கரூர் கூட்ட நெரிசல் முதல் விஜய் கைதாவாரா என்ற கேள்வி வரை - என்ன நடந்தது? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, கரூர்: தவெக கூட்ட நெரிசலில் 40 பேர் பலி - நடந்தது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் முதல் விஜய் கைதாவாரா என்ற கேள்வி வரை - என்ன நடந்தது? முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்னைக்கு கிளம்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் சி டி நிர்மல் குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் களத்துக்கு சென்ற பிபிசி தமிழ் பேசியது.

இந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களில் கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 2 வயது குழந்தை குருவிஷ்ணுவும் ஒருவர். குழந்தையின் பாட்டி வசந்தா, பிபிசி தமிழிடம் பேசினார்.

"எனது பேரனை அவனின் அத்தை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சாலையின் ஓரமாக தான் அவர் நின்றுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாகி நகரத் தொடங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தனர்." என்று அவர் தெரிவித்தார்.

இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த அவரது அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செப்.28-ஆம் தேதி நள்ளிரவு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், தவெகவினர் விஜயின் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவதாக கூறிய நிலையில் சுமார் 27,000 பேர் வந்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது தொலைக்காட்சியில் பார்த்த போதே தெளிவாக தெரிந்தது என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்றார். அங்கே அவர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. "அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மீண்டும்மீண்டும் இதை தான் சொல்லப் போகிறேன். ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுஅவர் பதில் அளித்தார்.

இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு