ராமர் கோவிலுக்குள் செல்ல பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுப்பு – மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, மத்திய பிரதேசம்: ராமர் கோவிலுக்குள் செல்ல தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு – என்ன நடந்தது?
ராமர் கோவிலுக்குள் செல்ல பட்டியல் பிரிவினருக்கு அனுமதி மறுப்பு – மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

“எங்களுக்கென்று எந்தக் கோவிலும் கிடையாது. இது அவர்களின் கோவில். சிலநேரம் அங்கு போக வேண்டியிருந்தால், வெளியில் இருந்தே சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடுவோம். பாராயணம் படிக்க அனுமதிக்க மாட்டார்கள். கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். தீண்டாமையைக் கடைபிடிப்பார்கள். அதனால்தான் தனியாகக் கோவில்களைக் கட்டினோம்.

பூஜை செய்ய புரோகிதர் யாரும் கிடைக்க மாட்டார்கள். அவர்கள் எங்கள் வீடுகளுக்குக் கூட வர மாட்டார்கள். தேர்தல் வரும்போது எங்களைச் சகோதரர்கள் எனச் சொல்கிறார்கள். வீட்டிற்கு வருவார்கள், கால் மேல் கால் போட்டு உட்காருவார்கள். தேர்தல் முடிந்துவிட்டால், தலித்துகள் விலகியிருக்க வேண்டும் எனச் சொல்வார்கள்.”

மத்திய பிரதேசத்தின் சிஹோர் நகரில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் கெரி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி மக்கள் இவ்வாறு கூறுகிறார்கள். இந்தக் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் தங்கள் குலதெய்வத்தைக் கோவிலுக்கு வெளியிலிருந்தே தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்துப் பேசிய கேரி கிராமத்தைச் சேர்ந்த ரேஷம் பாய், “ராமர் கோவிலுக்குள் எங்களை விடமாட்டார்கள். படிக்கட்டுகளில் ஏற விடமாட்டார்கள். கோவிலுக்குள் போகவும் அனுமதிக்க மாட்டார்கள். ஆண்களுக்குத் திருமணம் ஆனவுடன் ராமர் கோவிலில் தேங்காய் வைக்கப்படுகிறது. இதைச் செய்வதற்கு எங்கள் மகன்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது,” என்று கூறினார்.

இது கேரி கிராமத்தைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல.செஹோர் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் வாழும் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு இது தினசரி விஷயமாக உள்ளது.

மத்திய பிரதேசம்: ராமர் கோவிலுக்குள் செல்ல தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு – என்ன நடந்தது?

கோவிலுக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்களுக்கென புரோகிதர்கள்கூட இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் தங்களுக்கான கோவிலை அவர்களே கட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் 19ஆம் தேதி அருகிலுள்ள முஸ்காரா கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள், பொதுக் குழாயிலிருந்து தண்ணீர் பிடிக்கத் தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

ஆனால், முஸ்காரா விவகாரத்தின் பின்னணியில் சாதியப் பாகுபாடு இல்லையென்று சிஹோர் மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.

இதுகுறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன் சிங், “முஸ்காரா கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் வந்து, அவர்கள் கிராமத்திலுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து எங்கள் இணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். அங்கு சென்று பார்த்தோம். சில சிக்கல்கள் இருந்தன.

கிராமத்தில் 9 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் 7 பழுது பார்க்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் அவற்றின் தொட்டியில் தண்ணீர் நிரப்ப 1,500 மீட்டர் குழாய் தேவைப்படுகிறது. சாதிக் கொடுமை, தீண்டாமை போன்ற பிரச்னைகள் எதுவுமில்லை. மற்ற கிராமங்களில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

தற்போது நீங்களும் ஊடகங்களும் இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவித்துள்ளீர்கள். என்னவென்று விசாரித்து, குழு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்போம். விசாரணையில் என்ன தெரிய வருகிறதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சல்மான் ராவி, சிசோர், மத்திய பிரதேசம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)