You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய எல்லைப் பகுதிகளில் தற்போதைய சூழல் என்ன?
இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஒப்பந்தம் சில இடங்களில் மீறப்பட்டதாக சனிக்கிழமை இரவு குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்று (மே 11) காலையில் பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலிருக்கும் பிபிசி செய்தியாளர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.
"ஜம்முவின் தெருக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தெருவில் மக்களைக் காண முடிகிறது. முந்தைய இரவைப் பார்க்கும் போது இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. " என ஜம்முவில் இருக்கும் செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறியுள்ளார்.
"ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் இன்று வாகனங்கள் அதிகமாக செல்வதைப் பார்க்க முடிகிறது" என பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் கூறுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சூரன்கோட் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ், "நேற்று முற்றிலும் இந்த இடம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் இன்று மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர ஆரம்பித்துள்ளனர். வாகனங்களைக் காண முடிகிறது. சில உள்ளூர் பேருந்துகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. இங்கு எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்புவது போல் தெரிகிறது." என்று கூறியுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு