ஹரியாணா: பொதுத்தேர்வில் பிட் அடிக்க உதவிய உறவினர்கள் - எப்படி நடந்தது?
ஹரியாணாவில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களது நண்பர்களும் உறவினர்களும் துண்டு சீட்டுகளில் விடைகளை எழுதி கொடுத்து உதவிய சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் ஹரியாணா பள்ளி கல்வித்துறையின் கீழ் வரக்கூடிய பள்ளிகளில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு இந்தி மொழி தேர்வுகள் கடந்த 6 மற்றும் 7-ம் தேதி நடந்தன.
இந்த தேர்வுகளின் போது மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து தேர்வு எழுதிக்கொண்டிருக்க மாணவர்களின் நண்பர்களும் உறவினர்களும் பள்ளியின் சுவர்களிலும் ஜன்னல்களிலும் ஏறி விடைகள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகளை மாணவர்களுக்கு கொடுக்கும் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஹரியாணா மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால், "இந்த சில சம்பவங்களை தவிர்த்து மாநிலத்தில் வேறு எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை தலைமை அதிகாரியிடம் நான் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளேன்," என தெரிவித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சி, "பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் இந்த வெட்கக்கேடான சம்பவம் நடந்துள்ளது. தேர்வுகளில் ஏமாற்றும் வேளைகளில் ஈடுபடும் மற்றும் வினாத்தாள்களை கசியவிடும் மாஃபியாக்களால் பாஜக அரசுகள் சூழப்பட்டுள்ளன. இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகாரத்தின் துணை இல்லாமல் நடக்காது" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



