'ஹமாஸ் வீழும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும்'- இஸ்ரேல் பிரதமர் விடுத்த எச்சரிக்கை
"சனிக்கிழமை நண்பகலுக்குள் ஹமாஸ் இஸ்ரேல் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவில்லை என்றால், போர்நிறுத்தம் முடிவுக்கு வரும். ஹமாஸ் வீழும் வரை இஸ்ரேல் ராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும்."
பணயக்கைதிகளை விடுவிப்பதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக ஹமாஸ் விடுத்த அறிவிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய வார்த்தைகள் இவை.
ஹமாஸ் கடந்த திங்கட்கிழமை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும், 'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப் போவதாகவும் அறிவித்தது.
ஹமாஸை எச்சரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பரிந்துரைத்தார்.
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் அதிபர் என்ன பேசினார்? அதன் பின்னணி என்ன என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
ஹமாஸூக்கு பதிலளிக்கும் விதமாக காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் விடுவிக்க வேண்டிய 76 பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பக் கோருகிறாரா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இஸ்ரேலிய அமைச்சர் மிரி ரெகேவ் அனைத்து பணயக்கைதிகளையும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஹமாஸ் தரப்பு, "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும், எந்தவொரு சிக்கல்களுக்கும் அல்லது தாமதங்களுக்கும் இஸ்ரேல் தான் பொறுப்பு" என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகவும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் காஸா குற்றம்சாட்டியதை இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஒருவேளை ஹமாஸ் அறிவித்தது போல, பணயக்கைதிகளை சனிக்கிழமைக்குள் திருப்பி அனுப்பாவிட்டால், "பேரழிவு வெடிக்கும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் நான்கு மணி நேர கூட்டத்திற்குப் பிறகு, நெதன்யாகு ஒரு காணொளி அறிக்கையில் "அதிபர் டிரம்பின் கோரிக்கையை வரவேற்பதாக" கூறினார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



