காணொளி: வெனிசுவேலா அதிபரை அமெரிக்கா சிறை பிடித்தது பற்றி இந்தியா கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு - உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?
காணொளி: வெனிசுவேலா அதிபரை அமெரிக்கா சிறை பிடித்தது பற்றி இந்தியா கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமையன்று வெனிசுவேலா அதிபர் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா, "இது எந்தவொரு நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கடுமையான மீறல்" என்று கூறியுள்ளது. மேலும் அமெரிக்கா ஒரு ஆயுத தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

அதேநேரத்தில், "ஓர் இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா வெளிப்படையாக பலத்தைப் பயன்படுத்துவதையும், அதன் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையும் கண்டு தாங்கள் மிகவும் ஆச்சரியப்படுவதாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்" சீனா கூறியுள்ளது.

"இது நாட்டின் தேசிய இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல்" என இரானும் விமர்சித்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் கூறுவது என்ன?

பல லத்தீன் அமெரிக்க தலைவர்கள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula Da Silva), தனது X தளத்தில், "இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டியுள்ளன. சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறி நாடுகளை தாக்குவது, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை நிறைந்த உலகை நோக்கி செல்லும் முதல் படியாகும்" என பதிவிட்டுள்ளார்.

கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), "இந்த தாக்குதல்களை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.

மேலும் கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் (Miguel Díaz-Canel), அமைதியான பகுதி கொடூரமாகத் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "தாய்நாடு அல்லது மரணம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலி நாட்டு அதிபர் காப்ரியல் போரிக் (Gabriel Boric) தனது X தளத்தில் தனது கவலை மற்றும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். மேலும் "நாட்டை பாதித்து வரும் கடுமையான நெருக்கடிக்கு அமைதியான தீர்வு தேவை" எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

வெனிசுவேலா நாட்டின் உள்துறை அமைச்சர் டியோஸ்தாடோ கபெல்லோ (Diosdado Cabello), மக்கள் அமைதியாக இருக்கவும், நாட்டின் தலைமைத்துவத்தையும் ராணுவத்தையும் நம்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், "இந்த தாக்குதல் குறித்து உலகம் குரல் கொடுக்க வேண்டும்" எனவும் அவர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. (Images)

இதற்கிடையில் டிரம்ப் தனக்கும் பிடித்த அதிபர் எனக் கூறிய அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மில்லேய் (Javier Milei) தனது சமூகவலைதளப் பதிவில், சுதந்திரம் முன்னேறுகிறது, சுதந்திரம் தொடர்ந்து நீடிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தனது X தளத்தில், அதிகார மாற்றம் என்பது அமைதியானதாகவும், ஜனநாயக முறையிலும், வெனிசுவேலா மக்களின் விருப்பத்தை மதிப்பதுமானதாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் தரப்பில் சொல்வது என்ன?

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், "மதுரோ ஆட்சியின் முடிவுக்கு தனது அரசு கண்ணீர்" சிந்தாது எனக் கூறியுள்ளார்.

மேலும் சனிக்கிழமையன்று BBC-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் தாக்குதல்களை அவர் கண்டிக்கவில்லை.

அனைத்து உண்மைகளும் தெளிவாகும் வரை காத்திருப்பதாக கூறிய அவர், இந்த தாக்குதல்களில் பிரிட்டன் ஈடுபடவில்லை என்றும், இது குறித்து டிரம்புடன் தான் பேசியதில்லை என்றும் கூறினார்.

ஜெர்மன் சான்செலர் ஃபிரேட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அமெரிக்க நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை சிக்கலானது எனவும், சர்வதேச சட்டம் பொருந்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

"வெனிசுவேலாவில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாக அனுமதிக்கக் கூடாது" எனவும் அவர் எச்சரித்துள்ளார். (Images)

ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரஸ், "சர்வதேச சட்ட விதிகள் மதிக்கப்படாததில் நான் ஆழ்ந்த கவலை கொள்கிறேன்" என்றார். இந்த தாக்குதல்கள் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மனித உரிமைகளையும், சட்ட ஆட்சியையும் முழுமையாக மதித்து, வெனிசுவேலாவில் உள்ள அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய உரையாடலில் ஈடுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில், டெமோக்ராட் கட்சியைச் சேர்ந்த செனட் சிறுபான்மை தலைவர் சக் ஷூமர் கூறுகையில், "தெளிவாக சொல்கிறேன், மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, அடுத்து என்ன செய்யப்படும் என்பதற்கான தெளிவான கூட்டாட்சி திட்டமின்றி ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது பொறுப்பற்ற செயல்" என்றார்.

இந்தியா கூறியது என்ன?

வெனிசுவேலாவில் நடப்பவை ஆழ்ந்த கவலைக்குரியவை. அங்கு நடப்பவற்றை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெனிசுவேலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு