'கேக்குதா ஸ்டாலின் அங்கிள்?' - மதுரை மாநாட்டில் திமுகவிற்கு சவால் விட்ட விஜய்
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வந்த, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் அக் கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சு, பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது.
விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போலவே, இந்த மாநாட்டிலும் விஜய் ரேம்ப் வாக் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் ரேம்ப் வாக் செய்யும்போது தொண்டர்கள் சிலர் தடுப்பை மீறி அதில் ஏறி விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிக்க முயன்றார்கள்.
நிர்வாகிகள் சிலர் பேசிய பிறகு கடைசியாக பேசிய விஜய், "சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது'' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
தனது பேச்சில் விஜய்காந்த் பற்றியும் அவர் குறிப்பிட்டார். "என்னுடைய அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடன் பழக நிறைய நேரம் கிடைத்தது. அவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். அவரை மறக்க முடியாது' என்றார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து அடிமைக் கூட்டணியில் சேர்ந்திருப்பதாக அதிமுகவை விமர்சித்தார்.
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடாததை விமர்சித்த விஜய், கச்சத்தீவு, நீட் விவகாரங்கள் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினார்.
எம்ஜிஆரின் பாடலை மேடையில் பாடிய விஜய், அதிமுக - பாஜக கூட்டணியை பொருந்தாத கூட்டணி என விமர்சித்தார்.
"எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது? எனவும் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு காஞ்சிபுரத்தில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பதிலளித்து பேசினார்.
பாஜகவோடு திமுக மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பதாகவும் விஜய் குற்றம் சாட்டினார்.
விரைவில் மக்களை சந்திக்கப் போவதாகக் கூறிய விஜய், சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளாக வரத் தகுதியற்றவர்கள் என்ற விமர்சனங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி தனது பேச்சை நிறைவு செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



