பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவை ரஷ்யா ஆதரிக்காதது ஏன்?

காணொளிக் குறிப்பு, ரஷ்யா
பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவை ரஷ்யா ஆதரிக்காதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களில் ஆறு முறை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்தியாவை ஆதரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை காஷ்மீர் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. ரஷ்யாவின் எதிர்வினை நடுநிலையானதாக இருக்கிறது.

இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று ரஷ்யா வேண்டுகோள் விடுத்ததுடன் மத்தியஸ்தம் செய்யவும் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எப்போதும் ரஷ்யாவுக்கு வேண்டாத நாடாக இருந்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரில், ரஷ்யா நடுநிலை வகித்து மத்தியஸ்தம் செய்தது.

இந்தியாவுக்கு இந்த முறை ரஷ்யா ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?

இதுவரை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்கள் வந்தபோது, ஆறு முறை ரஷ்யா வீட்டோ செய்துள்ளது. இந்த வீட்டோக்களில் பெரும்பாலானவை காஷ்மீர் தொடர்பானவை.

கோவாவில், 1961இல் போர்த்துகீசிய ஆட்சியை இந்திய ராணுவம் முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்தது. இந்தியாவின் செயலை கண்டித்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கண்டனத் தீர்மானத்தை முன்மொழிந்தது, ஆனால் சோவியத் ஒன்றியம் அதைத் தடுக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

2019 ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தபோதும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தது.

ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. ரஷ்யாவின் எதிர்வினை சமநிலையானதாகவும் நடுநிலையானதுமாக இருக்கிறது.

இரு நாடுகளும் பதற்றங்களைக் குறைக்க வேண்டும் என்று ரஷ்யா இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் மத்தியஸ்தம் செய்யவும் முன்வந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இந்தியா எங்களது மூலோபாய கூட்டாளி, பாகிஸ்தானும் எங்கள் கூட்டாளி. டெல்லி, இஸ்லாமாபாத் ஆகிய இரு நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

மே 3 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. "இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என்று அதில் ரஷ்ய தரப்பு கூறியிருந்தது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தக் கருத்தை சமூகவலைத்தளத்தில் மறுபதிவு செய்த சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான தன்வி மதான், "12 ஆண்டுகளுக்குள், இரண்டு முறை யுக்ரேனைத் தாக்கிய ரஷ்யா, பாகிஸ்தானுடனான சர்ச்சையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்துகிறது" என்று எழுதியிருந்தார்.

தன்வி மதானின் இந்தப் பதிவில் மற்றொரு பயனர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: "ரஷ்யாவுக்கு என்ன ஆயிற்று? யுக்ரேனுக்குச் சென்ற இந்தியப் பிரதமர், ரஷ்யாவும் யுக்ரேனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் உண்மையில் ரஷ்யா போன்ற நீண்டகால நண்பருக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். இதைத்தான் நியூட்டனின் மூன்றாவது விதி என்று சொல்வார்கள். அதாவது நமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டு."

இதற்கு பதிலளிக்கும் தன்வி மதானின் கருத்து இது: "2022 இல் யுக்ரேனுடனான போரில் ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கவில்லை, எனவே ரஷ்யாவும் இந்தியாவை ஆதரிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் சரியல்ல. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, 2019இலும் கூட, அமைதி காக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்த ரஷ்யா மத்தியஸ்தம் செய்யவும் தயாராகவே இருந்தது.

தன்வி மதானின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ORF என்ற சிந்தனைக் குழுவில் இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்த நிபுணரான அலெக்ஸி ஜகாரோவ், இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்: "90களில் இருந்து இந்தியா மீதான ரஷ்யாவின் அணுகுமுறை கலவையானதாகவே உள்ளது. 2002இல், புதின் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றபோது இந்தியா அதை நிராகரித்தது. மாறிவரும் புவிசார் அரசியலைப் பொருட்படுத்தாமல், பதற்றங்களைக் குறைப்பதில் பங்கு வகிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது."

அலெக்ஸியின் கருத்துடன் ஒத்துப்போகும் மாஸ்கோவை தளமாகக் கொண்ட HSE பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் நிவேதிதா கபூர், இவ்வாறு கூறுகிறார்: "அணுசக்தி என்ற விசயத்தில் அலெக்ஸியுடன் உடன்படுகிறேன். ஒரு அணுசக்தி நாடாக, பதற்றங்களைக் குறைப்பதற்காக, சக்திவாய்ந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு ரஷ்யாவிற்கு உள்ளது. இரண்டு அணுசக்தி நாடுகள் போரை நோக்கிச் செல்லும்போது, அமைதிக்கான வேண்டுகோள் வைக்கப்படுவது என்பது இயற்கையானது."

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு டிசம்பர் 2021ஆம் ஆண்டில் தான் கடைசியாக பயணம் மேற்கொண்டிருந்தார். அதாவது, 2022 பிப்ரவரியில் யுக்ரேனுடனான போர் தொடங்கிய பிறகு புதின் இந்தியாவிற்கு வரவில்லை. மறுபுறம், அவர் இரண்டு முறை சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில், அவர் பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் புதின் கலந்து கொள்ளவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா இந்தியாவுடன் ஆண்டுதோறும் ஒரு உச்சிமாநாட்டை நடத்தும், அதுவும் இப்போது வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுவதில்லை.

அண்மை ஆண்டுகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உட்பட ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கும் அமைப்புகளில் இந்தியா தனித்திருக்கிறது.

2024 ஜூலையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் நரேந்திர மோதி கலந்து கொள்ளவில்லை. 2023 இல் SCO இன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்தபோது, அந்த உச்சிமாநாட்டை இந்தியா மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

மறுபுறம், இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் உயர்மட்ட G-20 உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே 68 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றபோதிலும், இந்தியா 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது.

2009 மற்றும் 2013 க்கு இடையில், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 76 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்த நிலையில், 2019 மற்றும் 2020 க்கு இடையில், அது 36 சதவீதம் குறைந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டே கூறுகையில், யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் கூட, இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக இல்லை, ஆனால் ஒருதலைப்பட்சமாக ஆதரவும் தெரிவிக்கவில்லை.

காணொளியில் விளக்கமாகத் தெரிந்துக் கொள்வோம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு