திமுக இளைஞரணி மாநாடு: ராமர் கோவில் பற்றி ஸ்டாலின் சொன்னது என்ன?

திமுக இளைஞரணி மாநாடு: ராமர் கோவில் பற்றி ஸ்டாலின் சொன்னது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருக்குறள் சொல்வது, பொங்கல் கொண்டாடுவது, அயோத்தியில் கோவில் கட்டுவது இதைச் செய்தால் தமிழ்நாடு மக்கள் ஓட்டுபோட்டுவிடுவார்கள் என ஏமாற்ற நினைக்கிறார்கள். இது பெரியார் மண். என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சேலத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமாக மு.க. ஸ்டாலின், எந்த சட்டங்கள் கொண்டு வந்தாலும் மாநிலங்களின் ஆலோசனைகளை மத்திய பாஜக அரசு கேட்பதில்லை. மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசிப்பது இல்லை என பேசினார். மாநிலங்களை மொத்தமாக ஒலித்துக் கட்டும் முயற்சியை தான் பிரதமர் நரேந்திர மோதி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

பிரதமராக இரண்டு முறை நரேந்திர மோதி தேர்வாகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள் என மு.க. ஸ்டாலின் கூறினார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக என்ன செய்கிறது. கட்சிகளை உடைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது, , ஆளுநர்களைக் கொண்டு குறுக்கு வழியில் ஆட்சி நடத்த பார்ப்பது என எல்லா வேலைகளையும் செய்கிறது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக இந்த மாநாட்டில், நீட் விலக்கு, ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், கல்வி மற்றும் மருத்துவத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், கல்லூரி வேந்தர் பதவி மாநில முதல்வர் வசமே ஒப்படைக்க வேண்டும், குலக்கல்வியை புகுத்தும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்த்துப் போராட்டம் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பெரும்பாலான தீர்மானங்கள் மத்திய அரசையும் பாஜகவையும் சாடும் வகையிலேயே இருந்தது.

தி.மு.கவின் இளைஞரணி மாநாடு, முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சர் உதயநிதிதான் என்பதை காண்பிப்பதற்கான மாநாடு என மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘முதல்வர் ஸ்டாலின் 2007ல் இளைஞரணி மாநாட்டை நடத்திய பின் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதால், உதயநிதிக்கும் அதேபோன்று துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமென எதிர்பார்க்க முடியாது.

மக்களவை தேர்தலுக்கு முன் உதயநிதியை துணை முதல்வராக்கினால், குடும்ப அரசியல் என்ற எதிர்கட்சிகளின் வலுவான குற்றச்சாட்டை முதல்வர் சந்திக்க வேண்டி வரும்.

உண்மையில் உதயநிதிக்கு துணை முதல்வர் என்ற பதவி தேவையே இல்லை. ஏனென்றால் தற்போதே அவர் துணை முதல்வர் அளவுக்கான அதிகாரங்களுடன்தான் வலம் வருகிறார். அதை கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டு தான் செயல்பட்டு வருகின்றனர். ஸ்டாலினுக்கு அடுத்த தலைவர் உதயநிதிதான் என்ற மனநிலையில் தான் கட்சி நிர்வாகிகள் உள்ளனர் என ப்ரியன் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம், ‘‘2007ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 2009 மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை முதன்மை எதிரியாக முன்வைத்து நிறைவேற்றப்பட்டது. இன்று உதயநிதி தலைமையிலான மாநாட்டிலும், வரும் மக்களவை தேர்தலுக்காக, பா.ஜ.கவை முதன்மை எதிரியாக வைத்து தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருணாநிதி திராவிடம் குறித்தும், சனாதனத்துக்கு எதிராகவும் பொது வெளியில் மிக தைரியமாக கருத்தை முன்வைத்தார். அவருக்குப்பின் திராவிட கொள்கைகளை பேசும் தலைவர்கள் குறைந்துவிட்டனர். தற்போது உதயநிதியின் திராவிட கருத்துக்கள், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவில் பிரபலமாகி, தேசிய அரசியலில் பார்க்கப்படும் நபராக உதயநிதியை மாற்றியுள்ளது. அதை வெளிக்காட்டும் விதமாகத்தான் மாநாட்டிலும் தலைவர்கள் பேசியுள்ளனர்,’’ என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறினார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)