கோவை, நெல்லை மேயர் தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த திமுக கவுன்சிலர்கள் - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Facebook / KNNehru
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.
இதையும் மீறி நெல்லை, கோவை, காஞ்சிபுரம் உள்பட சில மாநகராட்சி மேயர்களின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதில், நெல்லை மேயர் பி.எம்.சரவணன் மீது மாநகராட்சி பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பதாகவும் ஒப்பந்ததாரர்களை இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் பணி, பாளையங்கோட்டை சந்தை கட்டுமானப் பணி, நெல்லை டவுன் சந்தை கட்டுமானப் பணி உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெற்றது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மீது, மாநகராட்சி பணிகளில் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நெல்லை, கோவை மாநகராட்சிகளின் மேயர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், 'இரு மாநகராட்சிகளுக்கும் அடுத்த மேயர் யார்?' என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சைக்கிளில் வந்த மேயர்
இந்நிலையில், 'ஆகஸ்ட் 5 அன்று நெல்லை மாநகராட்சிக்கு மறைமுக தேர்தல் நடக்கும்' என மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா அறிவித்தார். இந்தப் பதவியைக் கைப்பற்ற பலரும் முயற்சி செய்த நிலையில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக தி.மு.க தலைமை அறிவித்தது.
வார்டு பணிகளை கவனிக்க, சைக்கிளில் மட்டுமே ராமகிருஷ்ணன் பயணிப்பதாக புகைப்படங்களும் வெளியாயின. வேட்புமனு தாக்கலின் போதும் சைக்களிலேயே மாநகராட்சிக்கு வந்தார்.
நெல்லைக்கு மறைமுக தேர்தல் தேதியை மாநகராட்சி ஆணையர் அறிவித்தாலும், அவ்வளவு எளிதாக தேர்தலை நடத்த முடியவில்லை. காரணம், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களமிறங்கியதுதான்.

பட மூலாதாரம், Ramakrishnan
ஆதரவும் எதிர்ப்பும்
மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.,வுக்கு 44 பேரும் அ.தி.மு.க.,வுக்கு 4 பேரும் உள்ளனர்., காங்கிரஸ் கட்சிக்கு 3 பேரும் ம.தி.மு.க.,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 கவுன்சிலரும் உள்ளனர்.
சுயேச்சை கவுன்சிலராக தேர்வான ஒருவர், தி.மு.க., ஆதரவாளராக அறியப்படுகிறார். இவர்களில் சிலர், போட்டி வேட்பாளரான பவுல்ராஜுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அது மறைமுக தேர்தலில் எதிரொலித்துள்ளது.
திங்கள் கிழமையன்று (ஆக.,5) நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளைப் பெற்றார். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தேர்தலில் பங்கேற்கவில்லை.
முன்னாள் மேயர் சரவணன் தாமதமாக வந்ததால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தாமதத்துக்கான காரணத்தை அவர் எழுதிக் கொடுக்கவே, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டார். இந்த தேர்தலில் ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
மறைமுக தேர்தலுக்கு முன்னதாக, நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டிப் பேசினர். கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுமாறு அறிவுறுத்தியும், 23 வாக்குகள் தி.மு.க.,வுக்கு எதிராகப் போனது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை அறிவித்த வேட்பாளருக்குப் போட்டியாக களமிறங்கியது ஏன்? என, பவுல்ராஜிடம் கேட்டபோது "எனக்கு வாக்களித்த 23 பேரும் கட்சித் தலைமையை எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. அவர்கள், நான் மேயராக வர வேண்டும் என விரும்பி வாக்களித்துள்ளனர். மேயராக சரவணன் இருந்த காலகட்டத்தில் மாமன்றத்தில் ஏராளமான பிரச்னைகள் நடந்தன. அதைத் தீர்ப்பதற்கு அமைச்சர் நேரு வந்திருந்தார்.''
''சரவணன் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டேன். இதர கவுன்சிலர்களும் என்னைப் போல புகார்களை தெரிவித்தனர். ஆனால், நான் பிரச்னை செய்வதாக தவறாக புகார் கூறப்பட்டிருந்ததை அமைச்சர் நேருவும் அறிந்து கொண்டார்.''

பட மூலாதாரம், Paulraj
கவுன்சிலர்களுக்கு பணம் கைமாறியதா?
''இதன் பின்னர், 'வார்டுக்கு 1 கோடி ரூபாயை உடனே ஒதுக்குகிறேன். அதற்கு ஆணையாளர் தான் பொறுப்பு' என அமைச்சர் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அடுத்த மூன்றே நாளில் ஆணையரை மாற்றிவிட்டனர். ஆணையரை மாற்றாமல் இருந்திருந்தால் மறைமுக மேயர் தேர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.''
''என்னை ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து நீக்கினர். கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியாததால், அறிவாலயத்தில் மனு கொடுத்தேன். என்னுடைய கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது" என்கிறார்.
கவுன்சிலர்களில் சிலருக்கு நீங்கள் பணம் கொடுத்ததால்தான் உங்களுக்கு ஆதரவாக அவர்கள் ஓட்டுப் போட்டதாக சொல்லப்படுகிறதே? என கேட்டதற்கு, "அது தவறான தகவல். நான் மனுத்தாக்கல் செய்த பிறகு எந்த கவுன்சிலரிடமும் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்யவில்லை. எந்த மாமன்ற உறுப்பினரையும் தனியாக அணுகிப் பேசவில்லை. என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவே மனுத்தாக்கல் செய்தேன்" என்றார்.
அதேநேரம், தற்போதைய மேயருக்கு எதிராக 23 கவுன்சிலர்கள் வாக்களித்திருப்பதால், வரும் நாள்களில் மாமன்ற கூட்டத்தை நடத்துவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், TKS Elangovan
நெல்லை மேயர் சொல்வது என்ன?
இதுகுறித்து, நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, "எனக்கு எதிராக சிலர் வாக்களித்தாலும் அவர்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான கவுன்சிலர்கள்தான். அதனால் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித இடையூறும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு கவுன்சிலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.''
''கவுன்சிலர்கள் அனைவரும் என்னுடன் உறவு முறையில் பழகக் கூடியவர்கள்தான். மேயர் தேர்தலில் தலைமையின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் குறித்து மேல்மட்ட நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள். இதுகுறித்து கருத்து சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
இதே கருத்தை ஆமோதிக்கும் பவுல்ராஜ், "இவ்வளவு நாள்களாக மாநகராட்சியில் நடந்த பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் வரக் கூடிய மாமன்ற கூட்டங்கள் அமையும்" என்கிறார்.
இந்தநிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, மேயர் பதவியைக் கைப்பற்ற ஆளும்கட்சியின் அதிகார மையங்களை நோக்கி கவுன்சிலர்கள் பலரும் முற்றுகையிட்டாலும், வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Facebook/KNNehru
சமாதானம் செய்த கே.என்.நேரு
ரங்கநாயகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை சீனியர் கவுன்சிலர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபத்தை தேர்தலுக்கு முன்னதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தனர்.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் சாந்தி முருகன், "கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். கோடிக்கணக்கில் இழந்துள்ளோம். இதையெல்லாம் எங்களால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என ஆவேசப்பட்டுள்ளார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "நானும் சேர்மனாக இருந்துதான் வந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உள்ளாட்சியில் எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியும். முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எவ்வளவு ஒதுக்குகிறார் என்பதும் தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக விடுபட்டிருந்த பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிப்பது என்பது இயலாத காரியம். நீங்கள் எழுதிக் கொடுப்பதை செய்து கொடுக்கறோம். சற்று பொறுமையாக இருங்கள்" என சமாதானப்படுத்தினார்.
இதன்பிறகும், 'நெல்லையை போன்ற சூழல் வந்துவிடக் கூடாது' என்பதில் தி.மு.க., நிர்வாகிகள் கவனமுடன் இருந்தனர். தேர்தல் முடிவில் மாநகராட்சியின் புதிய மேயராக போட்டியின்றி ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கான சான்றிதழை ஆணையர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.
நெல்லை, கோவை மேயர் தேர்தல் சர்ச்சை குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், "நெல்லையில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக கட்சியின் கவுன்சிலர்கள் சிலர் வாக்களித்தது தவறான விஷயம். அவ்வாறு வாக்களித்தவர்கள் குறித்து குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்படும். அதன் அடிப்படையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அதிருப்திகள் இருந்தாலும் மாமன்றத்தை நடத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



























