You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரவு முழுவதும் தொடர்ந்த வெடிப்புச் சத்தம்: பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மக்கள் கூறுவது என்ன?
பஞ்சாபின் பதான்கோட், குர்தாஸ்பூர் மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் மே 8 மற்றும் 9ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பலத்த வெடிப்பு சத்தங்களைக் கேட்டதாக கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்டிகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சைரன்கள் ஒலிக்கப்பட்டன. எனினும், இதில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இவை பட்டிண்டாவில் உள்ள பீர் தலாப் கிராமத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள். வெடிப்புக்குப் பிறகு விவசாய நிலத்தில் ஒரு கனமான பொருள் விழுந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
அது விழுந்தபோது, தீ பிடித்தது. எங்கள் வீட்டுக்கு வெளியே உள்ள வயலில் விழுந்தது. நாங்கள் அங்கு சென்ற போது, புகை மற்றும் தீப்பிழம்புகள் தெரிந்தன. நாங்கள் அரசுக்கு தகவல் கொடுத்தோம். மக்கள் இங்கு கூடினர். அது பெரிய வெடிப்பு. மக்கள் தள்ளி இருக்கும்படி குருத்வாராவில் அறிவிப்பு வெளியிட்டோம் என்று பீர் தலாப் கிராமத்தைச் சேர்ந்த ரமன்தீப் சிங் தெரிவித்தார்.
ஜலந்தரில் வசிப்பவர்களும் இரவு பலத்த சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.
இரவு 9 மணியளவில் வானத்தில் நெருப்பைக் கண்டோம். பலர் அதை பார்த்தார்கள், ஆனால் பாதுகாப்புக்காக நாங்கள் உள்ளேயே இருந்தோம். பயமாக இருந்தது. சைரன்கள் மற்றும் வெடிக்கும் சத்தத்தையும் கேட்டோம் என்று உள்ளூர்வாசியான ராகேஷ் குமார் தெரிவித்தார்.
இரவு 9.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தபோது பெரிய சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தபோது, திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் பயத்தில் இருந்தோம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்களா என பார்த்து இரவு முழுவதும் தூங்கவில்லை என்று கூறுகிறார் ராஜ்விந்தர் கௌர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகரான சண்டிகரில் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. விமானப்படை நிலையத்திலிருந்து எச்சரிக்கை வந்ததாக டிசி அலுவலகம் தெரிவித்தது. குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பால்கனியில் இருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர். உள்ளூர் மக்கள் தங்கள் அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
அனைத்து சுவிட்சுகளும் அணைக்கப்பட்டிருந்தன. போர் நடக்கலாம், கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பயத்தில் இருந்த என் மகளிடம் விவாதித்தேன். நாம் தைரியமாக இருக்க வேண்டும் என்று அவளிடம் கூறினேன் என்று கமலா ராணி தெரிவித்தார்.
நாங்கள் விழிப்புடன் இருந்தோம். இது ஒரு தொழில்நுட்ப போர். டிரோன் தாக்குதல்கள் அமைதியாகவும் துல்லியமாகவும் இருக்கும். நம் பாதுகாப்பு அமைப்பு வலுவானது. நாங்கள் பயப்படவில்லை. பாகிஸ்தான் தாக்குதல்களை நாம் முறியடிக்க வேண்டும் என்று எஸ்.எஸ். கபூர் தெரிவித்தார்.
இரவு முழுவதும் இருந்த மின்தடைக்குப் பிறகு, பஞ்சாபின் பல எல்லை மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு மின்சாரம் மீண்டும் வந்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் எல்லைப் பகுதிகள் உட்பட பஞ்சாபின் சில பகுதிகளில் காவல்துறை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பஞ்சாபில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம், பாகிஸ்தான் படைகள் 2025 மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் மேற்கு எல்லை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் பல முறை போர் நிறுத்தத்தை மீறினர்" என்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதாகவும், போர் நிறுத்த மீறலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7 தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு