சுமார் ரூ.15 லட்சம் கோடி வருவாய் எப்படி வந்தது? ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் விளக்கம்

செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ரூ.15.15 லட்சம் கோடி வருவாய்

பட மூலாதாரம், Imran Qureshi

படக்குறிப்பு, செபி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 2020-21 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளுக்கு இடையில் 15.15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மிகைப்படுத்திக் காட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ராஜேஷ் மேத்தா அதிர்ச்சியில் இருக்கிறார். செபி அவரது நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸிற்கு ஒரு இடைக்கால உத்தரவை அனுப்பியுள்ளது.

அதில், வருவாய் ஏன் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது மற்றும் லாபம் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று கேட்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏன் இவ்வளவு சலசலப்பு ஏற்படுகிறது என்று மேத்தாவிற்குப் புரியவில்லை.

ஆனால் மேத்தா கோபமாகவும் இருக்கிறார். காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அவரது நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை ஒரு சதவீதத்தில் இருந்து 10.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்குக் பிறகுதான் எல்லாரும் அவர் மீது பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய மேத்தா, "எல்லாரும் எல்ஐசி-எல்ஐசி என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் பங்குகளை வாங்குமாறு அவர்களை கூறவில்லை. அவர்கள் கடந்த 10, 15 அல்லது 20 ஆண்டுகளில் பொதுச் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியுள்ளனர். நிறுவனமோ அல்லது நிறுவனரோ அவர்களுக்குப் பங்குகளை வழங்கவில்லை" என்கிறார்.

"எங்கள் பங்குகளை எல்ஐசி அதிக விலைக்கு விற்றும் இருக்கிறது. அதற்கு நல்ல லாபமும் கிடைத்துள்ளது. எல்ஐசிக்குத் தெரியும், எங்களுக்குத் தெரியும், ஏன் பொதுமக்களுக்குக் கூடத் தெரியும் இந்த நிறுவனம் மிகவும் வலுவானது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் எல்ஐசி முதலீடு செய்துள்ளது." என்றார் அவர்.

செபி பார்வையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பட்டது ஏன்?

புதன்கிழமை செபி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் காரணமாக, தங்கம் சுத்திகரிப்பு மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், 2021 மற்றும் 2025-க்கு இடையில் நிறுவனம் புள்ளிவிவரங்களை தவறாக கையாண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழியில் மொத்த வருவாய் 15 லட்சம் கோடி ரூபாயாகக் காட்டப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக சுவிட்சர்லாந்தின் துணை நிறுவனமான வால்காம்பியின் (Valcambi) வர்த்தகம் காரணமாக இருந்தது. வால்காம்பி தங்கம் மற்றும் வெள்ளியின் கச்சா உலோகத்தை வாங்கி அதிலிருந்து தூய தங்கத்தைப் பிரித்தெடுக்கிறது. அப்படிச் செய்த பிறகு, அதை உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் புல்லியன் டீலர்களுக்கு விற்பனை செய்கிறது

செபி இந்த விசாரணையை ஒரு பங்குதாரரின் புகாரின் பேரில் தொடங்கியது. அந்தப் புகாரில் நிறுவனத்தின் நிதிப் பதிவுகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 109 பக்க உத்தரவில், நிறுவனம் மொத்த வருவாயில் 99.8 சதவீதத்தைத் தவறான முறையில் காட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆடிட்டர்களுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கத்தின் உரிமைக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேத்தா கூறுகையில், "அந்தச் சுரங்கம் எங்களின் சிங்கப்பூர் துணை நிறுவனத்திற்குச் சொந்தமானது, அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்." என்றார்.

செபி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே விசாரணையைத் தொடங்கிவிட்டதாக மேத்தா தெரிவித்தார்.

"செபி எங்களிடம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம். செபி எங்களின் பதில்களில் திருப்தி அடைந்துள்ளது என்று நான் நினைத்தேன். கடந்த மூன்று மாதங்களாக எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. புதன்கிழமை திடீரென இணையதளத்தில் உத்தரவு வெளியிடப்பட்டது, இது எங்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது."

ரூ. 15 லட்சம் கோடி வருவாய் எப்படி வந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இது ஐந்து ஆண்டுகளின் வருவாய். இது எங்கள் வருமானம் அல்ல. இது எங்கள் துணை நிறுவனத்தின் வர்த்தகம். இந்த வருவாய் தங்கத்தை விற்பனை செய்ததன் மூலம் வந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது?" என மேத்தா விளக்குகிறார், "

அவர் கூறுகையில், "சுவிட்சர்லாந்தில் முழு வரியும் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதை முறைகேடு என்று முத்திரை குத்திவிட்டார்கள், இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது."

தங்கத்தின் விலை எப்போதும் மிக அதிகமாக இருப்பதால், தங்க வர்த்தகம் மிகப் பெரிய அளவில் நடப்பதாகவும், இதன் காரணமாகவே இந்தத் தொழிலின் மொத்த வர்த்தகம் மிகப் பெரிதாகத் தோன்றுவதாகவும், ஆனால் இதனால் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.

தங்கத்தைச் சுத்திகரித்து விற்கும் தொழிலில் விற்பனைத் தொகை மிகப் பெரியதாக இருக்கும், ஆனால் நமக்கான லாப வரம்பு குறைவாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

"இதில் செபியின் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு சர்வதேச தரம் உள்ளது. இந்தியாவில் தங்க சுத்திகரிப்பு நிலையம் (Gold Refinery) எதுவும் இல்லை. சுத்திகரிப்பு நிலையத்தில் வருவாய் அதிகமாகவும் லாபம் குறைவாகவும் இருக்கும் என்பது ஒருவேளை செபிக்குத் தெரியாமல் இருக்கலாம். செபி எங்களிடம் கூடுதல் ஆவணங்களைக் கேட்டுள்ளது மற்றும் இந்த விஷயம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றுவதாகத் தனது கடிதத்தில் எழுதியுள்ளது." என அவர் கூறுகிறார்,

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மீது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆர்வம் காட்டுகிறதா?

செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ரூ.15.15 லட்சம் கோடி வருவாய்

பட மூலாதாரம், Abeer Khan/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, மும்பையில் செபியின் தலைமையகம் அமைந்துள்ளது. (கோப்புப் படம்)

"ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஏற்கனவே 400 முதல் 450 ஜிபி (GB) தரவை வழங்கியுள்ளது. அதனுடன் செபி மற்றும் தடயவியல் தணிக்கையாளர்களுக்கு 70 முதல் 80 ஆயிரம் ஆவணங்களையும் வழங்கியுள்ளது." என மேத்தா கூறுகிறார்.

"வால்காம்பி 100 ரூபாய்க்குத் தங்கம் வாங்கி சுத்திகரிப்புக்குப் பிறகு 101 ரூபாய்க்கு விற்றால், தணிக்கையில் வருவாய் 101 ரூபாயாகக் காட்டும், ஆனால் இதில் நிகர சேமிப்பு ஒரு ரூபாய் மட்டுமே இருக்கும்." என அவர் கூறுகிறார்,

செபியின் இந்த இடைக்கால உத்தரவு உண்மையில் கேள்விகளின் பட்டியல் போன்றது, அதில் சில விளக்கங்கள் மற்றும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ஆனால், உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாகப் பெரும் பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பியது மேத்தாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியென்றால் ஏதேனும் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் உங்கள் நிறுவனத்தின் மீது ஆர்வம் காட்டுகிறதா?

"உண்மையைச் சொல்வதானால், இந்தச் சூழ்நிலையில் நண்பன் யார், எதிரி யார் என்று அடையாளம் காண்பது கடினமாகிவிட்டது. இதையெல்லாம் பரப்புபவருக்குத் தான் பொய் சொல்கிறோம் என்று தெரியும். இந்த விஷயங்கள் உண்மையாக இருந்தால், நான் உங்கள் முன்னால் அமர்ந்திருக்க மாட்டேன்." என மேத்தா கூறுகிறார்.

செபிக்கு பதிலளிக்க நிறுவனம் தயாராகத் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

"எங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கிடைத்துள்ளது, ஆனால் நாங்கள் 10 முதல் 15 நாட்களில் பதிலளிப்போம். முக்கியமாக 8 முதல் 10 கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும்." என மேத்தா கூறுகிறார்,

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு