ஈரோடு கிழக்கு: "ரூ.400 கோடிக்கு வாங்கிய தேர்தல் வெற்றி இது" - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

சீமான் - பிரேமலதா

பட மூலாதாரம், SOCIALMEDIA

பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்க, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர்ந்தார்.

இந்த தொகுதியில் ஏற்கனவே 2016 தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் தென்னரசு, அதேபோல 2011 தேர்தலில் தேமுதிக இந்த தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை இவ்விரு போட்டியாளர்களுமே காங்கிரஸ் வேட்பாளரிடம் ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கினர்.

அதிலும் குறிப்பாக, இத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,804 வாக்குகள் பெற்றுள்ளார்.

"ரூ. 400 கோடிக்கு வாங்கிய வெற்றி இது"

நாம் தமிழர் கட்சி
படக்குறிப்பு, மேனகா நவநீதன்

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் மேனகா நவநீதன்.

"நாங்கள் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை 600 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளோம். ஆளும் கட்சி இந்த தேர்தலுக்கு ரூ. 400 கோடி வரை செலவு செய்துள்ளது. மக்களை பணம் கொடுத்து விலக்கி வாங்கி ஏமாற்றி விட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே அவர்களின் தொகுதியில் வேலை செய்யாமல் இங்கு தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தினார்கள். நாம் தமிழர் கட்சி எப்போதும் மக்களுடன் இருக்கும். இந்த ஒரு மாதத்தில் கொடுத்த பணம் டாஸ்மாக்கிற்கு செலவாகிவிட்டது. அதனால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மளிகை பொருள் வழங்குவதாக டோக்கன் கொடுத்துள்ளார்கள். அதையாவது முழுமையாக வழங்குங்கள் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மக்களின் வறுமைதான் அரசியல் கட்சிகளின் மிகப்பெரிய முதலீடு. பகுத்தறிவு பகலவன் பெரியாரின் ஊரில் சூடத்தின் மேல் சத்தியம் வாங்கிக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். திமுக கூட்டணி பெற்றுள்ள இந்த அமோக வெற்றிக்கு மாபெரும் வெற்றி விழா நடத்துவார்கள். அப்போது தேர்தல் ஆணையத்திற்கும் ஒரு வெற்றி விழா நடத்திவிடுங்கள்.

பண பட்டுவாடா தொடர்பாக நாங்கள் புகார் கொடுத்தபோது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகிருக்காது," என்றார்.

ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி என்ற நம்பிக்கை, கூட்டணிக்குள் நிலவிய அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தேமுதிக, சூட்டோடு சூடாக வேட்பாளரையும் அறிவித்தது.

அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளரைக் களத்தில் இறக்கி முழுவீச்சில் பிரசாரத்தை முன்னெடுத்தது நாம் தமிழர் கட்சி.

தொகுதி முழுவதும் சீமானும், கட்சியின் பிரதிநிதிகளும் காரசாரமான பிரசாரத்தை முன்னெடுத்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக எனப் பிரதான கட்சிகள் அனைத்தையும் சரமாரியாக விமர்சித்து மேடைகள்தோறும் அக்கட்சியினர் உரையாற்றினர்.

தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால், பிரேமலதாவும், அவரது மகன் விஜய பிரபாகரனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுதீஷும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த இரு கட்சிகளின் கூட்டங்களும் சில சர்ச்சைகளையும் சந்தித்தன. சீமான் அருந்ததியர் பற்றி பேசியது, விஜய பிரபாகரன் கூட்டத்தின் போது கோபப்பட்டது உள்ளிட்டவை தேர்தல் களத்தில் பேசுபொருளானது.

நாம் தமிழர் கட்சி

இப்படி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இத்தேர்தலை இவ்விரு கட்சிகளும் எதிர்கொண்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை இருகட்சிகளுக்குமே எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளதா என்றால் சந்தேகமே. அதிலும் குறிப்பாக தேமுதிக கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள்.

எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் அதிமுக இருக்கிறது. அதேபோல இதுவரையிலான முடிவுகளின் படி, தேமுதிகவை நான்காவது இடத்திற்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி. தேமுதிக நான்காவது இடத்தையே பிடித்துள்ளது.

இதில் முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் மற்றும் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தார் தேமுதிக வேட்பாளர் ஆனந்த். அதன்பிறகு அவரது வாக்கு எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இறுதிச்சுற்றின் முடிவில் நாம் தமிழர் கட்சி, 10,804 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 11,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: