வி.சேகர்: குடும்ப பாத்திரங்களை நாயகர்களாக மாற்றிய இயக்குநர்

- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்த் திரையுலகில் 'குடும்பப் பட இயக்குநர்' எனப் பெயரெடுத்த வி.சேகர், உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 14) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
'பொறந்த வீடா புகுந்த வீடா', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப் போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார்.
"தனது படங்களில் மினி சமூகத்தையே அவர் பிரதிபலித்தார். இது இந்திய அளவில் எந்த இயக்குநரும் செய்யாத ஒன்று" எனக் கூறுகிறார், திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அஜயன் பாலா.
திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட வி.சேகர், 'நீங்களும் ஹீரோ தான்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
முன்னதாக திரைத்துறையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக உறவினர் ஒருவர் மூலமாக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள லேப் ஒன்றில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் பணியாற்றியுள்ளார்.
சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பிறகு இயக்குநர் பாக்கியராஜிடம் உதவியாளராக இணைந்துள்ளார். அவரின் முதல் படமான 'நீங்களும் ஹீரோ தான்' எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. ஆனால், அதன்பிறகு அவர் எடுத்த படங்கள் அனைத்தும் பெண்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப் போச்சு', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'எல்லாமே என் பொண்டாட்டி தான்' உள்பட பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன.

பட மூலாதாரம், https://www.facebook.com/Asokan.n
"கதாநாயக பிம்பம் இல்லாத நபர்களை கதையின் நாயகர்களாக மாற்றினார். அவரது தேர்வாக நாசர், வடிவேலு, லிவிங்ஸ்டன், விவேக் உள்பட சிலர் இருந்தனர். அவரது படத்தின் தலைப்புகளும் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தியே இருந்தன" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் என்.அசோகன்.
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, "கதாநாயக பிம்பத்தை உடைத்து படம் எடுத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அனைவரும் பெரிய நாயகர்களின் பின்னால் ஓடும்போது சாதாரண நடிகர்களை நாயகர்களாக்கினார். நடிகர் கரண் வளர்ந்து கொண்டிருக்கும்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்" என்கிறார்.
"நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் அவரின் படங்கள் இருந்தன. எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள், உறவு முறைகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை அவரின் படங்கள் வெளிப்படுத்தின" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் என்.அசோகன்.
கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த், நடிகை மீனா நடிப்பில் 'ஹெந்தீர் தர்பார்' என்ற படத்தையும் வி.சேகர் இயக்கினார். அவரது படங்களில் கதையுடன் இணைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தது.

பட மூலாதாரம், https://www.facebook.com/ajayanbalabaskaran
"வி.சேகரின் படங்களை இயக்குநர் விசுவின் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாக இருந்தது. விசுவின் படங்கள் பெரும்பாலும் குடும்ப நாடகமாக முடிந்துவிடும். ஆனால், வி.சேகரின் படங்களை அவ்வாறு பார்க்க முடியாது" எனக் கூறுகிறார், திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அஜயன் பாலா.
"சமூகத்தில் உள்ள பிராமணர், பட்டியல் சாதியினர் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் தனது படத்தில் அவர் காட்டியிருப்பார். அந்தவகையில் மினி சமூகமே அவர் படத்தில் இருக்கும். சலவைத் தொழில் செய்பவர், கொசு மருந்து அடிப்பவர் என எளிய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவது அவரின் உத்தியாக இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்திய சினிமாவில் வேறு எந்த இயக்குநரும் செய்யாத பணியாக இதைப் பார்க்கலாம்" எனக் கூறும் அஜயன் பாலா, " அவ்வாறு எடுப்பது மட்டுமல்லாமல் அதை அனைவரும் ரசிக்கும்படியாக மாற்றி வெற்றிப்படமாகவும் கொடுத்தார்" என்கிறார்.
1994 ஆம் ஆண்டு நாசர், ராதிகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' படத்தை வி.சேகர் இயக்கியிருந்தார்.
இதைப் பற்றிப் பேசும் அஜயன் பாலா, "கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்தப் படத்தில் நகைச்சுவையாக காட்டியிருப்பார்" எனக் கூறுகிறார்.
இதே படத்தில் கம்யூனிஸ்ட் ஆக நடிகர் ஜெய்சங்கர் நடித்திருப்பார். "கதாபாத்திரங்களுக்கு சிவப்பு துண்டை அணிய வைப்பது வி.சேகரின் வழக்கமாக இருந்தது. அதன்வழியாக தன்னுடைய எண்ணத்தை அவர் வெளிப்படுத்தினார். பொதுவுடைமை கருத்துகளை வலிந்து திணிக்காமல் இயல்பாக கதைக்குள் கொண்டு வந்தார்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி.
கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்தும் படங்களாக மட்டுமன்றி முற்போக்கு கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலும் வி.சேகரின் படங்கள் அமைந்திருந்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், https://www.facebook.com/devimani.mani
1990 ஆம் ஆண்டு வி.சேகர் இயக்கிய 'நீங்களும் ஹீரோ தான்' படத்தில் இயக்குநர் வ.கவுதமனும் வி.கே.ராமசாமியின் மகனும் நடித்திருந்தனர். "தனது முதல் படத்திலேயே முற்போக்கு கருத்துகளை அவர் இடம்பெற வைத்தார்" எனக் கூறுகிறார், அஜயன் பாலா.
எதார்த்தமான திரைப்படங்களில் கூடுதல் மதிப்பீட்டை வி.சேகரின் படங்கள் பெற்றதாகக் கூறும் அஜயன் பாலா, " 1991 ஆம் ஆண்டு 'நான் புடிச்ச மாப்பிள்ளை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம், குடும்ப உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படமாக இருந்தது" எனக் குறிப்பிட்டார்.
பெண்கள் வாழ்வில் உயர வேண்டியதன் அவசியத்தை வி.சேகரின் படங்கள் வலியுறுத்தியதாகக் கூறும் அஜயன் பாலா, "அவர் படங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் படும் துயரங்களையும் அவர்கள் வாழ்வில் உயர்ந்து நிற்பதையும் அவரின் படங்கள் வெளிப்படுத்தின" என்கிறார்.
"1990 முதல் 2003 வரையில் குடும்பப் படங்களை இயக்கும் வெற்றிகரமான இயக்குநராக வி.சேகர் வலம் வந்தார். ஆனால், அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் பெரிதாக எடுபடவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை கே.கே.நகரில் திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் சரத்குமார் நடித்த 'ஏய்' (2004) உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
"அது தான் அவர் செய்த மிகப் பெரிய தவறாக அமைந்தது. அவரின் வலுவான இடம் என்பது மினிமலிஸ்டிக் ஆன குடும்ப நாடகங்கள் தான். இயக்குநராக இருக்கும் வரையில் நன்றாக இருந்தார். தயாரிப்பில் ஈடுபட்ட பிறகு நஷ்டங்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார், அஜயன் பாலா.
திருவள்ளுவர் கலைக்கூடம் மூலம் சினிமா தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வந்த வி.சேகர் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான செய்தி ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களால் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்குப் பதிவானது. இதே காலகட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 7 சிலைகள் திருடுபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஐஜியாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த வழக்கில் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவரும் அச்சகம் நடத்தி வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல கோடி ரூபாய் மதிப்புடைய எட்டு சிலைகள் மீட்கப்பட்டதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கில் கைதான நபர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டார். ஆனால், "இந்த வழக்கில் எனது தந்தைக்கு எந்தவித தொடர்பும் இல்லை" என அவரின் மகன் காரல் மார்க்ஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"சிலைத் திருட்டு வழக்கில் இருந்து மீள்வதற்கு இயக்குநர் வி.சேகர் மிகவும் சிரமப்பட்டார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் உடல்ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளானார்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































