You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக அரசியலில் அண்ணாமலை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்?
பாஜகவை விட்டு விலகி, அண்ணாமலை துவக்கியுள்ள அரசியல் இயக்கம் எந்தளவுக்கு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
''ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்." மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சித்துள்ளது.
இது தமிழகத்துக்கான பாஜகவின் பிளான் பி என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அதே கட்சியின் மற்றொரு எம்பியான கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை 6 ஆண்டுகளுக்குப் பின் புரிந்து கொண்டு அண்ணாமலை வெளியே வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
திமுகவும், தவெகவும் பாஜகவுக்கு எதிராக ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், இந்துக்கள் உள்ளிட்ட எல்லா மக்களுக்குமான குரலாக அண்ணாமலை இருப்பதால் அவருக்கான ஆதரவு அதிகரிக்கும் என்பது தமிழக பாஜக நிர்வாகி ஜி.கே.நாகராஜின் நம்பிக்கை.
விஜய் போல அண்ணாமலையால் வெல்ல முடியாது என்பது அரசியல் விமர்சகர் முரளீதரனின் கணிப்பு.
அதேநேரத்தில், மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணனோ, கொள்கைக்காக அண்ணாமலை இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்பால்தான் எடுத்துள்ளார் என்றும் கூறுகிறார் .
பாஜகவை விட்டு அண்ணாமலை விலகியது ஏன்?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து, புதிய அரசியல் இயக்கத்தைத் துவக்குவதாக அறிவித்துள்ளார். இதற்காக 'நாம் தலைவர்கள்' என்ற பெயரில் ஏற்கெனவே அவர் நடத்தி வந்த அமைப்பில் இணையம் வழியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலில் தனது இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்று கூறியுள்ள அண்ணாமலை, புதிய அரசியல் கட்சியை தொடங்குவது எப்போது? அதற்குப் பெயர் என்னவாக இருக்கும்? என்பது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ''தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சி துவங்கியவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் ஒரு வெற்றிடம் இருக்கவே செய்கிறது. அந்த இடத்தை நிரப்பும் நோக்கத்துடன் அண்ணாமலை இந்த இயக்கத்தைத் துவக்கியிருக்கலாம். ஆனால் திமுக. அதிமுக இரு கட்சிகளும் இப்போதும் 45 சதவீத வாக்குகளை வைத்துள்ள நிலையில், அந்த இடத்தைப் பிடிப்பது எளிதான காரியமில்லை.'' என்று தெரிவித்துள்ளார்.
''அது ஒரு கடினமான பயணமாக இருக்கும். ஆனால் பாஜகவுக்கு அவரால் வந்தவர்கள் அவருடன் செல்லவே விரும்புவர். எனக்குத் தெரிய அவர் பாஜகவை பெரியளவில் எதிர்க்க மாட்டார் என்றே நம்புகிறேன். அவருக்கும் தமிழக பாஜக தலைவர்களுக்கும் இடையில்தான் பிரச்னை. ஆனால் இப்போதும் பிரதமர் மோதியுடன் நெருக்கமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.'' என்றும் ராஜ்தீப் சர்தேசாய் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த முடிவு, கொள்கை சார்ந்து எடுக்கப்பட்டதல்ல என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன், இது முழுக்கமுழுக்க அவருடைய வளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்ட முடிவு என்கிறார்.
தற்போதுள்ள நிலையில், அவருடைய கட்சிக்கு தமிழக அரசியலில் இடமிருக்கிறதா என்பதைக் கணிப்பதற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவை என்கிறார் ஆர்கே ராதாகிருஷ்ணன்.
பிபிசியிடம் பேசிய அவர், ''காங்கிரசை எதிர்த்து மூப்பனார் வெளியே வந்து தமாகாவை துவக்கியது கொள்கை சார்ந்த முடிவு. ஆனால் அண்ணாமலை 'ஒன்றரை ஆண்டாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கடந்த டிசம்பர் மாதத்திலேயே நான் விலகுவதைச் சொல்லிவிட்டேன். அதன்பின் அவர்கள் கேட்டுக்கொண்டதால் தேர்தல் வேலை பார்த்தேன்' என்பதிலிருந்தே இது தனிப்பட்ட விவகாரம் என்பது தெளிவாகிறது.'' என்றார்.
தேசியத் தலைமை தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது பற்றிக் கருத்துத் தெரிவித்த ராதாகிருஷ்ணன். ''அவருக்கு இளம் வயதில் பாஜக தேசியத் தலைமை மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தது. எல்.முருகனை நீக்கிவிட்டு அவரை மாநிலத் தலைவராக்கியது. 3 ஆண்டுகள் அவருக்காக நிறைய செலவிட்டது. அதில் அவர் தன்னைத்தானே பெரியளவில் வளர்த்துக் கொண்டார். ஊர்ஊராகச் சென்று பாடுபட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் 2024-ல் தேவையின்றி ஒரு முடிவெடுத்தார்.'' என்றார்.
''களஆய்வு எதுவும் செய்யாமலே அதிமுகவை கழற்றிவிட்டு, பாஜகவை தனியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தார். ஆனால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. பாஜக தலைமை பெரிதும் எதிர்பார்த்த வெற்றி இங்கே கிடைக்காததால்தான் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நம்பி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை உருவானது. அதன்பின்பே தேசியத்தலைமை இவரை நம்புவதை நிறுத்தியது.'' என்கிறார் ஆர்கே.
ஆனால் அண்ணாமலையின் இந்த முடிவு, தமிழ்நாட்டுக்காக பாஜக தேசியத்தலைமை எடுத்துள்ள பிளான் பி என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
''இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடுத்த அரசியல் வியூகம். அதாவது ஆர்எஸ்எஸ், பாஜக பெயர்களின்றி, தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடம்.'' என்று அவர் குறை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பி கார்த்தி சிதம்பரம், ''பாஜகவை தமிழக மக்கள் எப்போதுமே ஏற்பதற்குத் தயாராகயில்லை. அது தமிழக கலாசாரத்துக்கும் நலனுக்கும் எதிரான கட்சி என்பதை ஆறாண்டுகளுக்குப் பின்பே அண்ணாமலை உணர்ந்து கொண்டு, அந்தக் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.'' என்று கூறியுள்ளார்.
''ஆனால் ஓர் அரசியல் இயக்கத்தைத் துவக்கி அதை வெற்றிகரமாக நடத்துவது எளிதான விஷயமில்லை. அது ஒரு நீண்ட நெடிய கடினமான பயணமாகும். இப்போதைக்கு பாஜகவிலிருப்பவர்கள் வேண்டுமானால் அவருடைய இயக்கத்துக்கு அதிகளவில் செல்லலாம். மற்ற கட்சிகளிலிருந்து செல்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. வரும் காலத்தில் அவருடைய அரசியல் செயல்பாடுகளை வைத்து மற்றவர்கள் செல்லலாம்.'' என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் அரசியல் இயக்கம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், ''ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான். பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோதி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை. ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே இதை வெளிப்படுத்துகிறது. அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.'' என்று கூறியுள்ளார்.
அண்ணாமலையின் இயக்கத்துக்கு ஆதரவு எப்படியிருக்கும்?
இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன், பாஜகவினர் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இருக்கிறது என்றார். தமிழகத்தில் பாஜக வாக்குவங்கி 3 சதவீததத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்து மீண்டும் 3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறும் அவர், தமிழகத்தில் நயினார் நாகேந்திரனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
''தமிழகத்தில் பாஜக இப்போதும் ஒரு மறைமுகக் கட்சியாகத்தான் உள்ளது. அக்கட்சியில் எங்குமே ஒரு நேர்மறையான உணர்வை பார்க்க முடியவில்லை. அதனால் மாநில நலனை முன்னிறுத்தும் தேசிய சிந்தனை என்ற இடத்தில் அண்ணாமலை தன்னைப் பொருத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஆனால் இப்போதைய தமிழக அரசியல் களம் வலதுசாரித்துவம், மாநில நலன் ஆகியவற்றை சார்ந்ததாக இல்லை. யாருக்கு ஈர்ப்பு என்பதில்தான் இருக்கிறது.'' என்றார் பத்திரிகையாளர் ஆர்கே.
''விஜய் மக்களிடையே தனக்கு இருந்த ஈர்ப்பால் ஆட்சியைப் பிடித்துள்ளார். குறிப்பாக அரசியலில் இப்போது அதிக ஈடுபாடு காட்டும் ஜென் ஸி தலைமுறை, தங்களுக்கான தலைவராக விஜயை நம்புகிறது. அவர்களில் 30 சதவீதத்தை அண்ணாமலை ஈர்த்தால் போதும். ஏனெனில் அந்த வட்டத்தை திமுக, அதிமுக இரு கட்சிகளாலும் கவர்வது கடினம்.'' என்றார் ராதாகிருஷ்ணன்.
இதற்கு மாற்றுக்கருத்தை முன் வைக்கும் அரசியல் விமர்சகர் முரளீதரன், விஜய்க்கு இருக்கும் தனிப்பட்ட முறையிலான சினிமா கவர்ச்சியால்தான் அவருக்கு ஜென் ஸி தலைமுறை உள்ளிட்ட மக்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது என்கிறார். ஆனால் அண்ணாமலைக்கு அதுபோன்ற ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறும் அவர், அதற்கான காரணங்களையும் விளக்கினார்.
பிபிசியிடம் பேசிய முரளீதரன், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் பாஜக தனித்து நின்று 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. அது நிச்சயமாக அண்ணாமலைக்காக விழுந்த வாக்குகளில்லை. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பிரதமராக மோதியை ஆதரிக்கும் நோக்குடன் நடுநிலையாளர்கள் பலரும் வாக்களித்ததால் கிடைத்த வாக்கு சதவீதம். மற்றபடி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 சதவீதம்தான் கிடைக்கும். அண்ணாமலை தனியாகக் கட்சி துவக்கினாலும் 3 அல்லது 4 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறமுடியும்.'' என்றார்.
''அண்ணாமலையின் நடவடிக்கைகளை அறிந்தே பாஜக தேசியத்தலைமை, அவரின் பதவியைப் பறித்தது. ஒருவரின் கதையை முடிக்க நினைத்தால் பாஜக அதை எளிதாகச் செய்துவிடும். அதனால்தான் அவருக்கு எந்தப் பதவியும் கொடுக்காமல் ஓரம் கட்டியது. மேனகா காந்தி என பலரையும் இப்படித்தான் ஓரம் கட்டியுள்ளது. இந்த காரணங்களால்தான் அண்ணாமலை வெளியே சென்றார்.'' என்றார் முரளீதரன்.
பாஜக நிர்வாகி கருத்து
பிபிசியிடம் பேசிய தமிழக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ், ''இப்போதே அண்ணாமலைக்கு தனிப்பட்ட முறையில் கணிசமான வாக்குவங்கி உள்ளது. தற்போது ஆளும்கட்சியான தவெகவும், திமுகவும் ஒரே மாதிரியாக பாஜகவுக்கு எதிர்ப்பு நிலை எடுக்கும்போது, அதற்கு மாற்றாக அதேநேரத்தில் பாஜக உள்ளிட்ட எல்லாக்கட்சிகளையும் விமர்சிக்கும் நிலையில் அண்ணாமலை மட்டுமே இருக்கிறார். அதனால் அவருக்கு ஆதரவு கிடைக்கும்.'' என்றார்.
''எல்லாக்கட்சிகளும் 20 சதவீத வாக்கு வங்கியுள்ள சிறுபான்மையினரின் வாக்குவங்கியை மட்டுமே குறிவைத்து, அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வருகின்றன. அண்ணாமலை, சிறுபான்மையினருக்காக மட்டுமின்றி பெரும்பான்மை சமூகம் பாதிக்கப்படும்போது, அதற்காகவும் பேசுவார். அப்படியொரு அரசியல் நிலைப்பாட்டை அண்ணாமலை மேற்கொள்ளும்போது அவருக்கான ஆதரவும் அதிகரிக்கும்.'' என்றார் ஜி.கே.நாகராஜ்.
அண்ணாமலையின் வியூகம் அவருக்கு பலன் தருமா?
இணையம் வழியே தனது இயக்கத்தில் இணையலாம் என்று அழைப்பு விடுத்துள்ள அண்ணாமலை, இன்ஸ்டாகிராம் வழியாக இதுகுறித்த காணொளியை வெளியிட்டதற்கு புதிய தலைமுறையினரே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வியூகம் தேர்தல் அரசியலில் அண்ணாமலைக்கு பலன் தருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேர்தல் வியூக வகுப்பாளரான லியோ ரீகன், ''அவருடைய பலம், ஊடகங்களைக் கையாளும் திறன். அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தினாலும் எதற்கும் அவரிடம் பதில் இருக்கும். மக்கள் அவரை எளிதில் அணுகலாம். இது இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது இல்லை என்பது பெரும் பலவீனம்.'' என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிமுகவை ஆதரித்த ஒரு சமுதாயம், படிப்பறிவுடன், மொழியறிவும். நிர்வாகத் திறனும் கொண்டவர் என்ற முறையில் அண்ணாமலையை ஆதரிக்கும் வாய்ப்பும் அதிகமுள்ளது. பாஜக என்பதற்காக அவரை ஒதுக்கிய பிற சமுதாயத்தின் தொழில் முனைவோரும் அவரை ஆதரிக்கலாம். அதேபோன்று நாங்கள் களத்தில் விசாரித்த வரையில் ஜென் ஸி தரப்பிலும் அவருக்கு ஆதரவு உள்ளது. அவருடைய அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகளைப் பொருத்து, இந்த ஆதரவு மேலும் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு