ட்விட்டர் 'சி.இ.ஓ. பதவிக்கு முட்டாளை' தேடும் ஈலோன் மஸ்க்

பிரசுரிக்கப்பட்டது

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து தான் விலகலாமா என்று ஈலோன் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சி.இ.ஓ. பதவியில் இருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் மஸ்க் பதவி விலக வேண்டும் என்றும் 42.5 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டாம் என்றும் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் , ''இந்த பதவியை ஏற்கும் அளவுக்கு வேறொரு முட்டாள் கிடைத்ததும் சி.இ.ஓ. பதவியை நான் ராஜினாமா செய்வேன். அதற்கு பின்னர், மென்பொருள் மற்றும் சர்வர்ஸ் அணிகளை நான் நிர்வகிப்பேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈலோன் மஸ்க்கை பொருத்தவரை சமூக ஊடகத்தை நிர்வகிக்கும் நபரை கண்டுபிடிப்பது என்பது சவால் மிகுந்த ஒன்றாகும். ஒரு சிலர், ட்விட்டரின் இணை-நிறுவனர் ஜேக் டோர்சி மீண்டும் அந்நிறுவனத்தை நிர்வகிக்க திரும்பலாம் என்று ஊகித்துள்ளனர். அவர் கடந்த 2021ம் ஆண்டு தனது தலைமை நிர்வாகி பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மஸ்கின் வாக்கெடுப்பை தொடர்ந்து அவர், ட்விட்டரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வேலையை யாரும் விரும்பவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். தற்போதைய இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய். அதன்பின், ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ஏறக்குறைய டிவிட்டர் ஊழியர்களில் பாதிபேரை அவர் பணி நீக்கம் செய்துள்ளார். இதேபோல், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் 'ப்ளூ டிக்' பெற மாதம்தோறும் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் சிறிதுகாலம் இத்திட்டத்தை நிறுத்தி வைத்த அவர் கடந்த வாரம் மீண்டும் துவங்கியுள்ளார்.

ட்விட்டர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அவரது அணுகுமுறையை மக்கள் உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன. வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அவர் எடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்விட்டர் ஊடகம் குறித்த செய்திகளில் கவனம் செலுத்திவந்த சில ஊடகவியலாளர்களின் டிவிட்டர் சமூக ஊடக கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈலோன் மஸ்கிற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

ஊடக சுதந்திரம் என்பது ‘பொம்மை அல்ல’ என்று ஐ.நா. தெரிவித்திருந்த அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதிக்கப்படும் என்று ட்விட்டரை எச்சரித்திருந்தது. பல வாரங்களாக, முதலீட்டாளர்கள் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை நிர்வகிப்பதில் இருந்து விலகுமாறு மஸ்க்கை கேட்டு வந்தனர். அவர் டெஸ்லாவை சரியாக இயக்குவதில் இருந்து திசைதிருப்பப்பட்டதாகக் கூறினர். கடந்த ஆண்டில் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 65%க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக மஸ்க் பல பில்லியன் டாலர் மதிப்பிலான தனது டெஸ்லா பங்குகளை விற்றார். இதனால் பங்குகளின் விலை கீழே சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: