சிறுவனை கொன்று உடலை சூட்கேஸில் வைத்து பேருந்தில் விட்ட பெண் - முன்கூட்டியே விடுதலை

பூவரசி
படக்குறிப்பு, பூவரசி
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் 3 வயது சிறுவன் ஆதித்யா கொலை வழக்கும் ஒன்று. சிறுவனை கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து பேருந்து ஒன்றில் வைத்துவிட்டுச் சென்றதாக பூவரசி என்ற பெண் கைது செய்யப்பட்டார். சிறுவனின் உடல் புதுச்சேரி - நாகப்பட்டினம் பேருந்தில், சூட்கேஸில் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த பூவரசி, சென்னை உயர் நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை முன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சூட்கேஸில் 3 வயது சிறுவன் சடலம்

2010 ஜூலை மாதம். 'தங்களின் மூன்று வயது மகனைக் காணவில்லை' என, சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி ஜெயக்குமார் என்பவர் புகார் மனு கொடுத்தார். தன்னுடன் வேலை பார்க்கும் பூவரசி என்ற பெண்ணுடன் சிறுவனை அனுப்பி வைத்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அவரோ, ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள தேவாலயத்துக்கு சிறுவன் ஆதித்யாவை அழைத்துச் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் சிறுவனை காரில் கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

சிறுவனின் தந்தையோ, 'தன் மகனுக்கு பூவரசியால் ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்கலாம்' என, போலீசாரிடம் தெரிவித்தார். விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் சென்ற அரசுப் பேருந்தில் சூட்கேஸ் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அதைத் திறந்து பார்த்தபோது, கொல்லப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் ஒன்று கிடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே, எஸ்பிளனேடு போலீசாரும் சிறுவனின் தந்தையும் நாகப்பட்டினம் விரைந்தனர். 'கொல்லப்பட்டது தனது மகன் தான்' என்பதை ஜெயக்குமார் உறுதிப்படுத்தினார். இதையடுத்து, பூவரசியிடம் நடந்த போலீஸ் விசாரணையில், சிறுவன் ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பூவரசி விடுதலையானது எப்படி

பட மூலாதாரம், Tamilnadu Police Dept

படக்குறிப்பு, பூவரசி

காவல்துறை விசாரணையில் தெரியவந்தவை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தனியார் காப்பீடு நிறுவனத்தில் சிறுவனின் தந்தை ஜெயக்குமார் பணியாற்றிய போது, தன்னுடன் வேலை பார்த்த ஆரணியை சேர்ந்த பூவரசியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பூவரசியின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க தீவிரம் காட்டியுள்ளனர்.

இதனை ஏற்காத பூவரசி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரை வற்புறுத்தியுள்ளார். அவரோ, திருமணம் செய்ய மறுத்து, 'உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வதே நல்லது' என்று கூறியதால், அவர் மீது பூவரசி கடும் கோபத்தில் இருந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்பின்னர், 2010 ஜூலை மாதம் 17ம் தேதி சிறுவன் ஆதித்யாவை தன்னுடன் கடைக்கு அழைத்துச் செல்வதாக பூவரசி கூறியிருக்கிறார். ஏற்கெனவே இதுபோன்று பலமுறை அழைத்துச் சென்றுள்ளதால், சிறுவனின் பெற்றோருக்கு சந்தேகம் எழவில்லை.

இதையடுத்து, பூந்தமல்லியில் தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். இதன்பின், பெரிய சூட்கேஸ் ஒன்றில் சிறுவனின் உடலை அடைத்து, ஆட்டோ மூலம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்தில் புதுச்சேரிக்கு சூட்கேஸை கொண்டு சென்றிருக்கிறார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், அங்கு நின்றிருந்த நாகப்பட்டினம் பேருந்தில் சூட்கேஸை வைத்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாக, காவல்துறை விசாரணையில் பூவரசி தெரிவித்துள்ளார்.

புலனாய்வில் குறைபாடா?

புலனாய்வில் குறைபாடா?

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, பூவரசி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவரசி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சிறுவன் கொலை வழக்கில் போலீசாரின் புலனாய்வில் குறைபாடுகள் இருந்தாலும் வழக்கின் போக்கில் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானது. அவரது பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கிறோம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டதும், புழல் பெண்கள் சிறையில் பூவரசி அடைக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு பரோலில் வெளியில் வந்த பூவரசி, மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவடைந்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான உத்தரவை, கடந்த 2021 நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்தது.

அந்தவகையில், தன் மனைவி பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு மணிகண்டன் கோரிக்கை வைத்தார். ஆனால், 'கொடும் குற்றத்தில் ஈடுபட்டதால், முன்விடுதலைக்கு வாய்ப்பில்லை' எனக் கூறி அரசுத் தரப்பு நிராகரித்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆக.,2) தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, 'சிறையில் பூவரசியின் நடத்தையை அறிந்து கொள்ள, சிறை நன்னடத்தை அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டது. அவரின் விடுதலைக்கு சாதகமான அறிக்கை வந்துள்ளது. அவரை முன்கூட்டியே விடுதலை செய்வதால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. சமூகத்தில் எதிர்மறைவு விளைவுகள் ஏற்படாது' எனக் கூறி, இரண்டு நாள்களில் பூவரசியை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு?

கோகுல கிருஷ்ணன்
படக்குறிப்பு, கோகுல கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்

இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் அரசுத் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோகுல கிருஷ்ணன்,

"10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்தவர்களை முன் விடுதலை செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு. கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களை முன் விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து, சில முன்னுதாரண வழக்குகள் உள்ளன.

அந்த வகையில், பூவரசியின் முன் விடுதலை குறித்து, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்" என்கிறார்.

மேலும், "சிறுவனை கொலை செய்த பிறகு சூட்கேஸில் உடலை எடுத்துச் சென்று பூவரசி அப்புறப்படுத்தியுள்ளார். அது கொடூரமான கொலையாக இருப்பதால் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என அரசுத் தரப்பு நிராகரித்தது. ஆனால், அவரது வயதைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்" என்கிறார், கோகுல கிருஷ்ணன்.

சிறை விதிகளை மீறவில்லை

மனோகரன்
படக்குறிப்பு, பூவரசியின் வழக்கறிஞர் எஸ்.மனோகரன்

"தண்டனையின் நோக்கம் என்பது, குற்றவாளிகளை சீர்திருத்துவது தான். புழல் பெண்கள் சிறையில் 14 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பூவரசியின் மீது சிறை விதிகளை மீறியதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை" என்கிறார், அவரது வழக்கறிஞர் எஸ்.மனோகரன்.

தொடர்ந்து பேசிய அவர், "முதுகலையில் பட்டம் பெற்றிருந்ததால், சிறையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் பெண் கைதிகளுக்கு பூவரசி வகுப்பு எடுத்து வந்துள்ளார். சட்டம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளையும் அவர் நிறைவு செய்திருக்கிறார்.

சிறை நிர்வாகத்துக்கு மிகவும் உதவியாக இருந்து வந்துள்ளார். அப்படியானால் முழுமையாக தன்னை மாற்றிக் கொண்டுவிட்டார் என்று தான் பொருள். அரசாணையின்படி, முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு அவர் தகுதி உடையவராக இருக்கிறார்.” என்று கூறுகிறார்.

முன்விடுதலையை கணக்கெடுப்பதற்கு கடந்த 3 ஆண்டுகளில் அவரின் நன்னடத்தை எப்படியிருந்தது என்பதை ஆராய்ந்து விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.மனோகரன்.

“நன்னடத்தை அதிகாரி சான்று கொடுத்தாலும், கொடூரமான கொலையை செய்துள்ளதாக, அரசுத் தரப்பு தெரிவித்தது. அதேநேரம், அரசாணையின்படி முன்விடுதலை செல்லாது என்ற காரணத்தை அரசுத் தரப்பு முன்வைக்கவில்லை. இதன் காரணமாக, பூவரசி விடுதலை செய்யப்பட்டார்" என்கிறார், எஸ்.மனோகரன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)