காணொளி: டிரம்ப் - புதின் சந்திப்பு இந்தியாவுக்கும் முக்கியம் ஏன்?
ஒட்டுமொத்த உலக நாடுகளும், அலாஸ்காவில் நடைபெறவுள்ள ஒரு சந்திப்பின் முடிவு எப்படி இருக்கும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
ஆம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் 15ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவருவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அதேநேரம், இந்த சந்திப்பு இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அது ஏன் என்பதற்கான பதிலை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இதில் அடங்கும்.
இதன் மூலம் அமெரிக்காவின் அதிக வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாமல், கூடுதலாக அமல்படுத்தப்பட்ட 25% வரியும் அமலுக்கு வந்தால் ஆசியாவில் அமெரிக்காவால் அதிகம் வரி விதிக்கப்பட்ட வர்த்தக கூட்டாளி நாடாக இந்தியா இருக்கும்.
இந்தியா மீதான இந்த நடவடிக்கை ரஷ்ய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என டிரம்ப் கூறியிருந்தார்.
ஜப்பானிய நிதிசார் நிறுவனமான நோமுரா (NOMURA), "இந்த வரி அமல்படுத்தப்பட்டால், அது ஒரு வர்த்தக தடை போல இருக்கும். வரியால் பாதிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி உடனடியாக நிறுத்தப்படலாம் என்று கூறி உள்ளது.
ஏனெனில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. இந்தியா தனது பொருட்களில் 18 சதவீதத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதம்.
இந்த 50 சதவீத வரி இந்தியாவின் GDP -ல் 0.2 முதல் 0.4 சதவீதம் வரை சரிவை ஏற்படுத்தக்கூடும். இது இந்த ஆண்டு, பொருளாதார வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கும் கீழே தள்ளலாம்.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சார்ந்த துறைகளான தோல், ஜவுளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் போன்றவற்றுக்கான அமெரிக்க ஆர்டர்கள் குறையத் தொடங்கியுள்ளன. ஏனெனில் வரிகள் காரணமாக, இந்தியப் பொருட்கள் அமெரிக்கர்களுக்கு விலை உயர்ந்தவையாக மாறிவிட்டன.
மறுபுறம் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு ஏற்பட்ட சோதனையாகவும் இது பார்க்கப்படுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவுடனான தனது உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவுக்கும் இந்தியா தேவை.
அமெரிக்கா இந்தியாவிடமிருந்து விலகிச் செல்ல முயன்றால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக கூட்டணியை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆனால், சர்வதேச விவகாரங்களில் நிபுணரும், இந்தியா-அமெரிக்க உறவுகளை கூர்ந்து கவனிப்பவருமான பிரேமானந்த் மிஸ்ரா, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறை மிகவும் தனிப்பட்ட விஷயமாகத் தெரிவதாக கூறுகிறார்.
"அதிபர் டிரம்ப் இந்தியாவை அவமானப்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது. பிரச்னை எண்ணெய் வாங்குவது பற்றியது அல்ல. சீனா, இந்தியாவை விட ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது, ஆனால் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதிக்கவில்லை. இதற்காக அவர் 90 நாள் காலக்கெடுவை வழங்கியுள்ளார். அமெரிக்கா இந்தியாவுடனான வியூக சமன்பாட்டை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. எனவே, வரி விதிப்பு ஒரு சாக்குப்போக்கு தான். அமெரிக்கா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க விரும்புவதால், அது பாகிஸ்தானை ஆதரிக்கிறது" என்று பிரேமானந்த் நம்புகிறார்.
எனவே டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவுகள் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகளைத் தீர்மானிக்காது என்று பிரேமானந்த் கூறுகிறார்.
மறுபுறம் ரஷ்யா இந்தியா இடையே பாதுகாப்பு உறவுகளும் முக்கியமானது. வரலாற்று ரீதியாக ரஷ்யாவிடம் இருந்து அதிக ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்காலத்தில் இந்தியாவை தண்டித்தால், அது சிக்கல்களை உருவாக்கும் என்று இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகளை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது இந்தியா-அமெரிக்க உறவை மேலும் மோசமடையச் செய்யும். எனவே, டிரம்ப் மற்றும் புதின் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சூழ்நிலை ஏற்படக்கூடாது என்றும் இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் புவிசார் அரசியல் தேவைகளுக்கு, புடினுக்கும் டிரம்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் வெற்றி மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகள், வரிகள் தொடர்பான விவகாரத்தில் சற்று கசப்பாகத் தோன்றினாலும், இது ஒரு பெரிய விஷயமல்ல என்கிறார் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ரேஷ்மி காசி.
"இதை ஒரு வர்த்தக ஒப்பந்தம் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் அமெரிக்காவுடனான தனது உறவைக் கெடுக்காமல் இருப்பது இந்தியாவுக்கு முக்கியம். இது இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான உத்தியாக இருக்கும். டிரம்ப் மற்றும் புதின் இடையேயான வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் பொருளாதார வலிமைக்கு மட்டுமல்ல, வலுவான புவிசார் அரசியல் உத்திக்கும் முக்கியம்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளில் இந்தியா சமநிலையைப் பேண முடியும், அது பல வகைகளில் பயனளிக்கும் என்கிறார் ரேஷ்மி காசி
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



