'மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் முறைகேடு' - ரூ.60 கோடி சொத்து விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு

பட மூலாதாரம், Getty Images
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"சொத்துக்களின் அரசு வழிகாட்டி மதிப்பு 20 கோடி முதல் 30 ரூபாய் கோடி வரையிலும், தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 60 கோடியாகவும் உள்ளது. சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட இந்தச் சொத்துக்கள் சட்ட வழிகளின் மூலம் மீட்கப்படும்" என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Tamil Nadu Assembly
புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?
செல்லத்துரை அளித்துள்ள புகாரின்படி, 1930-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 'புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி அறக்கட்டளை' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி இந்தச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டன.
மதுரையில் உள்ள அழகர்கோவில் சாலை மற்றும் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் அமைந்துள்ள 'அசோகா விலாஸ்' பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் ஆகிய 1.79 ஏக்கர் சொத்துக்கள் இதில் அடங்கும்.
இந்தச் சொத்தையும் தோட்டத்தையும் வாடகைக்கு விட மட்டுமே அனுமதி உண்டு. எக்காரணம் கொண்டும் அவற்றை விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ அனுமதி இல்லை.
'கடந்த 24.06.2016 அன்று மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், கோவில் பெயரில் இருந்த சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் பட்டா மாற்றம் செய்துள்ளார்' என செல்லத்துரை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து தெரியவந்ததையடுத்து, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டதுடன், இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர், மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்டிஓ) செய்யப்பட்ட மேல்முறையீட்டின் அடிப்படையில், வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கோவில் பெயரிலேயே பட்டா மாற்ற உத்தரவிடப்பட்டது. மேலும், 2021 மார்ச் 22 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் இதற்கு இடைக்காலத் தடையாணையும் பிறப்பிக்கப்பட்டது என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றத் தடையை மீறி பத்திரப்பதிவு
'கோவிலுக்குச் சொந்தமான இந்தச் சொத்தை பதிவு செய்யக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சொக்கிகுளம் சார் பதிவாளர் மற்றும் மதுரை மாவட்டப் பதிவாளருக்கு முன்னரே கடிதம் எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றத் தடையை மறைத்து குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு இடங்களில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என செல்லத்துரை புகாரில் கூறியுள்ளார்.
மேலும், 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜூலை 25 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட மூலாதாரம், ArapporJeyaraman/X
இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் விஏஓ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன் (முறப்பநாடு சார்பதிவாளர்), கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் (வடமதுரை சார்பதிவாளர்) ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2023இல் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், "பத்திரப்பதிவு துறையில் 28வது பிரிவை எப்படி எல்லாம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடித்த ஒன்று இது. இன்னும் இது போல எங்கெல்லாம் கோவில் நிலங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என அரசு விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
1908-ஆம் ஆண்டின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 28-ன்படி, ஒரே ஆவணத்தில் (பத்திரத்தில்) பல்வேறு இடங்களில் உள்ள பல சொத்துகள் இடம்பெற்றிருந்தால், அந்த சொத்துகளில் ஏதாவது ஒரு சொத்து அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திலேயே ஒட்டுமொத்த ஆவணத்தையும் பதிவு செய்யச் சட்டம் அனுமதிக்கிறது.
"சில ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை திருநெல்வேலி, ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு விற்பதாக கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் முறைகேடு இருப்பதாக அறப்போர் இயக்கம் அப்போதைய தலைமைச் செயலர், சென்னை மாநகர காவல்துறை, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், பத்திரப் பதிவுத்துறை செயலர் ஆகியோருக்கு புகார் அளித்தது. அதை விசாரித்த ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு தலைவர், கடந்த 2023, ஜூலையில் அந்தப் பதிவை ரத்து செய்தார்." என்று அறப்போர் ஜெயராமன் கூறினார்.
"அந்தப் புகாரின் ஒரு பகுதியாக தான் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான 1.79 ஏக்கர் நிலம் தொடர்பான முறைகேடு குறித்தும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது. அது தற்போது அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அப்போது செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருந்த நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, ''நிலம் குறித்த ஆவணங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் ஒருவர் மூலம் சட்டரீதியாக சரி பார்த்து உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அதை வாங்குவதாக ஒப்பந்தம் செய்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது வீண் பழி சுமத்துகின்றனர்'' என கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பாக பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரில் 4 பேரை காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































