ரஷ்யாவின் குண்டுகள் தவறுதலாக சொந்த பகுதியிலும் ஆக்கிரமிப்பு யுக்ரேனிலும் விழுந்தது எப்படி?

ரஷ்யாவின் குண்டுகள் தவறுதலாக சொந்த பகுதியிலும் ஆக்கிரமிப்பு யுக்ரேனிலும் விழுந்தது எப்படி?

பட மூலாதாரம், RUSSIAN DEFENSE MINISTRY

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், விட்டலி ஷெவ்சென்கோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஏப்ரல் 20ம் தேதி, 2023 அன்று நள்ளிரவில், ரஷ்யாவின் பெல்கோரோட் நகரை ஒரு குண்டுவெடிப்பு உலுக்கியது.

சம்பவ இடத்திலிருந்து கிடைத்த சிசிடிவி காட்சிகள், முதலில் ஜெட் எஞ்சினைப் போன்ற ஓர் உரத்த விசில் சத்தத்தைக் காட்டுகின்றன, அதைத் தொடர்ந்து அங்கு ஒரு பெரிய வெடிச்சத்தமும் கேட்கிறது.

இது குடியிருப்புப் பகுதியின் நடுவே ஓர் ஆழமான பள்ளத்தை உருவாக்கியதுடன், அருகில் இருந்த ஒரு கடையின் கூரை மீது ஒரு கார் தூக்கி வீசப்படும் அளவுக்கு அந்தக் குண்டுவெடிப்பு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

பெல்கோரோட் வெடிப்பு என்பது, ரஷ்ய போர் விமானம் தவறுதலாக தனது சொந்த நாட்டுப் பகுதியில் குண்டுவீசியதாகக் கூறப்படும் சம்பவங்களில், ஒப்பீட்டளவில் குறைவாகவே செய்தியாக வெளியான ஒன்றாகும்.

எனினும், இந்தச் சம்பவம் ஒரு பெரிய நகரில் நடைபெற்றதால், இதுபோன்ற மற்ற சம்பவங்களை விட இது அதிகளவில் ஊடகங்களில் வெளியாகியிருக்கலாம்.

பெல்கிரேட் வெடிப்பு என்பது, ரஷ்ய போர் விமானம் தவறுதலாக தனது சொந்த நாட்டுப் பகுதியில் குண்டுவீசியதாகக் கூறப்படும் சம்பவங்களில், ஒப்பீட்டளவில் குறைவாகவே செய்தியாக வெளியான ஒன்றாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த அக்டோபர் மாதம் கார்கிவ் நகரில் கிளைடு வெடிகுண்டு விழுந்ததை அடுத்து, தொழிலாளர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றை ரஷ்ய அதிகாரிகள் ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுயாதீன ஊடக அமைப்பான 'அஸ்ட்ரா'-வின் மதிப்பீடுகளின்படி, பிப்ரவரி 2022-இல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய போர்க்கப்பல்கள் அல்லது போர் விமானங்கள் தவறுதலாகக் குறைந்தபட்சம் 334 குண்டுகளை ரஷ்ய அல்லது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள யுக்ரேனியப் பகுதிகள் மீது வீசியுள்ளன.

அஸ்ட்ரா அமைப்பின்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 26 குண்டுகள் தவறுதலாக வீசப்பட்டுள்ளன.

அஸ்ட்ராவின் தலைமை ஆசிரியர் அனஸ்தேசியா சுமாகோவா பிபிசியிடம், இது அவசர கால சேவை வட்டாரங்கள், நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது ஆவணச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மட்டுமே உள்ளடக்கிய ஒரு கவனமாகத் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு என்று கூறினார்.

உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

சமீபத்திய ஒரு சம்பவத்தில், ரயில் பாதையில் குண்டு விழுந்ததில் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டது. மற்றொரு சம்பவத்தில், ஒருவரது வீட்டின் மீது குண்டு விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

இந்த இரண்டு விபத்துகளும் மே மாதத்தில் யுக்ரேனின் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோடில் இருந்து பதிவாகியுள்ளன.

குண்டுவீச்சு விமானங்கள் யுக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்பின் எல்லைக்கு வெளியே இருப்பதை உறுதி செய்வதற்காக, ரஷ்ய வான்வெளிக்குள் இருந்தபடியே இவற்றை வீசுவது தான் இதன் நோக்கமாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் 2022 பிப்ரவரியில் தொடங்கியது (கோப்புப் படம்)

யுக்ரேனிய வான் பாதுகாப்பைத் தவிர்க்க முயற்சி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ரஷ்யப் போர் விமானங்களில் இருந்து தவறுதலாக வீசப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை கிளைடு குண்டுகள் ஆகும். இவை சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருவிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இவை சிறிய, விரியக்கூடிய இறக்கைகளைக் கொண்டுள்ளன, இதன் மூலம் இந்த குண்டுகளை அதிக தொலைவில் உள்ள ஒரு இலக்கை நோக்கி ஏவ முடியும்.

குண்டுவீச்சு விமானங்கள் யுக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்பின் எல்லைக்கு வெளியே இருப்பதை உறுதி செய்வதற்காக, ரஷ்ய வான்வெளிக்குள் இருந்தபடியே இவற்றை வீசுவது தான் இதன் நோக்கமாகும்.

இந்தக் குண்டுகள் யுக்ரேனில் உள்ள தங்களின் இலக்குகளை அடைகின்றன.

இருப்பினும், இந்தக் குண்டுகளில் உள்ள கிளைடு கருவிகளின் இறக்கைகள் விரியத் தவறும்போது, அவை தங்களின் இலக்குகளை அடைவதற்குப் பதிலாக ரஷ்ய எல்லைக்குள்ளேயே விழுந்துவிடுகின்றன.

'கான்ஃப்ளிக்ட் இன்டெலிஜென்ஸ் டீம்' என்ற சுயாதீன புலனாய்வுக் குழுவின் தலைவர் ருஸ்லான் லேவிவ் கூறுகையில், வெடிபொருட்களில் ஏற்படும் கோளாறு இதற்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் . இந்த வெடிபொருட்கள்தான் ஒரு ஸ்பிரிங்கை இயக்கி, அதன் மூலம் குண்டின் இறக்கைகளை விரியச் செய்கின்றன.

"இத்தகைய சூழ்நிலையில், இந்தக் குண்டுகள் நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களாக நீடிப்பதில்லை, மாறாக நேராக கீழே விழும் சாதாரண குண்டுகளாக மாறிவிடுகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தவறுதலாக வீசப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

இருப்பினும், ரஷ்யா பயன்படுத்தும் மொத்த கிளைடு குண்டுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது சாதாரணமானது தான் என்று ருஸ்லான் லேவிவ் கூறுகிறார்.

"போர்களில் இது ஒரு பொதுவான நிகழ்வுதான். சில நேரங்களில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கூட செயலிழந்து விடுகின்றன" என்று அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, அஸ்ட்ரா வழங்கிய எண்ணிக்கையும் மிக அதிகமாக இல்லை.

இதுகுறித்து ருஸ்லான் லேவிவ், "அவர்களின் மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 100 முதல் 200 வரை உள்ளது, ஆனால் ரஷ்யா ஒவ்வொரு மாதமும் 6,000க்கும் அதிகமான இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்துகிறது" என்றார்.

பெல்கார்ட் பகுதி

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான விபத்துக்கள் நடக்கும் பகுதி

பிபிசி ரஷ்ய சேவையின் பாதுகாப்பு நிருபரான பாவெல் அக்சியோனோவ் கூற்றுப்படி, ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதும் இந்தத் தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இத்தகைய சூழ்நிலையில், விமானங்களின் பராமரிப்புத் தரம் பாதிக்கப்படுகிறது. சாதாரண சூழ்நிலைகளில், ஒரு போர் நடவடிக்கையில் இருந்து திரும்பிய பிறகு, நிபுணர்கள் பல நாட்களுக்கு அந்த விமானத்தை ஆய்வு செய்வார்கள். ஆனால் ஒரு விமானம் தனது பணியை முடித்துத் திரும்பிய உடனே அடுத்த பணிக்கு அனுப்பப்படும்போது, நிலைமை முற்றிலும் மாறாக இருக்கும். இது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரிக்கிறது" என்றார்.

யுக்ரேனின் தொழில் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கார்கிவ் பிராந்தியத்தின் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கோரோடில் தான் பெரும்பாலான தவறுதலான குண்டுவெடிப்புகள் நடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எல்லையின் மறுபுறத்தில் இருந்து ஏவப்படும் ரஷ்ய கிளைடு குண்டுகளின் முக்கிய இலக்காக இந்தப் பகுதி தான் இருப்பதாக நம்பப்படுகிறது.

கார்கிவ் பிராந்திய அரசு நிர்வாகத்தின் தலைவர் ஒலே சினேகுபோவின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூன் 29 வரை, ரஷ்யா இப்பிராந்தியத்தின் மீது 473 கிளைடு குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

யுக்ரேனின் கார்கிவ் நகருக்கு அருகிலுள்ள பெல்கோரோட் பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனின் கார்கிவ் நகருக்கு அருகிலுள்ள பெல்கோரோட் பகுதியில், மே 2024-ல் நடந்த யுக்ரேனியத் தாக்குதலுக்குப் பிந்தைய காட்சிகளின் புகைப்படம்.

உண்மையான தாக்கத்தை மதிப்பிடுவது கடினம்

ரஷ்யாவில் நடக்கும் தவறுதலான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பொதுவாக ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை, மேலும் அதிகாரிகள் இந்தச் சிக்கலை மூடிமறைக்கவே முயற்சிக்கின்றனர்.

அஸ்ட்ராவின் தலைமை ஆசிரியர் அனஸ்தேசியா சுமாகோவாவின் கூற்றுப்படி, ஒரு சம்பவத்தில் பெல்கோரோட் ஆளுநர், உண்மையில் ரஷ்யக் குண்டால் ஏற்பட்ட சேதத்தை யுக்ரேனால் ஏற்படுத்தப்பட்டது என்று தவறாகக் கூறினார்.

சாலையின் நடுவில் விழுந்த குண்டை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுப்பதை மற்றொரு சம்பவத்தில் காவல்துறையினர் தடுத்ததாக சுமாகோவா கூறுகிறார்.

இந்தச் சம்பவங்களைச் சுற்றியுள்ள ரகசியத்தன்மை காரணமாக, இவற்றின் உண்மையான தாக்கத்தை மதிப்பிடுவது கடினமாக உள்ளது.

பொருளாதார இழப்புகளைத் தவிர, இந்தச் சம்பவங்களால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஆனால், ரஷ்யாவின் ஆயுதக் கிடங்கில் உள்ள மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கிளைடு குண்டுகள் நீடிக்கும் வரை, யுக்ரேனுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் தனது போரின் விலையாக இத்தகைய மனித உயிர்கள் பறிபோவதை ரஷ்யா தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு