You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - இரான் இடையே போர் மேகம்: இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்ன செய்கின்றன?
சிரியாவில் உள்ள இரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரான் பதில் தாக்குதல் நடத்தும் என்ற அச்சுறுத்தல் நிலவி வருவதால், இந்தியா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
அதன்படி மறுஅறிவிப்பு வரும்வரை நாட்டுமக்கள் யாரும் இஸ்ரேல் அல்லது இரானுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் இரான் அல்லது இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், "ஏற்கனவே இரான் அல்லது இஸ்ரேலில் வசிப்பவர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இரு நாடுகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், அதிகம் வெளியில் செல்ல வேண்டாம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் இந்திய தூதரகமும் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் யாரும் அனாவசியமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா கூறுவது என்ன?
இஸ்ரேலில் இருக்கும் தனது தூதரக அதிகாரிகளுக்கும் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெருசலேம், டெல் அவிவ் அல்லது பீர்ஷெபா பகுதிகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலில் உள்ள தனது தூதரக பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
இந்த தாக்குதலில் இரானின் மூத்த தளபதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் விரைவில் இரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தங்களுக்கு கிடைத்த உளவுத்தகவலின்படி, இரான் நடத்த உள்ள தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், டஜன்கணக்கான கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் கூட பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைக்க இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா
ஏப்ரல் 1-ம் தேதி டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக கூறப்படுகிறது.
காசாவில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஆயுதமேந்திய பாலத்தீனக் குழுவான ஹமாஸின் ஆதரவாளராக இரான் கருதப்படுகிறது.
காசாவின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா போன்ற பல்வேறு ஆயுதக் குழுக்கள் இந்த பிராந்தியத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அடிக்கடி இஸ்ரேலிய இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தின் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிரியா மற்றும் லெபனானில் உள்ள இரானின் உயரடுக்கு குத்ஸ் படையின் மூத்த தளபதி மற்றும் பிற இராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.
காசாவில் நடந்து வரும் போர் இந்த பிராந்தியம் முழுவதும் பரவாமல் தடுக்க உலகளாவிய இராஜதந்திர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இரான் ‘மிகப்பெரிய தாக்குதலுக்கு' அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கடந்த புதன்கிழமை எச்சரித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு துணையாக நிற்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி பேசினார்.
அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலுக்கு பயணம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது அரசாங்கம் எந்தவொரு பாதுகாப்பு சார்ந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை காயப்படுத்துபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்ய தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் தளபதி எரிக் கேரெல்லா, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிப்பதற்காக சமீபத்தில் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.
அவரது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்று எனவும், ஆனால் "சமீபத்திய முன்னேற்றங்கள் காரணமாக" தேதி மறுதிட்டமிடப்பட்டு முன்னதாகவே அவர் அங்கு சென்றதாக பென்டகன் கூறியுள்ளது.
பிரிட்டன் பேச்சுவார்த்தை
மறுபுறம், பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரூன், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் தொலைபேசி வழியாக பேசுகையில், பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்க வலியுறுத்தினார்.
டேவிட் கேமரூன் தனது உரையாடலில், "இரான் மத்திய கிழக்கை பரந்துபட்ட மோதலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நிலைமையை சரியாக பகுப்பாய்வு செய்யாமல் இருந்தால் அது மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனா, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், மேலும் பதற்றம் அதிகரிப்பது யாருடைய நலனுக்கும் உகந்தது இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த உரையாடலுக்கு பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகிக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது சீனா.
இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு சீனா வெளிப்படையாக தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.
பிரான்ஸ் தடை
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பகுதிகளுக்கு வரும் நாட்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இரானில் பணிபுரியும் தூதரக அதிகாரிகளின் உறவினர்கள் பிரான்சுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)