"10 நாளில் பாஜக ஆட்சியைக் கவிழ்க்கும்" - அன்வர் ராஜாவின் கணிப்பு

காணொளிக் குறிப்பு, தேர்தலில் அதிமுக வென்றால் 10 நாளில் ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும் - திமுகவில் இணைந்த அன்வர் ராஜா
"10 நாளில் பாஜக ஆட்சியைக் கவிழ்க்கும்" - அன்வர் ராஜாவின் கணிப்பு
பிரசுரிக்கப்பட்டது

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா இன்று திமுகவில் இணைந்தார்.

சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

இவர் சமீபத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்வர் ராஜாவை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, 'தேர்தலில் அதிமுக வென்றால் 10 நாளில் ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும்' என்றார்.

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தார். முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் வக்ஃப் வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் கடந்த காலங்களிலும் பாஜகவுடன் கூட்டணி சேர்வது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு