுதியா அல்லது ஆபரேஷன் சிந்துர்- 2.0 இன் பகுதியா என்று சொல்வது கடினம், ஆனால் தற்போது இந்தியா பெரிய அணுசக்தி சக்தி நாடுகளை போலவே கடல்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

இந்தியா மட்டுமின்றி, அணு ஆயுதத் திறன் கொண்ட உலகின் மேலும் சில நாடுகளும் தங்களது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளன என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளிடம் கூட்டாக சுமார் 12,187 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 4,012 அணு ஆயுதங்கள் ராணுவ படைகளுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையின்படி கடந்த சில ஆண்டுகளில், நாடுகள் தங்களது அணு ஆயுதங்கள் குறித்து கூடுதல் ரகசியத்தைக் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன. இதனால், எந்த நாட்டிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளன என்பதை அறிவது கடினமாகி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு