You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இடுக்கு பிள்ளையார் கோவிலின் குறுகிய வாயிலுக்குள் மக்கள் செல்வது ஏன்?
ஜுலை 25ஆம் தேதி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் இடுக்கில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் மணிக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அக்கோவிலின் உள்ளே சென்று வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் இந்த இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் நுழைவுப் பகுதி ஓர் அடி அகலமும், இரண்டு அடி உயரமும் கொண்டது என திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பரணிதரன் கூறுகிறார். மேலும் இந்த குகைப் பாதையில் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பக்தர்கள் உள்ளே சென்று வணங்கி செல்வதாகவும் அவர் கூறினார்.
இந்த கோவில் பெரும்பாலும் ஓர் ஆள் கூட உள்ளே சென்று வர முடியாத அளவில் மிகவும் குறுகலாகவே இருக்கும்.
பெரும்பாலான பக்தர்கள் பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்ல கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வருவார்கள்.
அதேபோல மணோக்குமாரும் குகை வடிவத்தில் உள்ள பகுதியில் படுத்தபடி நுழைந்துள்ளார். அவர் உடல் பருமன் கொண்டவர் என்பதால், குகை பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரின் உயிரிழப்பை தொடர்ந்து கோவில் அருகே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்தார்.
அதில் "பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இடுக்கு பிள்ளையார் கோவிலின் வாயில் மிகக் குறுகலாக உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு