ஷுப்மன் கில்லுடன் இணைந்து அசத்திய தமிழக வீரர்; ப்ளேஆஃப் சுற்றில் குஜராத் அணி, ஆனாலும் காத்திருக்கும் சவால்

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் டி20 தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. முதல் 2 இடங்களுக்கான போட்டியில் உள்ள அந்த அணிக்கு எந்த இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணிக்கு, லீக் சுற்றில் எஞ்சியுள்ள இரு போட்டிகளும் வெறும் சம்பிரதாய போட்டிகளாகவே இருக்கும். ஆனால், அந்த ஆட்டங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிடும் மற்ற அணிகளுக்கு வாழ்வா சாவா ஆட்டங்களாக இருக்கக் கூடும்.
சுப்மான் கில்லின் அற்புதமான சதம், முகமது ஷமியின் டாப் கிளாஸ் பந்துவீச்சு ஆகியவை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கைகொடுத்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் ஒரு முறை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர். நடராஜன் செய்த தவறால் தப்பிப் பிழைத்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.
கில், சுதர்சன் அபார பார்ட்னர்ஷிப்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் சுப்மான் கில், சாய் சுதர்சனும், பந்துவீச்சில் ஷமி, மோகித் சர்மா ஆகியோர்தான். ஏறக்குறைய பல போட்டிகளுக்குப்பின் விஜய் சங்கருக்குப் பதிலாக இடம் பெற்ற தமிழக வீரர் சாய் சுதர்ஷன் நேற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் சேர்த்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
சுப்மான் கில்- சாய் சுதர்ஷன் இருவரும் சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு நேற்று 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இருவரும் அடித்த ஸ்கோர்தான் குஜராத் அணியின் பிரதானமாகும். இருவரும் பெரும்பாலும் சிக்ஸர் அடிக்காமல் பவுண்டரிகளாக விளாசினார்.
கில் 13 பவுண்டரிகளும், சுதர்சன் 6 பவுண்டரிகளும் விளாசினர். குஜராத் அணி தரப்பில் இருந்து முதல் சிக்ஸர் 11வது ஓவரில்தான் அடிக்கப்பட்டது. கில் தனது சதத்தில் ஒரு சிக்ஸரும், சுதர்சன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தனர். இதில் கில் 22 பந்துகளில் அரைசதம் அடித்தபோதுகூட 9 பவுண்டரிகள்தான் இருந்ததேத் தவிர, சிக்ஸர் ஏதும் அடிக்கவில்லை.
இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்னர் ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
சுப்மான் கில் 56 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அவர் 58 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

பட மூலாதாரம், BCCI/IPL
ரஷித் கானும், சன்ரைசர்ஸும்
மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஹர்திக் பாண்டியா(8) மில்லர்(7), திவேட்டியா (3) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். புவனேஷ்குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. இதில் ஒரு ரன் அவுட் தவிர 3 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய ஒற்றுமை இருந்தது. 2022ல் குஜராத், சன்ரைசர்ஸ் அணிகள் முதல்முறையாக மோதியபோது, ரஷித் கான் கோல்டன் டக்அவுட் ஆகினார், பந்துவீச்சில் 28 ரன்களைக் கொடுத்திருந்தார். அதேபோல இந்த ஆண்டு சீசனிலும் ரஷித் கான் கோல்டன் டக்அவுட் ஆகி, பந்துவீச்சில் 28 ரன்களை வழங்கியுள்ளார்.
நடராஜனால் தப்பிப் பிழைத்த தமிழ்நாடு வீரர்
12-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்தை சாய் சுதர்சன் நேரே அடிக்க, கை அருகே வந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் நடராஜன் கோட்டை விட்டார். இதனால், அவுட்டாவதில் இருந்து தப்பிப் பிழைத்த சாய் சுதர்சன் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். மேலும் 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், மார்கோ ஜேன்சன் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்திலேயே 47 ரன்களில் சாய் சுதர்சன் அவுட்டாகிவிட்டார். அவர் தூக்கி அடித்த பந்தை ஓடி வந்து அபாரமாக கேட்ச் செய்து, தனது முந்தைய தவறுக்கு நடராஜன் பிரயாச்சித்தம் தேடிக் கொண்டார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஒரே ஓவரில் 4 விக்கெட்
புவனேஷ்வர் குமார் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் சுப்மான் கில்(101) ஆட்டமிழந்தார், 2வது பந்தில் ரஷித் கான் வந்தவேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த ரஷித் கான் இதில் ஏமாற்றம் அளித்தார். அடு்த்து களமிறங்கிய நூர் அகமது ரன்அவுட் ஆகி டக்அவுட் ஆகினார். 5வதுபந்தில் ஷமி ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது பேட்டிங் கொலாப்ஸ் என்றுதான் கூற வேண்டும். கில், சுதர்சன் இருவர் சேர்த்த 148ரன்கள், உதரிகள் 13 என 161 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற 8 பேட்ஸ்மேன்கள் சேர்த்த ரன்கள் வெறும் 27 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கில், சுதர்சன் அடித்த ஸ்கோரை வைத்தே டிபெண்ட் செய்துவிடலாம் என்று நினைத்தார்களோ எனத் தெரியவில்லை, மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்க ரன்னைக் கூட தொடவில்லை.
மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்மை
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி, மோகித் சர்மா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஷமி, தயால், மோகித் சர்மா ஆகிய 3 பேரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(64), புவனேஷ்வர் குமார்(27) மார்கண்டே(18) ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
ஷமி வீசிய முதல் ஓவரில் அன்மோல் பிரீத் சிங் 5 ரன்னில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யாஷ் தயால் வீசிய 2வது ஓவரில் அபிஷே சர்மா 5 ரன்னில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
ஷமி வீசிய 3வது ஓவரில் திரிபாதி விக்கெட்டை இழந்தார். கேப்டன் மார்க்ரம் 10 ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பட மூலாதாரம், BCCI/IPL
கிளாசன் கிளாசிக் ஆட்டம்
சன்ரைசர்ஸ் அணியில் ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், தனிஒருவனாக கிளாசன் மட்டும் நிலையாக பேட் செய்து தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்தார். கிளாசன் தனது முதல் 18 பந்துகளில் 23 ரன்களை விளாசிய நிலையில், 35 பந்துகளில் அரைசதம் அடித்து, 44 பந்துகளி்ல் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த சீசன் முழுவதும் சிறப்பாக ஆடிய கிளாசன் 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் 300 ரன்களைக் கடந்த ஒரே பேட்ஸ்மேன் கிளாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகித் சர்மா வீசிய 7-வது ஓவரில் சன்வீர் சிங்(7), அப்துல் சமது(4)ஆகியோர் ஆட்டமிழந்தும், ஜான்ஸன் 3 ரன்னில் வெளியேறிபின் சன்ரைசர்ஸ் அணியை பெரிய சரிவில் இட்டுச் சென்றது. புவனேஷ்வர் குமார், கிளாசன் இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர், 8-வது விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் புவனேஷ்வர், மார்க்கண்டே இருவரும் 9-வது விக்கெட்டுக்கு 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கிளாசன், புவனேஷ்வர் இருவரின் கடைசி நேர பொறுப்பான பேட்டிங்கால்தான் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் 100 ரன்களுக்குள் சுருண்டிரிக்கும்
குஜராத் அணி கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான் ஆட்டத்தால் 8-வது விக்கெட்டுக்குபின் 91 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் அணி 95 ரன்கள் சேர்த்தது.
முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு இல்லை
தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ பவர்ப்ளேயில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் கிளாசன் ஆட்டத்தைப் பார்த்து வென்றுவிடுவோம் என நம்பினோம். எங்களிடம் ஹைகிளாஸ் பந்துவீச்சாளர்கள் இருந்தும், எங்களால் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கில் சிறப்பாக பேட் செய்தார். புவனேஷ்வர் அருமையாகப் பந்துவீசி தனது பங்களிப்பை அளித்தார். கிளாசன் ஆட்டம் சிறப்பாக இருந்தது, அற்புதமான கிரிக்கெட் வீரர். மற்ற வீரர்கள் கிளாசனின் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை. நடராஜனும் சிறப்பாக பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.
"பெருமையாக இருக்கிறது"
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையி்ல் “ எங்கள் வீரர்களைப் பார்த்து பெருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட பல மாற்றங்கள் நடந்துள்ளன. பல்வேறு தருணங்களில் வீரர்கள் பொறுப்புடன் ஆடி வருகிறார்கள். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானவர்கள். எங்கள் பயணத்தில் தவறுகள் நடந்திருக்கலாம்.
ஆனால், நேர்மறையான விஷயங்களை அதிகமாகப் பெற்றுள்ளோம். இந்தப் போட்டியில்கூட சில தவறுகளைச்செய்தோம். நாங்கள் நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தியதால்தான் இங்கு வந்திருக்கிறோம். பந்துவீச்சாளர்களுக்கு வெற்றியில் முக்கியப் பங்கு இருக்கிறது.
பேட்ஸ்மேன்கள் அதிகமாக வெற்றிக்கு பெயரைப் பெற்றுவிடுகிறார்களே என சிலநேரம்நினைப்பேன். ஆனால் ஒரு ஆட்டத்துக்கு 2 ஓவர்கள் சரியாக வீசினாலே போதுமானது, ஆட்டம் மாறிவிடும், அந்த வகையில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தயாராகியுள்ளனர்” எனத் தெரிவித்தார்
இது சுப்மான் கில் ஆண்டு

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றார்.
இந்த ஆண்டே சுப்மான் கில் ஆண்டாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டி20 போட்டியில் சதம் அடித்த கில், மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார், மே மாதம் ஐபிஎல் தொடரில் சதம் அடித்துள்ளார்.
கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, சுப்மான் கில், வங்கதேசத்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டியில் சதம், இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சதம், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதம் மற்றும் இரட்டை சதம், டி20 போட்டியில் சதம், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தற்போது ஐபிஎல் தொடரில் சதம் ஆகியவற்றை விளாசியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் இரு இந்திய பேட்ஸ்மேன்கள் 550 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 575 ரன்களும், 2வதாக சுப்மான் கில் 576 ரன்களும் குவித்துள்ளனர்.
குஜராத்துக்கு செக் வைக்கும் மும்பை
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம், 13 போட்டிகளில் 9 வெற்றி, 4 தோல்வி 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களுக்கு குஜராத் அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால், முதல் இரு இடங்களில் எந்த இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மும்பை மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு எதிராக நடக்கும் ஆட்டத்தின் முடிவில் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களை யார் பிடிப்பது என்பது முடிவாகும்.
ஒருவேளை மும்பை தனது கடைசி இரு லீக்கில் லக்னோ மற்றும் சன்ரைசர்ஸை வீழ்த்தினால் 18 புள்ளிகள் பெறும். குஜராத் அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 20 புள்ளிகளுடன் ப்ளே ஆப்பில் முதலிடம் பெறும்.
ஒருவேளை கடைசி லீக்கில் குஜராத் அணி தோற்கும் பட்சத்தில் மும்பை அணியும், குஜராத்தும் தலா 18 புள்ளிகள் பெற்றிருக்கும் அப்போது நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்றில் முதல் இரு இடங்கள் முடிவாகும்.

பட மூலாதாரம், BCCI/IPL
இன்று முக்கிய ஆட்டம்
ஒருவேளை மும்பை அணி, இன்றைய ஆட்டத்தில் லக்னெள அணியிடம் தோல்வி அடைந்தாலே, ப்ளே ஆப் சுற்றில் முதல் இடத்துக்கு குஜராத் தகுதி பெற்றுவிடும். மும்பை அணி வென்றால்தான் இந்த கணக்குகள் பொருந்தும்.
அதேசமயம், ப்ளே ஆப் சுற்றில் இருந்து 2வது அணியாக சன்ரைசர்ஸ் அணியும் வெளியேறியது. சன்ரைசர்ஸ் அணி தற்போது 8 புள்ளிகளுடன் உள்ளது, இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன, இதில் இரண்டிலும் வென்றாலும், அதிகபட்சமாக 12 புள்ளிகள்தான் பெற முடியும் இது ப்ளே ஆப்சுற்றுக்கு உதவாது. ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியேறியநிலையில் தற்போது சன்ரைசர்ஸ் அணியும் வெளியேறியது.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி அடுத்ததாக தான் மோதும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்திலும், ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெல்லும்பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் பெரிய குழப்பம் ஏற்பட்டு ப்ளே ஆப்சுற்றில் அதிரடி மாற்றங்களும் வரலாம். இவை சன்ரைசர்ஸ் வெற்றியின் அடிப்படையில் முடிவாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























