You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அடுத்த திட்டம் என்ன?
இஸ்ரேல் மீது இரான் நடத்திய வான்வழி தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சற்று ஆசுவாசத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனில் பணிபுரியும் ஏழு உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தனது கூட்டாளியான இஸ்ரேல் மீது பொறுமையை இழக்கச் செய்ததாக பார்க்கப்பட்டது. இஸ்ரேலின் போர் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் தெரிவித்தார்.
அதே நாளில், டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்த தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்யும் சட்ட மரபுகளை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இரான் தெரிவித்தது. இதற்கு முன்பும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல்களின்போது இத்தகைய எச்சரிச்சைகளை இரான் விடுத்திருந்தது. ஆனால், அவை வார்த்தை அளவில் மட்டுமே இருந்தது, செயலாகவில்லை.
இதற்கு மத்தியில் காஸாவில் உள்ள அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன் குழுவினரின் உயிரிழப்பு போன்றவை காரணமாக டமாஸ்கஸ் தாக்குதல் இரானை தாண்டி பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனில் பணியாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஒரு ஆவேச அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
அவர் சீற்றத்துடன் இருப்பதாகவும் மனமுடைந்துவிட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இஸ்ரேல் பிரதமருடனான காட்டமான தொலைபேசி உரையாடலில், காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும், அதிகளவில் எல்லை கடப்புகளை இஸ்ரேல் திறந்துவிட வேண்டும், வடக்கு காஸாவில் உணவின்றி பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் அமைந்திருக்கும் அஷ்டோதில் (Ashdod) உள்ள துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என பைடன் பேசினார்.
இந்த சூழல் மாறும் என நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். இருந்தபோதிலும், இஸ்ரேல் வேறொரு விவகாரத்தால் ஸ்தம்பித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)