You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அவதூறாகப் பேசினாரா சீமான்? - காணொளி
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகள் என சீமான் அண்மையில் பேசியது தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தணிவதற்குள்ளாகவே, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் என்ன உரிமைக்காக போராடியிருக்கிறார்கள்? அவர்களிடம் நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால், எனக்கு வாக்களிப்பார்களா என செய்தியாளர் சந்திப்பில் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் பேச்சுக்கு மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?
மணிப்பூர் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் தேவனின் குழந்தைகள் என்று நாம்தான் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.
"இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான்," எனப் பேசினார்.
சீமானின் இந்தப் பேச்சை பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் மூத்த பத்திரிகையாளர் ஹிந்து என். ராம், இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டித்துள்ளது.
சீமானின் பேச்சை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் கண்டித்துள்ளார்.
இதனிடையே தனது பேச்சு குறித்து ஆகஸ்ட் 1ம் தேதி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த சீமான், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் செல்கிறேன் என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்