வேல் யாத்திரை முதல் செங்கோல் வரை: பா.ஜ.க-வின் உத்திகள் தமிழ்நாட்டில் பலித்தனவா? - காணொளி

வேல் யாத்திரை முதல் செங்கோல் வரை: பா.ஜ.க-வின் உத்திகள் தமிழ்நாட்டில் பலித்தனவா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு வாக்காளர்களை ஈர்க்கப் பல முக்கிய நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி எடுத்தது. அப்படி மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஐந்து முயற்சிகள் என்ன?

1. எல். முருகனின் வேல் யாத்திரை

எல். முருகன் மாநிலத் தலைவராக்கப்பட்டதில் இருந்தே மாநில அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படும் கட்சியாக மாற பாஜக முடிவெடுத்தது தெளிவாகத் தெரிந்தது. யூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டிய அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வேல் யாத்திரை நடத்தினார்.

ஆனால், இதற்கடுத்த சில மாதங்களிலேயே வந்த சட்டமன்றத் தேர்தலில் அது பெரிய அளவிலான வெற்றியாக மாறவில்லை. அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்றது.

2. கே. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை

மக்களவை தேர்தலுக்கு ஓராண்டு இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் வகையில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை மேற்கொண்டார் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை. இந்த யாத்திரை ஃபிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழா பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்க மிகப்பெரிய பொதுக் கூட்டமாக நடத்தப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த யாத்திரையின் போது பெருமளவில் மக்களைச் சந்திப்பது, செய்தியாளர்களைச் சந்திப்பது, வேறு கட்சியின் நிர்வாகிகளை கட்சியில் இணைப்பது என தீவிரமாகச் செயல்பட்டார் கே. அண்ணாமலை.

3. காசி தமிழ்ச் சங்கமம்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் வாரணாசியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐஐடியும் நிதியுதவி செய்தன. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவளிக்கவில்லை என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

ஆனால், இந்த நிகழ்ச்சி ஒரு வெகுமக்கள் நிகழ்ச்சியாக மாறவில்லை.

4. இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செங்கோல்

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாடுதுறை ஆதீனத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கே அழைத்துச் செல்லப்பட்டனர். நேருவிடம் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றத்திலும் நிறுவப்பட்டது. இதன் மூலம், தமிழ் அடையாளத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

5. தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோதியின் வருகைகள்

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோதி. இந்த ஆண்டு ஜனவரியில் துவங்கி, மார்ச் 15ஆம் தேதிக்குள் 6 முறை வருகை தந்தார் பிரதமர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே நடைபெற்றதால், அதற்கு முன்பாக மேலும் சில தடவைகள் வருகை தந்தார் பிரதமர் மோதி. பல பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்கள் நடத்தப்பட்டன.

இருந்தபோதும் தேர்தல் நெருக்கத்தில், பிரதமர் மோதியின் தமிழக வருகை எதிர்பார்த்த உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சென்னையில் நடந்த ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் திரளவில்லை என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

முழு விவரம் காணொளியில்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)