You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாபை பதற வைத்த 'இம்பாக்ட்' பிளேயர்; கடைசி ஓவரில் போராடி தோற்ற ராஜஸ்தான்
198 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 15வது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. பஞ்சாப்பின் கை ஓங்கியிருந்தது. வெற்றியை மிக எளிதாக பெற விரும்பிய பஞ்சாப்பிற்கு 'குடைச்சல்' கொடுத்தது ராஜஸ்தானின் ஷிம்ரன் ஹெட்மயர் - துருவ் ஜுரெல் கூட்டணி. இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அடித்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், பவுலர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் பந்துவீசினர்.
ஈரப்பதத்தை பயன்படுத்தி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது பஞ்சாப் அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் ஜோடி ராஜஸ்தானின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
குறிப்பாக கே.எம்.ஆசிஃப் வீசிய 4வது ஓவரில் 3 பவுன்டரி, 1 சிக்சர் உள்பட மொத்தம் 19 ரன்களை விளாசினார் பிரப்சிம்ரன் சிங். ஒருமுனையில் அவர் ஆக்ரோஷமாக ஆட, மறுமுனையில் பொறுமை காட்டினார் ஷிகர் தவான்
அந்தரத்தில் பறந்து ஜாஸ் பட்லர் பிடித்த கேட்ச்
அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங், 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
புல் ஷாட் அடிக்க முயன்று அது கேட்ச்சாக மாற, பவுன்டரி லைனில் இருந்து ஓடி வந்தவாறு அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தார் ஜாஸ் பட்லர். முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் சேர்த்த பிரப்சிம்ரன் - ஷிகர் தவானின் கூட்டணி அத்துடன் முடிவுக்கு வந்தது.
கேப்டனால் காயப்பட்ட ராஜபக்ஷ
பிரப்சிம்ரன் சிங்கைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ராஜபக்ஷ 1 ரன் எடுத்திருந்தார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்தபோது பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் அடித்த பந்து, நேராக ராஜபக்ஷவின் கையை பதம் பார்த்தது.
சிறிது நேரம் வலியால் அவதிப்பட்ட ராஜபக்ஷ பின்னர் களத்தில் இருந்து வெளியேறினார். கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடிய கடைசி ஆட்டத்தில் ராஜபக்ஷ அரைசதம் விளாசியிருந்தது கவனிக்கத்தக்கது. பின்னர் வந்த ஜிதேஷ் ஷர்மா 27, சிக்கர்ந்தர் ராசா 1, ஷாருக்கான் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
15 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 152 ரன்களை சேர்த்திருந்த பஞ்சாப் அணியை, கடைசி 5 ஓவர்களில் வெகுவாக கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் அணி. நேர்த்தியான பந்துவீச்சால் பஞ்சாப் அணி கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 45 ரன்களை மட்டுமே குவித்தது.
இருந்தாலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்தது.
'மேன்கட்': ஷிகர் தவானை பயங்காட்டிய அஷ்வின்
சிரிப்பலையை ஏற்படுத்திய சேட்டை
7வது ஓவரை அஷ்வின் வீசினார். பிரப்சிம்ரன் சிங் பேட்டிங் செய்தார். 4வது பந்தை அஷ்வின் வீச வந்தபோது, மறுமுனையில் நின்ற ஷிகர் தவான் கிரீஸில் இருந்து வெளியேறியதைக் கண்டு பந்துவீசுவதை நிறுத்தினார். 'மேன்கட்' செய்வதில் புகழ்பெற்ற அஷ்வின் இவ்வாறு செய்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. களத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜாஸ் பட்லரை கேமிராக்கள் படம்பிடித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
2019 ஐபிஎல் சீசனில், இதேபோன்றதொரு பஞ்சாப் - ராஜஸ்தான் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாபிற்காக விளையாடிய அஷ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் 69 ரன்கள் சேர்த்திருந்தபோது மேன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது அப்போது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருந்தது.
ஓபனிங் செய்த அஷ்வின்
198 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜாஸ் பட்லருக்கு பதிலாக அஷ்வின் ஓபனிங் ஆடினார். 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அஷ்வின் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
யாஷ்வி ஜெய்ஷால் 11,ஜாஸ் பட்லர் 19 ரன்களில் விடைபெற்றனர். மறுமுனையில் தனி ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றார். இருந்தாலும் 42 ரன்களில் நேதன் எல்லிஸ் பந்துவீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிடில் ஆர்டரில் வந்த படிக்கல், ரியான் பராக் ஆகியோரலும் களத்தில் நீடித்து ஆட முடியவில்லை. 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
விறுவிறுப்பான கடைசி 4 ஓவர்கள்
நேதன் எல்லிஸ் 16வது ஓவரை வீசினார். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார் ஹெட்மயர். மறுமுனையில் இம்பாக் பிளேயராக களத்திற்கு வந்த துருவ் ஜுரெலும் சிக்சருக்கு பந்தை விரட்ட, ஆட்டம் சூடுபிடித்தது. 17வது ஓவரை சாம் கரண் வீசினார். ஆட்டத்தில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது அந்த ஓவர். ஹெட்மயர் சிக்சரும் பவுன்டரியுமாக சாம் கரணின் பந்துவீச்சை அடித்து விளாசினார்.
அந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 19 ரன்கள் சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. இந்தமுறை அர்ஷ்தீப் சிங் வீசிய பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரியுமாக விரட்டினார் துருவ் ஜுரெல். அந்த ஓவரிலும் ராஜஸ்தான் 18 ரன்களை சேர்த்தது. கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டன. மீண்டும் சாம் கரண் பந்துவீசினார்.
இந்த முறை நேர்த்தியாகவே வீச முதல் 2 பந்துகளில் ராஜஸ்தானால் பெரிய ஷாட் ஆட முடியாமல்போனது. 3வது பந்தில் ஹெட்மயர் ரன் அவுட். அத்தோடு ராஜஸ்தானின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 192 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பஞ்சாப் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்