ஆளுநருக்கு காலக்கெடு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் மறுசீராய்வு மனு?இன்றைய டாப்5 செய்திகள்

இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இன்றைய (14/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

"மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு விரைவில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகிறது", என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இதேபோல மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது", என்கிறது அந்த செய்தி.

தொடர்ந்து அதில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் அவசர சட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது", என்று கூறப்பட்டுள்ளது.

"'உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பால், காலாவதி மசோதாக்கள் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக் கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. எங்களது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்' என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், TNDIPR

ஏப்ரல் 16-ல் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 16) நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது", என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், "பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் இந்தச் சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகார மசோதா, வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி காலதாமதம் செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அதற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழ்நாடு அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் நிறுத்திவைத்து பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல், சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு மசோதாக்களை தாமதப்படுத்த ஆளுநருக்கு தனி அதிகாரம் ஏது மில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது", என்கிறது தினமணியின் அச்செய்தி.

"அதேபோல மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் காலவரையறையை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. இதன்மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

தொடர்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக சனிக்கிழமை அரசிதழில் அறிவிப்பு வெளியானது. வருங்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வர் வசமாகியுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முதல்வர் தலைமையில் வரும் புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி வசமிருந்த அதிகாரங்கள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குச் சென்றடைந்த நிலையில், நடைபெறும் முதல் கூட்டம் இதுவென்பதால் பல்கலைக்கழக அளவில் மட்டுமல்லாது மாநில அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. நிர்வாகம் மற்றும் அதிகார ரீதியாகவும் ஏற்படுத்தப்படவேண்டிய சீரமைப்புகள், மாற்றங்கள் குறித்து சில முக்கிய அறிவிப்புகள் அக்கூட்டத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது", என்கிறது தினமணியின் அந்த செய்தி.

இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் நவீன கேமராக்கள்

"அபராதம் விதிக்கும் வகையில் விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200 இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ. ஐ) மூலம் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 200 கேமராக்களை நிறுவ போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்", என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், " சாலை விபத்து, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்போனுக்கே குறுந்தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அடுத்த கட்டமாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் புகுத்தி உள்ளனர். முதல் கட்டமாக சென்னையில் இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏ.ஐ தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்", என்கிறது அந்த செய்தி.

"தானியங்கி கேமரா உள்பட பல்வேறு கேமராக்கள் சாலையின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் வீதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது வருகிறது. போக்குவரத்து வூதி மீறளை புகைப்படமாக எடுத்து அதை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். இதனால், விதிமீறல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவது உறுதி என்ற எண்ணம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும். வாகன ஓட்டிகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சாலை விதிகளை மீறாமல் நடந்து கொள்வார்கள். இதன் மூலம் விபத்துகளும், விபத்து உயிரிழப்புகளும் வெகுவாக குறையும்", என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"இது ஒருபுறம் இருக்க ரேடார் பொருத்தப்பட்ட சில வாகனங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் 360 டிகிரி அளவுக்கு சுழன்று படம் பிடிக்கும் கேமராக்களும் உள்ளன. இந்த கேமரா பொருத்தப்பட்ட ரேடார் வாகனங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை சந்திப்புகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து வீதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது". என்கிறது அச்செய்தி

இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கிரிப்டோகரன்சி பெயரில் காவல்துறையினரிடம் ரூ. 30 லட்சம் மோசடி

"கிரிப்டோ கரன்சி மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி புதுவை காவல்துறையினரிடம்ப ரூ.30 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்", என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). புதுவை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சுதாகர், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார். உடனே அவர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மேலும் அவர்கள் கூறியது போல பணம் மற்றும் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பல்வேறு தவணைகளாக ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தார்", என்று குறிப்பிடிப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த செய்தியில், "அவற்றில் ரூ.15 லட்சம் ரொக்கமாக கொடுத்து கிரிப்டோ கரன்சி வாங்கி உள்ளார். அதில் அதிகம் லாபம் இருப்பதாக காட்டியுள்ளது. பின்னர் அவர் அந்த கிரிப்டோ கரன்சிகளை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. உடனே அவர் தனக்கு ஆலோசனைகள் வழங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதேபோல் பண்டசோழநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுனிதா பகுதி நேர வேலை மூலம் வீட்டில் இருந்த படியே அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 700-ஐ இழந்துள்ளார். கதிர்காமம் ஆனந்தா நகரை சேர்ந்த நடராஜன் ரூ.46 ஆயிரத்து 900-ம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த செந்தமிழ் ரூ.29 ஆயிரத்து 680-ம், திருபுவனையை சேர்ந்த சக்தி வேல் ரூ.27 ஆயிரத்து 670-ம், முத்தியால்பேட்டையை சேர்ந்த நரேந்திரன் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் இழந்துள்ளார். ஒரே நாளில் 6 பேரிடம் ரூ.35 லட்சத்து 6 ஆயிரத்து 950 மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்", என்கிறது தினத்தந்தியின் அந்த செய்தி.

இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் - 6 பேர் கைது

போதைப்பொருட்களுடன் கூடிய குறித்த படகை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிக்குக் கொண்டு வந்த பிறகு, மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இலங்கை கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை ( ஏப்ரல் 12) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே 6 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 50 வயதுக்குட்பட்ட தெவிநுவர மற்றும் வலஸ்கல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்", என்கிறது அந்த செய்தி.

மேலும் அதில், "சந்தேக நபர்களிடம் இருந்து 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 77 கிலோ 484 கிராம் ஹெராயின் போதைப்பொருள் காவல்துறையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு