சென்னை சூப்பர் கிங்ஸ்: 4 ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் வாகை சூட வாய்ப்புள்ளதா?

பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்றுப் போன சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் சென்னை அணி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர் படை காத்திருக்கிறது.

10 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் 6வது போட்டியாகும். முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கம்பீரமாக வீழ்த்திய உத்வேகத்துடன் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி இருக்கிறது.

அதேநேரத்தில், குஜராத் டைட்டன்ஸிடம் தோற்றுப்போன சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகிறது.

தோனியின் கேப்டன்ஷிப்

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியின் கேப்டன்ஷிப் பற்றி சொல்லவே தேவையில்லை. நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் கிளப் சாம்பியன் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று அவர் கொடுத்திருக்கிறார்.

211 போட்டிகளில் சென்னைக்கு தலைமை தாங்கியுள்ள அவர், 123 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது தோல்வியில் 87 முறை சென்னை அணி தோற்றுள்ளது. கடந்த முறை தவிர, பங்கேற்ற மற்ற அனைத்து தொடர்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி சென்னை அணி அசத்தியுள்ளது.

லக்னோ வீரர்கள் கைல் மேயர்ஸ், மார்க் வுட் அசத்தல்

மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் கடந்த முறை அறிமுகமானதில் இருந்தே வெற்றிகரமான ஒரு அணியாகவே தென்படுகிறது. கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அந்த அணி, இம்முறை டெல்லி கேபிட்டல்ஸை அபாரமாக வீழ்த்தி அசத்தலாகத் தொடங்கியுள்ளது. அந்த வெற்றியில் தொடக்க வீரர் கைல் மேயர்சும், வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆகிய இருவரும் பெரும்பங்கு வகித்தனர்.

ஐபிஎல்-லில் அறிமுகப் போட்டியிலேயே அதகளம் செய்துவிட்ட வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்தவரான கைல் மேயர்ஸ் இன்றைய போட்டியிலும் அசத்தக் காத்திருக்கிறார்.

சவாலான இலக்கைத் துரத்திய எதிரணியான டெல்லி கேபிட்டல்ஸின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியை நிலைகுலையச் செய்த மார்க் வுட்டும் தனது தாக்குதலை தொடரும் உத்வேகத்தில் இருக்கிறார்.

ராகுலின் மோசமான பார்ம் - குயின்டன் டி காக் வருகை

அண்மைக் காலமாக சர்வதேச போட்டிகளில் சொதப்பி, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுலின் சோகம் ஐ.பி.எல். தொடரிலும் தொடர்கிறது. ஆனால், ஐ.பி.எல். தொடர் என்றாலே புது உத்வேகத்துடன் ஆடக் கூடிய அவர், இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்ப மெனக்கெடுவார்.

டி20 வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பதிவு செய்த வரலாற்று வெற்றியில் சதம் அடித்து முக்கியப் பங்காற்றிய குயின்டான் டி காக்கும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியில் இணைந்துவிட்டார்.

இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் அவர் இடம் பெறுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை ஆடும் லெவனில் அவர் இடம் பெற்றால் அவருக்குப் பதிலாக எந்த வெளிநாட்டு வீரரை வெளியேற்றுவது என்பதைத் தீர்மானிப்பதும் கேப்டன் ராகுலுக்கு தலைவலியாக இருக்கக்கூடும்.

தோனி பேட்டிங்கில் மீண்டும் அசத்துவாரா?

சென்னை அணியைப் பொருத்தவரை, தோனியின் கேப்டன்ஷிப் குறித்து யாருக்கும் கேள்வி இல்லை. ஆனால், பேட்டிங்கில் அவரது பங்களிப்பு குறித்த விமர்சனம் இருக்கவே செய்கிறது.

சமீப ஆண்டுகளாக தோனியின் பேட்டில் இருந்து பெரிய அளவில் ரன்கள் சேரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தம் தருவதாகவே அமைந்திருக்கிறது.

குஜராத் டைட்டன்சுக்கு எதிரான கடந்த போட்டியில் தோனி அடித்த அபார சிக்சர், அவர் மீண்டும் பார்முக்குத் திரும்புவதற்கான அறிகுறி என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தோனியின் பேட்டில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்களை மீண்டும் அதிக அளவில் பார்க்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சென்னை மைதானத்தில் முதன் முறையாக ஆட காத்திருக்கும் ருதுராஜ்

ஐபிஎல்-ல் கடந்த 3 தொடர்களாக, சென்னை அணிக்கு ரன் குவிக்கும் இயந்திரமாகவே இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மாறிவிட்டார்.

வழக்கமாக, 2 அல்லது 3 போட்டிகளுக்குப் பின்னர் ஃபார்முக்கு வந்து, தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு தொப்பி போட்டியில் குதித்து விடும் அவர், இம்முறை முதல் போட்டியிலேயே அதிரடி ஃபார்முக்கு வந்துவிட்டார்.

எல்லா அணிகளுமே தலா ஒரு போட்டியில் விளையாடி இருக்கும் தற்போதைய நிலையில், கடந்த முறை 93 ரன்களைக் குவித்த ருதுராஜ் வசமே ஆரஞ்சு தொப்பி இருக்கிறது.

2019ஆம் ஆண்டு சென்னை அணியில் இணைந்துவிட்ட அவர் சொந்த மைதானத்தில் களமிறங்குவது இதுவே முதன் முறை. அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை அணியின் துருப்புச் சீட்டாக களத்தில் செயல்படும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த போட்டியில் ஜொலிக்கவில்லை. சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அவருக்கு எப்போதுமே சென்னை ராசியான மைதானம்.

இது சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை ரசிகர்கள் இன்று எதிர்பார்க்கலாம்.

சென்னையை வதைக்கும் வேகப்பந்து வீச்சாளர் பற்றாக்குறை

சென்னை அணியை வழக்கம் போல் வேகப்பந்துவீச்சாளர் பற்றாக்குறை இம்முறையும் வாட்டி வதைக்கிறது. இதனால், பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் யாரைப் பயன்படுத்துவது என்பதில் சென்னை அணி திணறுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

தீபக் சாஹரை தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கடந்த முறை அறிமுகமான இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்ஹர் நம்பிக்கை தருகிறார்.

இலங்கையைச் சேர்ந்த தீக்ஷானா, மதீஷா பதிரானா ஆகியோர் 3 போட்டிகளுக்குப் பிறகே அணியுடன் இணைகின்றனர். மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜாமிசன் காயம் காரணமாக ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டார்.

வேகப்பந்துவீச்சாளர் பற்றாக்குறை பிரச்னையை மனதில் வைத்து, கடந்த ஏலத்தில் சென்னை அணி வரலாற்றில் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுகிறார்.

பந்துவீச முடியாத நிலையில் இருக்கும் அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம் பெறுகிறார். அவர் பந்துவீச முடியாமல் போனது சென்னை அணிக்குப் பேரிழப்பு.

சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?

கேலரி பிரச்னை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றுதான் ஐபிஎல் போட்டிகள் அரங்கேறுகின்றன.

இந்த மைதானம் எப்போதுமே சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாக உள்ளது. பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சற்று அனுகூலமாக இருக்கும்.

சென்னை அணிக்குள்ள வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை இதனால் சற்று மட்டுப்படும். சென்னை அணியின் ஆடும் லெவனில் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, மிட்ச்செல் சான்ட்னர் ஆகியோரது சுழற்பந்துவீச்சு சென்னை அணிக்கு பலமாக இருக்கும்.

அத்துடன், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக உள்ளூரில் விளையாடப் போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உத்வேகப்படுத்த மஞ்சள் சட்டை ரசிகர் படை இப்போதே தயாராக இருக்கிறது.

ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும், இன்றைய போட்டியில் லக்னோ வென்று நடப்பு ஐபிஎல் தொடரில் வீறுநடையைத் தொடங்குவார்கள் என்று நம்பலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: