இரானில் இஸ்ஃபஹான் நகரை இஸ்ரேல் குறி வைத்து தாக்கியது ஏன்?
இரான் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
சமீபத்தில் இஸ்ரேல் மீது இரான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் இஸ்ஃபஹான் நகரத்தின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை ஏவுகணை தாக்குதலை தொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரானிய அதிகாரிகளும் ஊடகங்களும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்றதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் அதன் விளைவுகளைப் பற்றிய போதுமான தகவல் கிடைக்கவில்லை. உயிர்ச் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்த சிறிய ட்ரோன்களை பயன்படுத்தியதாக இரான் தரப்பு கூறுகிறது.
இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ராணுவ தளம் அருகே வெடிச் சத்தம் கேட்டதாகவும் உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
குறிப்பாக இஸ்ஃபஹான் நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இரானிய அதிகாரிகளும் ஊடகங்களும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்றதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் அதன் விளைவுகளைப் பற்றிய போதுமான தகவல் கிடைக்கவில்லை. உயிர்ச் சேதம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ராணுவ தளம் அருகே வெடிச் சத்தம் கேட்டதாகவும் உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இஸ்ஃபஹானில் உள்ள ஒரு ஜெனரல் ஒருவரை மேற்கோள் காட்டி, "சந்தேகத்திற்குரிய ட்ரோன் போன்ற வானூர்தியை நோக்கி வான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை,’’ என்று கூறியதாக அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இரானின் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைப் பிரிவுடன் நெருங்கிய தொடர்புடைய இரானின் பகுதி-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையத்தின் வீடியோவை வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இரானின் தேசிய சைபர்ஸ்பேஸ் மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன், ”எல்லைகளுக்கு அப்பால் இருந்து எந்த வான்வழித் தாக்குதலும் நடத்தப்படவில்லை,” என்றார்.
இஸ்ரேல் "குவாட்காப்டர்களை (ட்ரோன்கள்) பறக்கவிட்டு ஒரு அவமானகரமான தோல்வி முயற்சியை மட்டுமே மேற்கொண்டது, அந்த குவாட்காப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன," என்று அவர் விவரித்தார்.
தாக்குதலைத் தொடர்ந்து இரான் உடனடியாக வணிக விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது, ஆனால் அந்தத் தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.
இரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் செயல்படும் பகுதிகளான இராக் மற்றும் சிரியாவிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஆனால் அவை நேரடியாக இஸ்பஹான் தாக்குதலுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிரியாவின் தெற்கில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு தளம் ஒன்று இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் தாம் இருப்பதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்பஹான் மாகாணம் இரானின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பகுதி. அங்குள்ள மிகப்பெரிய நகரத்தால் இந்த பெயரைப் பெற்றது. ஒரு பெரிய விமான தளம், பெரிய ஏவுகணை தயாரிப்பு வளாகம் மற்றும் பல அணுசக்தி நிலையங்கள் எனக் குறிப்பிடத்தக்க இரானிய ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதியில் உள்ளன.
இஸ்ரேல் வழக்கமாக அமெரிக்காவிடம் ராணுவ நடவடிக்கை பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும். இருப்பினும் இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ஜி7 கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஷிங்டனுக்கு "கடைசி நிமிடத்தில் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.
ஆனால் பகிரங்கமாக அமெரிக்கா கருத்து தெரிவிக்கவில்லை.
இரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவி ஒரு வாரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் வழக்கமாக மேற்கொள்ளும் முன்னறிவிப்பில்லாத தாக்குதல்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். காரணம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேலிய வான் பாதுகாப்புப் படைகளால் இரானிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படும்.
ஏப்ரல் 1ஆம் தேதியன்று சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இரானின் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுதான் காரணம் என இஸ்ரேல் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை எனினும் அனைத்து தரப்பாலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



