மோதி வழக்கமாக செய்யாத அரசியலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நரேந்திர மோதியின் அரசியல் வாழ்க்கையில் தோல்விகள் மிகவும் அரிதாகவே இருந்துள்ளன.
2001ஆம் ஆண்டு அக்டோபரில், அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத நிலையில், பாஜக அவரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நியமித்தது.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகே மோதி தேர்தல் அரசியலில் களமிறங்கினார். 2002- ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ராஜ்கோட்-2 தொகுதி இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அது அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் தேர்தலாகும்.
அந்தத் தேர்தலில் அவர் 14,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், 2014ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் வரை அவர் குஜராத் முதலமைச்சராகத் தொடர்ந்தார்.
நரேந்திர மோதி தலைமையில், பாஜக முதல் முறையாக முழுமையான பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சியை அமைத்தது. மேலும், 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்த முதல் நிகழ்வும் அதுவாகும்.
2019 மக்களவைத் தேர்தல், நரேந்திர மோதியின் அரசியல் செல்வாக்கின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது. அவரது தலைமையில் பாஜக 303 இடங்களை வென்றது. 2014 தேர்தலில் அந்தக் கட்சி 282 இடங்களை பெற்றிருந்தது.
ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் மோதியின் அரசியல் பிடி ஓரளவு தளர்ந்தது. அந்தத் தேர்தலில் பாஜக 240 இடங்களுக்கு சுருங்கியது.
2001-ஆம் ஆண்டு முதல் இன்று வரை, நரேந்திர மோதியின் அரசியல் பயணம் மிகவும் மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பாக திகழ்கிறது. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அவர்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் மிகக் குறைவாகவே இருந்துள்ளன.
மோதி பின்வாங்க வேண்டிய சூழ்நிலைகள் அரிதாகவே ஏற்பட்டுள்ளன. 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் எழுந்தன. இருப்பினும், அந்த அழுத்தமும் அவரை பதவி விலகச் செய்யும் அளவுக்கு செல்லவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நரேந்திர மோதியின் அரசியல் செல்வாக்குக்கு சவால்
டெல்லியின் ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம், பிரதமர் நரேந்திர மோதியின் அரசியல் செல்வாக்குக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் அழுத்தத்தால் கல்வி அமைச்சர் பதவி விலக நேரிட்டது.
வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக ஓர் அமைச்சர் பதவி விலகுவது, மோதியின் வழக்கமான அரசியல் பாணிக்கு பொருந்தாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதனால், பிரதமர் மோதி மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அரசியல் நிலைப்பாட்டுக்கு இது குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்னை முக்கிய தேர்தல் விவகாரமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
'நரேந்திர மோதி: தி மேன், தி டைம்ஸ்' நூலின் ஆசிரியரான நிலாஞ்சன் முகோபாத்யாய், "இது மோதிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி. கடினமான, மக்கள் ஆதரவு மிக்க, வலுவான தலைவராக உருவாக்கப்பட்டிருந்த அவரது பிம்பத்திற்கும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது," என்கிறார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய இந்தப் போராட்டம், ஜூலை 20-ஆம் தேதி வன்முறையாக மாறியது. மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடியிலும் ஈடுபட்டனர்.
இந்த வன்முறை சம்பவங்களின் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாகப் பரவின. இதனால் மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே பரவலான அனுதாபம் உருவானது.
பல பாலிவுட் பிரபலங்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்.
இந்தப் போராட்டம் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களாக மாறினார்களா?
கல்வி அமைச்சர் பதவி விலகிய செய்தி சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை எட்டியதும், அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "நாட்டின் இளைஞர்கள் விழித்தெழுந்துள்ளனர். மாற்றத்திற்கான அவர்களின் போராட்டம் தொடரும்," என்று கூறினார்.
பொதுமக்களின் அழுத்தத்திற்கு மோதி அரசு பணிந்தது இதுவே முதல் முறை அல்ல.
வட இந்தியாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல மாதங்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, 2021-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை, சில நாட்களிலேயே அரசை பின்வாங்கச் செய்ய போராட்டக்காரர்களால் முடிந்தது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் போராட்டத்தில் வெளிப்பட்ட கோபம் கேள்வித்தாள் கசிவு விவகாரத்துடன் மட்டும் தொடர்புடையதாக இல்லை என்பதே மோதிக்கு மேலும் கவலை அளிக்கும் அம்சமாகும்.
இந்த இயக்கம், பட்டதாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, இளைஞர்களுக்கு மரியாதைக்குரிய மற்றும் நல்ல ஊதியம் வழங்கும் வேலைகள் இல்லாதது உள்ளிட்ட பரவலான அதிருப்திகளை பிரதிபலித்தது.
யேல் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பேராசிரியரான சுஷாந்த் சிங், பிரிட்டன் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் பேசுகையில், "இந்தப் போராட்டங்களின் இலக்காக மோதி மாறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் இருந்த பலர் முன்பு மோதிக்கு வாக்களித்தவர்களே. அவர்களிடம் மோதி பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் அவர் தங்கள் நம்பிக்கையை சிதைத்துவிட்டார் என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் உணர்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வெளியிட்ட இளைஞர் தொழிலாளர் சந்தை ஆய்வின்படி, 15 முதல் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.
வேலை பெற்றவர்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே நிரந்தர சம்பளப் பணிகளில் உள்ளனர். மேலும், சமூகப் பாதுகாப்பு போன்ற நலன்களைப் பெறுபவர்கள் அதைவிடக் குறைவாக உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
"இளைஞர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பாஜக தெளிவான அணுகுமுறையைக் கண்டறியவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்தத் தலைமுறை இப்போது பாஜகவிடம் கடினமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் இனி பணியத் தயாராக இல்லை," என்று நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.
"16, 17, 18, 19 வயதுடைய இளைஞர்கள் பிரதமர், மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு எதிராக இவ்வளவு கோபத்துடன் இருப்பதை நான் முதல் முறையாகப் பார்க்கிறேன்," என்றும் அவர் கூறுகிறார்.
"இந்தியாவின் எந்த பிரதமருக்கும் எதிராக இத்தகைய கோபத்தை நான் இதற்கு முன் கண்டதில்லை. அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி விமர்சிக்கப்பட்டார். ஆனால் இந்த அளவுக்கு இல்லை. 'மோதி அச்சப்படும்போதெல்லாம் இந்து-முஸ்லிம் பிரச்னையை முன்வைக்கிறார்' என்று இளைஞர்கள் முழக்கமிட்டனர். அப்படிப்பட்ட காட்சியை நான் முதல் முறையாகக் கண்டேன்," என்கிறார் அவர்.
இளைஞர்களிடமிருந்து இத்தகைய சவால் எழுந்துள்ள நிலையில், மோதி அரசியல் ரீதியாக பலவீனமடைந்து வருகிறார் என்று கருதலாமா?
அடுத்த மக்களவைத் தேர்தல் 2029-ஆம் ஆண்டில்தான் நடைபெற உள்ளது. எனவே, மீண்டும் வாக்காளர்களைச் சந்திப்பதற்கு முன், இளைஞர்களின் அதிருப்தியைத் தணிக்க மோதிக்கு போதுமான கால அவகாசம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இளைஞர்களின் கோபத்தை மோதி தணிக்க முடியுமா?
அதற்கான கால அவகாசம் இருந்தாலும், அரசு இன்னும் அதைப் பற்றி தீவிரமாக செயல்படுவதாகத் தெரியவில்லை என்று நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.
"தர்மேந்திர பிரதானுக்குப் பதிலாக கல்வி அமைச்சராக மோதி நியமித்துள்ள நபர், இந்த விவகாரத்தை அவர் தீவிரமாக அணுகுகிறார் என்பதைக் காட்டவில்லை." என்று அவர் கூறுகிறார்.
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை சிஜேபி வெற்றியாகக் கருதலாம். ஆனால் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பு பிரகலாத் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டதை எவ்வாறு பார்க்க வேண்டும்?
எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான முகுல் கேசவன், "ஓர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடையவருக்குப் பதிலாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடையவர் நியமிக்கப்பட்டிருப்பதை வெற்றியாகக் கருத முடியாது என்ற வாதம் நியாயமானதே. ஆனால் இது ஒரு குறியீட்டு வெற்றி. அரசு மிகவும் வலுவாக இருக்கும் சூழலில், குறியீட்டு வெற்றிகள்கூட முக்கியத்துவம் பெறுகின்றன," என்கிறார்.
மேலும், "இந்த இயக்கத்தின் நோக்கம் அரசை மாற்றுவது அல்ல. மக்கள் தங்கள் குரலை உயர்த்தி அரசைக் கேள்வி கேட்க முடியும் என்பதை உணர்த்துவதே அதன் நோக்கம். தங்கள் குரலை ஆட்சியாளர்கள் கேட்கும் அளவுக்கு வலிமையாக எழுப்ப முடியும் என்பதையும் இந்த இயக்கம் நிரூபித்துள்ளது. அந்த வகையில், இது போராட்ட இயக்கத்துக்கான வெற்றியாகும்," என்று முகுல் கேசவன் கூறுகிறார்.
சுஷாந்த் சிங், ஃபைனான்ஷியல் டைம்ஸிடம் பேசுகையில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மாதிரி குறித்து பல கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, மோதி நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் நிலையில் இந்தக் கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன" என்றார்.
சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இருப்பினும், ஆண்டுதோறும் வேலைவாய்ப்புச் சந்தையில் இணையும் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாடு தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.
தெருக்களின் கோபம் வாக்குகளாக மாறுமா?
எனினும், தெருக்களில் வெளிப்பட்ட இந்தக் கோபத்தை தேர்தல் வெற்றியாக மாற்ற எதிர்க்கட்சிகளால், குறிப்பாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால், முடியுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று அரசியல் ஆய்வாளர் ராமு மணிவண்ணன் அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள், குறிப்பாக மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற மிகப்பெரிய வெற்றி, இந்த விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளை விட இன்னும் வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
"மாணவர்களின் போராட்டங்களும் அவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை வன்முறையும் அரசுக்கு எதிரான அதிருப்தியை அதிகரித்துள்ளன. நரேந்திர மோதி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதுடன், தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்," என்றார் ராமு மணிவண்ணன்.
இந்திய இளைஞர்கள் தற்போது தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ளவர்களில் ஐந்தில் நான்கு பேர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.
இதைக் காட்டிலும் கவலைக்குரிய விஷயம், படித்தவர்களிடையே உள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம், படிக்காதவர்களிடையே காணப்படுவதை விட ஒன்பது மடங்கு அதிகமாக இருப்பதாகும்.
மறுபுறம், உண்மையான ஊதிய வளர்ச்சி கிட்டத்தட்ட தேக்கநிலையிலேயே உள்ளது. அரசின் திறன் மேம்பாட்டு திட்டங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்ட 1.6 கோடி பேரில், வெறும் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பொறியாளர்களை பணிநீக்கம் செய்து வருவதுடன், புதிய பணியாளர்களை நியமிப்பதையும் குறைத்துள்ளன.
கடந்த ஒரு தசாப்தமாக, இளைஞர்களின் ஆதரவையே தனது அரசியல் அடித்தளமாக மோதி உருவாக்கியிருந்தார். ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, 100 புதிய நகரங்களை அமைப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஊழலை ஒழிப்பது மற்றும் புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவது போன்ற பல வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார்.
ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வாக்குறுதிகள் குறித்து இளைஞர்கள் இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































