You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேக்ஸ்வெல் மாயாஜாலத்தால் ஆஸி.க்கு மீண்டும் ஒரு நம்ப முடியாத வெற்றி - கடைசி ஓவரில் என்ன நடந்தது?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசிப் பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. நடந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைப் போலவே இந்த டி20 போட்டியிலும் மேக்ஸ்வெல் நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
தற்போதைய நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று கெளஹாதியில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் முகேஷ் குமாருக்குப் பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஜெய்ஸ்வால், கெய்க்வாட் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த இரு போட்டிகளிலும் வலுவான தொடக்கத்தை அளித்த ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. கானே ரிச்சார்ட்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், கெய்க்வாட் தலா ஒரு பவுண்டரி அடித்து 14 ரன்களுடன் அதிரடியாகத் தொடங்கினர்.
பெஹரன்டார்ப் வீசிய 2-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 6 ரன்னில், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த இஷான் கிஷனும் நிலைக்கவில்லை. கானே ரிச்சார்ட்சன் வீசிய 3-வது ஓவரில் கவர் திசையில் ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் டக்அவுட்டில் வெளியேறினார். கடந்த 2 டி20 போட்டிகளிலும் அதிரடி அரைசதம் அடித்து கலக்கிய இரு பேட்டர்களும் விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
சூர்யகுமார் அதிரடி ஆட்டம்
3-வது விக்கெட்டுக்கு வந்த சூர்யகுமார், கெய்க்வாட்டுடன் இணைந்தார். சூர்யகுமார் தனது வழக்கமான பாணியில் ஆடி, எல்லீஸ் வீசிய 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.
7-வது ஓவரை தன்வீர் சங்கா வீசினார். தன்வீர் ஓவரை சிறப்பாகப் பயன்படுத்திய சூர்யகுமார் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். ஹார்டி வீசிய 8-வது ஓவரிலும் சூர்யகுமார் 2 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது.
ஹார்டி வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் 39 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 3வது விக்கெட்டை இழந்தது.
கெய்க்வாட் அரைசதம்
அடுத்து திலக் வர்மா களமிறங்கி, கெய்க்வாடுடன் சேர்ந்தார். களமிறங்கிய உடனே திலக் வர்மா அதிரடியாக பேட்டை சுழற்றினார். ரிச்சார்ட்சன் வீசிய 12ஓவரில் 2 பவுண்டரிகளும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியும் என 13 ரன்கள் சேர்த்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும், கெய்க்வாட் நிதானமாக ஆடி அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். சங்கா வீசிய 13வது ஓவரில் கெய்க்வாட் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் என 12 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார்.
ஹார்டி வீசிய 14-வது ஓவரில் திலக்வர்மா ஒரு பவுண்டரியும், கெய்க்வாட் 2 பவுண்டரிகள் விளாசி 4-வது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தத் தொடரில் கெய்க்வாட் அடிக்கும் 2வது அரைசதமாகும். தன்வீர் சங்கா வீசிய 15-வது ஓவரை வெளுத்த கெய்க்வாட் ஒரு சிக்ஸர், தேர்ட்மேன் திசையில் ஒருபவுண்டரி என 11 ரன்கள் விளாசினார்.
திணறிய இந்திய பேட்டர்கள்
டெத் ஓவரை வீச எல்லீஸ் வரவழைக்கப்பட்டார். கட்டுக் கோப்பாகப் பந்துவீசிய எல்லீஸ் இந்திய பேட்டர்களை பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் நெருக்கடி அளித்தார். எல்லீஸ் வீசிய 16-வது ஓவரில் இந்திய பேட்டர்கள் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
பெஹரன்டார்ப் 17-வது ஓவரை மிகுந்த ஒழுக்கத்துடன் வீசினார். லைன் லென்த்தில் துல்லியமாக வீசியதால் கெய்க்வாட், திலக் வர்மா இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டனர். டெத் ஓவரில் ரன் சேர்க்கநினைத்த இந்திய பேட்டர்கள் திணறினர். இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
18-வது ஓவரை ஹார்டி வீசினார். முதல் பந்தை ஸ்லாட்டில் வீசிய உடன் அதை அவுட்சைட் ஆப்சைடில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2வது பந்திலும் கெய்க்வாட் மிட்விக்கெட் திசையில் 2வது சிக்ஸர் விளாசினார். 3-வது பந்தில் கெய்க்வாட் ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடித்து நொறுக்கினார். 5-வது பந்தில் கெய்க்வாட் ஸ்வீப் ஷாட்டில் மீண்டும் சிக்ஸர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய கெய்க்வாட் இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் சேர்த்தார்.
கடந்த இரு ஓவர்களாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கமுடியாமல் திணறிய கெய்க்வாட், மொத்தமாகச் சேர்த்து ஹார்டி ஓவரை புரட்டி எடுத்துவிட்டார்.
19வது ஓவரை எல்லீஸ் வீசினார். 2 பந்துகளை வைடாக வீசிய எல்லீஸ் திலக் வர்மாவை வெறுப்பேற்றினார். எல்லீஸ் ஓவரை அடிக்க முயன்றாலும் திலக் வர்மா, கெய்க்வாட்டால் அடித்து ஆடமுடியவில்லை. 19-வதுஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசிய கெய்க்வாட்
யாரும் எதிர்பாராத விதமாக கடைசி ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். முதல் பந்திலேயே கெய்க்வாட் சிக்ஸர் அடித்து டி20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். 2வது பந்தில் கெய்க்வாட் ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி விளாசினார். 4-வது பந்தில் கெய்க்வாட் லாங்கான் திசையில் இறங்கி வந்து சிக்ஸர் விளாசினார். 5-வது பந்திலும் லெக் சைடில் கெய்க்வாட் அடுத்த சிக்ஸர் அடித்தார். கடைசிப் பந்தில் கெய்க்ட்வாட் பவுண்டரி அடித்து முடித்தார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி 30 ரன்கள் சேர்த்தது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்து(7சிக்ஸர், 13பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 79 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 142 ரன்கள் சேர்த்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல் கடைசி ஓவரை வீசி வாங்கிக்கட்டி கொண்டு 30 ரன்களை வாரிவழங்கினார். ஹார்டி, ரிச்சார்ட்ஸன், சங்கா மூவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வள்ளலாக மாறினர். பெஹரன்டார்ப், எல்லீஸ் மட்டுமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். மற்ற வகையில் கடந்த 2 ஆட்டங்களைப் போலவே ஆஸ்திரேலியப் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது.
ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம்
223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. உலகக் கோப்பையில் கலக்கிய டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டே ஆட்டத்தைத் தொடங்கினர்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரிகள் விளாசி 9 ரன்கள் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார். பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரை ஹெட் வெளுத்து வாங்கினார், இந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி 16 ரன்கள் குவித்து மிரட்டினார்.
3-வது ஓவரிலேயே ரவி பிஸ்னோய் அழைக்கப்பட்டார். அவர் வீசிய அந்த ஓவரில் ஹார்டி 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அச்சறுத்துல் விடுத்தார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய 5-வது ஓவரில் ஹார்டே 16 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த இங்கிலிஸ் ஒரு பவுண்டரியும், டிராவிஸ் ஹெட் ஒரு பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தனர்.
ஆவேஷ் கான் வீசிய 6-வது ஓவரில் இங்கிலிஸ் ஒரு பவுண்டரி விளாசி, ஒரு ரன் எடுத்தார். ஸ்ட்ரைக்கில் இருந்த டிராவிஸ் ஹெட் பவுண்டரி விளாசிய நிலையில் 4-வது பந்தில் ரவி பிஸ்னோயிடம் கேட்ச கொடுத்து 35 ரன்களில் வெளியேறினார்.
பவர்ப்ளே ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கி இங்கிலிசுடன் சேர்ந்தார். ரவி பிஸ்னோய் வீசிய 7-வது ஓவரில் இங்கிலிஸ் 10 ரன்கள் சேர்த்தநிலையில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
விக்கெட் விழுந்தாலும் ரன் ரேட்டை பராமரித்த ஆஸ்திரேலியா
அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கி மேக்ஸ்வெலுடன் சேர்ந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 8-வது ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி என23 ரன்களைச் சேர்த்தார்.
அக்ஸர் படேல், ரவி பிஸ்னோய் அடுத்தடுத்து பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் மட்டுப்பட்டது. இருப்பினும் 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.
அக்ஸர் படேலும், ஆவேஷ்கானும் 11-வது மற்றும் 12-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதால் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஷ் ரன் சேர்க்கத் திணறினர். 13-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார், இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஸ்டாய்னிஷ் கவர் திசையில் அடிக்க முற்பட்டு 17 ரன்னில், சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
5-வது விக்கெட்டுக்கு வந்த டிம் டேவிட் வந்தவேகத்தில் நடையைக் கட்டினார். பிஸ்னோய் வீசிய 14-வது ஓவரில் கவர்திசையில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து டேவிட் டக்அவுட்டில் வெளியேறினார்.
ஆட்டத்தையே மாற்றிய மேக்ஸ்வெல்
15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது. அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 பந்துகளில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல், கேப்டன் மேத்யூ வேட் களத்தில் இருந்தனர்.
ஆவேஷ் கான் வீசிய 16-வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி 13ரன்கள் சேர்த்தனர்.
17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் சிக்ஸரும், 2வது பந்து யார்கராக வீச முயன்று ஸ்லாட்டில் விழுந்ததால், லெக் திசையில் மற்றொரு சிக்ஸரும் விளாசியதால் 16 ரன்கள் சேர்த்தனர்.
18 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா 18-வது ஓவரை வீசினார். அருமையாகப் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா பவுண்டரி, சிக்ஸர் ஏதும் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். இதனால் மேக்ஸ்வெலும், மேத்யூ வேட் இருவரும் வெறுப்படைந்தனர். பிரசித் கிருஷ்ணா அற்புதமாகப் பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதனால் கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 22 ரன்
19-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். முதல் பந்தில் மேத்யூவேட் பவுண்டரி விளாசி 2வது பந்தில் பவுண்டரிக்கு மேத்யூ முயற்சிக்க 2 ரன்கள் கிடைத்தது. 3-வது பந்தில் மேத்யூவேட் பவுண்டரி விளாச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. அக்ஸர் படேல் வீசிய 4-வது பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. இஷான் கிஷன் ஸ்டெம்புக்கு முன் தனது கிளவை கொண்டுவந்ததால் நோபாலாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ப்ரீஹிட் பந்தில் மேத்யூவேட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
5-வது பந்தில் மேத்யூ ஒரு ரன் எடுக்க, கடைசிப் பந்தை மேக்ஸ்வெல் சந்தித்தார். மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட் ஷாட் அடிக்க முற்பட்டு பந்து தவறியது இதைப் பிடிக்க இஷான் கிஷன் தவறியதால் பைஸ் மூலம் 5 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தது. 19-வது ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 22 ரன்கள் சேர்த்தது.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஒரு நம்ப முடியாத வெற்றி
இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாததால், 4 பீல்டர்கள் மட்டுமே டீப் திசையில் நிற்க அனுமதிக்கப்பட்டது. கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் மேத்யூ வேட் பவுண்டரி விளாச, 2வது பந்தில் மேத்யூ வேட் ஒரு ரன் எடுத்தார்.
3-வது பந்தை சந்தித்த மேக்ஸ்வெல் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 3 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி 2 பந்துகளில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விளாச ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகே சென்றது. மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் விளாசினார்.
கடைசிப் பந்தில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி விளாச ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உறைந்துபோய் நின்றனர். பிரசித் கிருஷ்ணா கடைசி ஓவரில் 23 ரன்கள் வழங்கினார்.
கடைசி ஓவரை விளாசி மேக்ஸ்வெல் 30 ரன்கள் வாரி வழங்கினார். ஆனால் பேட்டிங்கில் ஒற்றை மனிதராக இருந்து, 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து(8 சிக்ஸர், 8பவுண்டரி) சேர்த்து மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். மேத்யூவேட் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணித் தரப்பில் ரவி பிஸ்னோய் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா ஓவருக்கு 12 ரன்களை வாரி வழங்கினார். அக்ஸர் படேல் நடுப்பகுதியில் சிறப்பாக வீசி கடைசி ஸ்பெல்லை சொதப்பிவிட்டார், பிரசித் கிருஷ்ணாவும் தனது கடைசி ஓவரை மோசமாக வீசி 23 ரன்களை வாரி வழங்கினார்.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம்?
கடைசி 3 ஓவர்கள் வரை இந்திய அணியின் ஆதிக்கமே இருந்தது. 18 பந்துகளில் ஆஸ்திரேலிய அணிவெற்றிக்கு 49ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவரும், பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரும்தான் ஆட்டத்தை மாற்றிவிட்டன.
அதிலும் அக்ஸர் படேல் வீசிய 19-வது ஓவரில் 4வது பந்தில் இஷான் கிஷன் செய்த தவறால் நோபால் அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தில் மேத்யூ வேட் சிக்ஸர் அடித்ததும் கடைசிப்பந்தை பைஸ் மூலம் இஷான் கிஷன் 5 ரன்கள் கோட்டைவிட்டதும் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த இரு பந்துகளில் மட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது, இரு பந்துகளையும் ஒழுங்காக வீசி ரன் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் பக்கம் ஆட்டம் திரும்பியிருக்கும். அதிலும் இஷான் கிஷன் ஸ்டெம்புக்கு முன் தனது கையைக் கொண்டுவந்து பிடித்தது நோபாலாக அறிவிக்கப்பட்டதும், பைஸ் விட்டதும் தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.
அதேபோல மேக்ஸ்வெல் ஃபார்ம் குறித்து நன்கு தெரிந்து பிரசித் கிருஷ்ணா யார்கராக வீச முற்படாமல் ஸ்லாட்டில் வீசியது பெரிய தவறாகும். மேக்ஸ்வெலலுக்கு வீசிய 3 பந்துகளிலும் 14 ரன்களை பிரசித் கிருஷ்ணா வாரி வழங்கியது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகும். பீல்டர்களை ஒருபுறம் நிறுத்திவிட்டு பிரசித் கிருஷ்ணா வேறுபக்கம் ஏன் பந்துவீசினார் என்பது தெரியவில்லை.
மேக்ஸ்வெல் மாயாஜாலம்
உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது கம்மின்ஸுடன் சேர்ந்து மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் ரசிகர்களை உறைய வைத்தது. மேக்ஸ்வெல் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு சிரமத்துடனே பேட் செய்தாலும், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதுபோன்ற ஆட்டத்தை கவுகாத்தி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் நிகழ்த்தியுள்ளார்.
இந்திய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் வந்தநிலையில், மேக்ஸ்வெல் என்ற ஒற்றை மனிதர் செய்த மாயஜாலம், ஆட்டத்தை ஆஸ்திரேலிய பக்கம் திருப்பியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)