இஸ்ரேல் தாக்குதலை பிரதமர் மோதி கண்டித்தாரா? இரான் அதிபருடன் பேசியது என்ன?

இஸ்ரேல் தாக்குதலை பிரதமர் மோதி கண்டித்தாரா? இரான் அதிபருடன் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா தனது முழு திறனையும் பயன்படுத்தி காஸாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரான் கூறியுள்ளது. மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்திய தேசத்தின் போராட்ட வரலாற்றையும் அணிசேரா இயக்கத்தின் உருவாக்கத்தில் இந்தியா ஆற்றிய பங்கு குறித்தும் இரான் அதிபர் பிரதமர் மோதியிடம் பேசியிருக்கிறார்.

இந்தச் சூழலில், இரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி இந்திய பிரதமர் நரேந்திர மோதியை நவம்பர் 6ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது உடனடி போர் நிறுத்தத்திற்காகவும் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு உலகளாவிய கூட்டு முயற்சிக்கும் இரான் ஆதரவாக இருக்கும் என்று இப்ராஹிம் ரைஸி மோதியுடம் தெரிவித்ததாக இரான் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காஸாவில் நடைபெறும் அட்டூழியங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை கோபமடையச் செய்திருப்பதாகவும் படுகொலைகளை தொடர்ந்தால் அது பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இப்ராஹிம் ரைஸி கூறியிருக்கிறார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள பாலத்தீன எதிர்ப்புக்குழுக்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்று தனது தொலைபேசி உரையாடலின்போது மோதியிடம் இப்ராஹிம் ரைஸி கூறியதாகவும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக பாலத்தீன மக்கள் நடத்திவரும் போராட்டத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் அந்நாட்டு அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடலின்போது மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்திய தேசத்தின் போராட்ட வரலாற்றையும் அணி சேரா இயக்கத்தின் உருவாக்கத்தில் இந்தியா ஆற்றிய பங்கையும் இப்ராஹிம் ரைஸி குறிப்பிட்டு பேசி , காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றங்களை தனது முழு திறனையும் பயன்படுத்தி இந்தியா முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் அட்டூழியங்களைக் நரேந்திர மோதி கண்டித்ததாகவும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இருவரும் அழைப்பு விடுப்பதாகவும் இரான் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தொலைபேசி உரையாடலின்போது இஸ்ரேலை மோதி கண்டித்ததாகவும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்திய அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இடம்பெறவில்லை.

"பிரதமர் மோதி மற்றும் இரான் அதிபர் இன்று தொலைபேசியில் உரையாடினர். இரு நாட்டு தலைவர்களும் மேற்கு ஆசிய பிராந்தியம் மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் நிலவும் சிக்கலான சூழல் குறித்து தமது பார்வைகளை பகிர்ந்துகொண்டனர்

பயங்கரவாத நிகழ்வுகள், வன்முறை மற்றும் பொதுமக்களை உயிரிழப்பது தொடர்பாக பிரதமர் மோதி தனது ஆழந்த கவலைகளைவெளிப்படுத்தியுள்ளார் . இஸ்ரேல்-பாலத்தீனம் இடையிலான பிரச்னையில் இந்தியாவின் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டை நரேந்திர மோதி மீண்டும் எடுத்துரைத்தார். 

இரு தலைவரால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு பிரச்னை பெரிதாகாமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும். மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்"  என இஸ்ரேல் காஸா விவகாரம் தொடர்பாக இருவரும் என்ன பேசினர் என்பது குறித்து நவம்பர் ஆறாம் தேதி இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)