1971 போர்: காத்திருக்கச் செய்த அமெரிக்க அதிபர் - இந்திரா காந்தி என்ன செய்தார்?
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிற நிலையில் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கையாண்ட விதம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.
அந்த போரின் முடிவாக வங்கதேசம் என்கிற புது நாடு உருவானது. போர் தொடங்கிய குறுகிய காலத்திலே பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. இதனை இந்திரா காந்தி எவ்வாறு சாதித்துக் காட்டினார் என்பது பற்றிய பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் மீண்டும் எழுந்துள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மே 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் ராணுவங்களும் தாக்குதல்களை முறியடித்து வருவதாக பரஸ்பரம் கூறிவருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், நான்கு தினங்களுக்குள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள், சமூக ஊடக பயனர்கள் சிலர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்திரா காந்தி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்துடன், "இந்திரா காந்தி நிக்சனிடம் 'எங்கள் முதுகெலும்பு நேரானது. எந்தவொரு கொடுமையையும் எதிர்கொள்வதற்கான வளங்களும் திறனும் எங்களிடம் உள்ளன. மூன்று-நான்காயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் அமர்ந்துகொண்டு, தங்களின் விருப்பத்தை பின்பற்றுமாறு உத்தரவிடும் காலம் போய்விட்டது' என கூறினார்" என பதிவிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் அப்பதிவில், "இதுதான் தைரியம். இது இந்தியாவுக்காக உறுதியாக நிற்பதும் நாட்டின் மாண்புடன் சமரசம் செய்யாத செயலும் ஆகும்." என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்து, "1971-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம் இது. பாகிஸ்தான் நான்கு தினங்களுக்குப் பிறகு சரணடைந்தது." என பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பாஜகவின் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாள்வியா, "பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததுடன் 1971 போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால் சிம்லா ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. எவ்வித வியூக நன்மையும் இல்லாமல் 99,000 போர் கைதிகளை இந்தியா விடுவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுவதற்கு எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை, எல்லையும் முறையாக முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மீது சுமத்தப்பட்ட அகதிகள் நெருக்கடி மற்றும் போரால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கான நிவாரணம் கோரப்படவில்லை. அந்த சமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். உங்களின் வசதிக்கு ஏற்ப விஷயங்களை கூறுவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் இந்திரா காந்திக்கு இடையேயான கசப்பான உறவு அனைவரும் அறிந்ததே.
1967-இல் டெல்லியில் இந்திரா காந்தியை நிக்சன் சந்தித்தார். அப்போது வெறும் 20 நிமிடங்களில் நிக்சனுடன் இருந்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியிடம், "இன்னும் இவரை நான் எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?" என இந்திரா காந்தி சலிப்புடன் கேட்டதாக, அவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1971க்கு முன்பும் இருவருக்குமான உறவு இப்படித்தான் இருந்தது.
கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இந்திரா காந்தி 1971-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது இந்திரா காந்தியை 45 நிமிடங்கள் காக்கச் செய்தார் நிக்சன்.
வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய வரவேற்புரையில், பிகாரில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்த நிக்சன், கிழக்கு பாகிஸ்தான் குறித்து குறிப்பிடவே இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வெளியுறவு துறையின் மூத்த அதிகாரி மகாராஜ் கிருஷ்ணா ரஸ்கோத்ராவிடம் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபசல் பேசினார்.
ரஸ்கோத்ரா பிபிசியிடம், "அச்சமயத்தில் நான் அங்கு இருந்தேன். இந்திரா காந்தியின் நிலையை காட்டுவதே நிக்சனின் நோக்கமாக இருந்தது. அவர் இந்திரா காந்தியை அவமானப்படுத்த நினைத்தார். ஆரம்பத்திலிருந்தே இருவருக்குமான உரையாடல் நன்றாக இல்லை" என கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவுக்கு அச்சமயத்தில் வந்த ஒரு கோடி வங்க அகதிகள் குறித்தோ, அவர்கள் இந்தியாவுக்கு சுமையாக மாறியது மற்றும் அவர்கள் முகாம்களில் பசியால் வாடுவது பற்றியோ நிக்சன் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. நாங்கள் போரை அறிவிக்க தான் வந்திருக்கிறோம் என அவருக்கு சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம். இந்திரா காந்தியிடம் வெளிப்படையாகவே அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டார்" என்றார்.
இந்திரா காந்தி குறித்து பேசிய அவர், "இந்திரா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அவர் மிகவும் மாண்புடைய பெண்மணி. நிக்சனிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை அவர் சொல்லி விட்டார். கிழக்கு பாகிஸ்தானில் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், அவர்களுக்கு எங்கள் நாட்டில் இடமில்லை என்பதுதான் அவருடைய பேச்சின் சாராம்சம்." என்றார்.
1971-ஆம் ஆண்டு போரில் அமெரிக்கா தனது போர்க் கப்பலை வங்காள விரிகுடா நோக்கி அனுப்பியது.
இத்தாலிய பத்திரிகையாளர் ஒரியானா ஃபல்லாசிக்கு இந்திரா காந்தி பின்னர் அளித்த பேட்டி ஒன்றில், "அமெரிக்கா ஒரு துப்பாக்கி குண்டை சுட்டிருந்தாலோ அல்லது வங்காள விரிகுடாவில் அமர்ந்திருப்பது தவிர வேறு ஏதேனும் செய்திருந்தாலோ, மூன்றாம் உலகப் போர் தொடங்கியிருக்கும். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஒருமுறை கூட மனதில் எனக்கு அந்த பயம் தோன்றவில்லை." என்றார்.
'தி மேன் வூ பாம்ப்ட் கராச்சி' எனும் தன் சுயசரிதையில் அட்மிரல் எஸ்எம் நந்தா, "டிசம்பர் முதல் வாரத்தில் மலாக்கா ஜலசந்தியிலிருந்து ஒரு சோவியத் போர்க் கப்பலும் ஒரு கண்ணிவெடி அகற்றும் கப்பலும் இந்தப் பகுதியை அடைந்தன. 1972-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்க போர்க் கப்பல் இங்கிருந்து வெளியேறும் வரை சோவியத் கடற்படை அதைப் பின்தொடர்ந்தது." என குறிப்பிட்டுள்ளார்.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



