You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூர்: தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் பலி- விஜய் கூறியது என்ன?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"10 மணிக்கே கூடிய தொண்டர்கள்" கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தகவல்
கரூரில் தவெக மாநாட்டில் நடைபெற்ற கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய அவர் விசாரணைக்குப் பிறகு முழுமையான தகவல்களை வழங்குவதாகத் தெரிவித்தார்.
காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், "காவல்துறை தரப்பில் எந்த குறைபாடும் இல்லை. சில தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு அரசியல்கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது 150 காவலர்கள் பணியில் இருந்தார்கள். எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நேற்று 500 காவலர்கள் பணியில் இருந்தார்கள்." என்றார்.
மக்கள் அதிக அளவில் கூடியதாக தெரிவித்த அவர், "முன்னர் நடைபெற்ற கூட்டங்களில் 10,000 - 15,000 பேர் வரை கூடினர். அவர்கள் 10,000 பேர் வருவதாகக் கூறியிருந்தார்கள். அதனடிப்படையில் தான் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. 12 மணி என சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் 10 மணியில் இருந்தே மக்கள் கூடியதாக தெரிவிக்கிறார்கள். 25,000 - 30,000 பேர் வரை கூடியிருக்கலாம் எனத் தெரிகிறது. மக்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை, வாகனத்தை பின் தொடர்வதாலும் பல சிக்கல்கள் உள்ளன. அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்." எனத் தெரிவித்தார்.
4 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை
கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 52 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 113 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் மயங்கி கீழே விழுந்தனர்.
பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
இந்த சம்பவம் குறித்து குடியரசு தலைவர், பிரதமர் மோதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர கூட்டம் நடந்தது.
என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரவு 7 மணிக்கு வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிலர் மயக்கமடையத் தொடங்கினர்.
அவர் பரப்புரையை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிறகு, பலர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின.
அதைத் தொடர்ந்து பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தன. தொடர்ச்சியாக மக்கள் பலரும் அதில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பலர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டதை காணொளிகளில் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தமிழக அரசு கூறியது என்ன?
இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் கரூர் செல்வதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்."
"விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும். அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்." என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
விஜய் கூறியது என்ன?
கரூர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.
மோதி கூறியது என்ன?
கரூரில் நடந்த சோகமான நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, "தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்ளுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
''தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி
தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன்." என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கூறியது என்ன?
கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கி வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில், "கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கரூர் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். "நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்."
"நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என அவர் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு