மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் கவலைப்படவே இல்லையா? ராகுல் காந்தி கூறியது என்ன?

ராகுல் காந்தி  மோதி மணிப்பூர்

பட மூலாதாரம், congress

படக்குறிப்பு, நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோதி நேற்று (ஆகஸ்ட் 10) ஆற்றிய உரையை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்துள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூர் மாநில நிலவரத்தை முன்வைத்து, பிரதமர் மோதி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் எம்.பி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் உரையாற்றினர்.

ஆளும் பாஜக தரப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி, தமது தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குப் பதிலளித்து, நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட 10) உரையாற்றினார்.

சுமார் இரண்டு மணிநேரம் அவர் ஆற்றிய நீண்ட உரையை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், SANSAD TV

"நாடாளுமன்றத்தில் 2 மணிநேரத்துக்கு பிரதமர் பேசினார், சிரித்தார், நகைச்சுவை செய்தார். மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என்பதை பிரதமர் மறந்துவிட்டார் போலும்.

பெண்களும் குழந்தைகளும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்; மக்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரதமர் வெட்கமே இல்லாமல் அவையில் சிரித்துக்கொண்டு இருக்கிறார்," என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரம் ராகுல் காந்தியை பற்றியதோ காங்கிரஸை பற்றியதோ இல்லை, இது நம் தேசத்தைப் பற்றியது எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஒரு மாநிலம் அழிந்துவிட்டது எனவும் அதற்குக் காரணம் பாஜகவின் அரசியல் எனவும் குற்றம் சாட்டினார்.

அதனால்தான் தன் உரையில், ‘மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டாள்’ என்று தெரிவித்ததாகவும் என ராகுல் செய்தியாளர்களிடம் கூறினார்.

ராகுல் காந்தி  மோதி மணிப்பூர்

பட மூலாதாரம், congress

படக்குறிப்பு, ‘பாரத மாதா’ எனும் வார்த்தை முதன்முறையாக, நாடாளுமன்ற அவைக்குறிப்பில் நீக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ‘பாரத மாதா’

மேலும் அவர், "பாரத மாதா’ எனும் வார்த்தை முதன்முறையாக நாடாளுமன்ற அவைக்குறிப்பில் நீக்கப்பட்டுள்ளது. இது அந்த வார்த்தைக்கு செய்யப்பட்ட அவமரியாதை.

தற்போது அந்த வார்த்தையைக்கூட இந்திய மக்களால் சொல்ல முடியாது. நாடாளுமன்றத்தில் பாரத மாதா என்று சொல்ல முடியாது," என்றார்.

"மணிப்பூரில் இந்தியா கொலை செய்யப்பட்டுவிட்டது என ஏன் கூறினேன் என்று சொல்ல விரும்புகிறேன். மணிப்பூர் ஒரு மாநிலமாக தற்போது இல்லை. ஒரு மாநிலத்துக்கு கட்டுப்பாடும் அதிகாரமும் தேவை. மணிப்பூரில் அது காணாமல் போயுள்ளது," என்று தெரிவித்தார்.

இதை அங்கு தான் நேரில் பார்த்ததாகவும் மணிப்பூரில் மெய்தேய் பகுதிக்குச் சென்றபோது, ‘உங்களை நேசிக்கிறோம். ஆனால், உங்கள் பாதுகாப்புக் குழுவில் குகி சமூகத்தை சேர்ந்தவர் இருந்தால், எங்கள் பகுதிக்குள் வர வேண்டாம்’ என்று சொன்னார்கள். குகி பகுதிக்கு சென்றபோது அவர்களும் இதேதான் சொன்னார்கள்.

மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று மோதி விரும்புகிறார் - ராகுல்

மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால் உள்ளே வர வேண்டாம் என்றார்கள். முன்பு அங்கு சென்றபோது இதுபோல் பார்த்ததே இல்லை என்று மத்திய பாதுகாப்புப் படையினர் கூறினர்.

அதனால்தான் பாஜகவால் மணிப்பூர் கொல்லப்பட்டு விட்டது என்றும், அங்கு இந்தியா என்ற சித்தாந்தம் பாஜக கொள்கையால் கொல்லப்பட்டு விட்டது என்றும் கூறினேன்," என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

"நான் மிகைப்படுத்தி கூறவில்லை, உண்மையை கூறுகிறேன். மணிப்பூரில் நடந்துவரும் அறிவற்ற செயலை இந்திய ராணுவத்தால் இரண்டு நாட்களில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.

ஆனால் சண்டையை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மறுக்கிறார். மணிப்பூர் எரிய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். மணிப்பூரை எரிய அனுமதிக்கிறார். பிரதமர் மணிப்பூர் செல்லாமல் இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. அவை என்ன என்று எனக்கு தெரியும். அவற்றை வெளிப்படையாக கூற விரும்பவில்லை."

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், SANSAD TV

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நாடாளுமன்றத்தில் 2 மணி நேரத்துக்கு பிரதமர் பேசினார், சிரித்தார், நகைச்சுவை செய்தார். மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என்பதை பிரதமர் மறந்துவிட்டார் போலும். அங்கு பெண்களும் குழந்தைகளும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரதமர் வெட்கமே இல்லாமல் அவையில் சிரித்துக்கொண்டு இருக்கிறார்," என்று கடுமையாக விமர்சித்தார்.

"பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கு தெளிவான காரணங்கள் உள்ளன. அதனால்தான் அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று விரும்பினோம். மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், பிரதமர் என்ன செய்தார், மணிப்பூரை ஏளனம் செய்தார், மாநிலத்தின் பெண்களை ஏளனம் செய்தார். பெண்களின் நிலை குறித்து சிரித்தார்.

தான் யார் என்பதை பிரதமர் புரிந்துகொள்ளவில்லை. அவர் நம்முடைய பிரதிநிதி, என்னுடைய பிரதிநிதி. நம் எல்லோருடைய பிரதிநிதி. நாடாளுமன்றத்தில் இரண்டு மணி நேரம் காங்கிரஸ் குறித்து, எதிர்க்கட்சிகள் குறித்து பேசுவது, பெயரை ஏளனம் செய்வது பிரதமர் என்ற பதவிக்கு அழகல்ல.

காங்கிரஸை சேர்ந்த பிரதமர்களை பார்த்துள்ளேன், பாஜகவை சேர்ந்த பிரதமரையும் பார்த்துள்ளேன். வாஜ்பேயி, தேவகௌடா போன்றோர் இப்படிச் செய்தது இல்லை. பிரதமர் என்றால் என்ன என்பது குறித்து நரேந்திர மோதிக்கு உள்ள தவறுதலான புரிதல்தான் இது," என்றும் தெரிவித்தார் ராகுல் காந்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: