You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ், இஸ்லாமியர் குறித்து பிரதமர் மோதி என்ன பேசினார்? ஏன் சர்ச்சை? முழு விவரம்
பிரதமர் நரேந்திர மோதி இஸ்லாமியர்கள் குறித்து பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தனது உரையில், மோதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தாக்கிப் பேசினார். நாட்டிலுள்ள பெண்களின் தங்கத்தைக் கணக்கிட்டு அதை விநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கூறினார்.
“பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றார்.
மேலும், தனது உரையில், "முன்பு, அவர்களது அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறினர். அதாவது சொத்துக்களை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்? அதிக குழந்தை பெற்றவர்களுக்கு. நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?” என்றார்.
“தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. சகோதர, சகோதரிகளே, இந்த 'அர்பன் நக்சல்' எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்," என்றார்.
அதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கட்சி, மோதி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், "முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோதி பேசும் பொய்களின் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது. பயம் காரணமாக அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார்," என்று பதிவிட்டிருக்கிறார்.
"காங்கிரசின் 'புரட்சிகரமான தேர்தல் அறிக்கை'க்கு அபரிமிதமான ஆதரவு வரத்துவங்கியுள்ளது. நாடு தனது பிரச்னைகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கும். வேலைவாய்ப்பு, குடும்பம் மற்றும் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும். இந்தியா திசைதிரும்பாது," என்று பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேரா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் "நாட்டின் பிரதமர் இன்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற, நீங்கள் பொதுமக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்கள் உத்தரவாதங்கள் பொய், உங்கள் அறிக்கைகள் பொய், உங்கள் வாக்குறுதிகள் பொய்யானவை," என்று கூறியிருக்கிறார்.
மேலும், “இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துகிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘முஸ்லிம்’, ‘இந்து’ என்ற வார்த்தைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்,” என்றார்.
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீதி குறித்த பேச்சுதான் இருக்கிறது. இளைஞர்களுக்கு நீதி, பெண்களுக்கு நீதி, பழங்குடியினருக்கு நீதி, தொழிலாளர்களுக்கு நீதி என்று பேசப்படுகிறது. அதில் பிரதமருக்கு ஆட்சேபனை இருக்கிறது. ஏன்? எங்கள் தேர்தல் அறிக்கை நீதியை காட்டுகிறது. பிரதமருக்கு இது அவரது கடந்த பத்து வருட செயல்களைக் காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் ‘இந்து-முஸ்லிம்’ விளையாட்டு மட்டும் தான் செய்திருக்கிறார். அதற்காக அவர் வெட்கப்படவேண்டும்,” என்றார்.
பவன் கேரா மேலும் கூறுகையில், “இப்படி பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒருவர் வெட்கப்பட வேண்டும். பிரதமரே, உங்கள் பொய்களால் மக்கள் எங்களின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு, அதில் ‘இந்து’ என்று எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் பொய்களைத் தேடுகிறார்கள். மற்றபடி இதுபோன்ற வார்த்தைகள் எங்கள் அறிக்கையிலும் இல்லை, எங்கள் மனதிலும் இல்லை, இந்த சமூகத்திலும் இல்லை,” என்றார்.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)