You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியது - மாணவர்கள் என்ன ஆயினர்?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று (ஜூலை 8) காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில், வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவனும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் ஏற்கனவே உயிரிழந்தனர்.
பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி 'ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல' என்றார்.
இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தியதால், கேட் கீப்பர் கேட்டைத் திறந்தார். ரயில்வே ரயில் இயக்கங்களின் பாதுகாப்பு விதிகளின்படி அவர் கேட்டைத் திறந்திருக்கக் கூடாது. கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது. ரயில்வே மருத்துவர்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு